சாந்தனை இலங்கைக்கு அனுப்புவது சாத்தியமா? இலங்கை, இந்திய தரப்புக்களுடன் சிறீதரன் முக்கிய பேச்சு

சாந்தனை இலங்கைக்கு அனுப்புவது சாத்தியமா? இலங்கை, இந்திய தரப்புக்களுடன் சிறீதரன் முக்கிய பேச்சுஇலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்தாரென இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விடயம் தொடர்பில் நேற்று வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியுடன் பேசினேன்.

சாந்தன் இலங்கைக்கு திரும்பிவருவதற்கு வெளிவிவகார அமைச்சால் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைத் தூதரான வெங்கட் என்பவருடன் இது குறித்துப்பேசப்பட் டுள்ளது. அதிகாரிகள் கேட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இது சாத்தியப்படும்.

மேலும், சென்னையில் உள்ள தூதரகத்தின் துணை தூதுவருடனும் நான் தொலைபேசியில் பேசினேன். பாதுகாப்பு அமைச்சின் சில உறுதிப்படுத்தலுக்காக காத்திருப்பதாகவும் உறுதிப்படுத்தல் கிடைத்தவுடன் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் என்று சிறீதரன் எம். பி. கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் விடுதலையான சாந்தன், முருகன், உள்ளிட்ட இலங்கையர்கள் நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். நோய் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள சாந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, சாந்தன் இலங்கை வர உதவுமாறு அவரின் தாயார் தொடர்ச்சியாக பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.