சர்வதேச நீதிக்காய் கண்ணீரில் தோயும் தேசம் : கரிகாலன்

மனித உரிமைகளும் மனித மாண்புகளும் பாரதூரமாக மீறப்பட்ட வரலாற்றைக் கொண்ட சமூகங்களில், மனிதப் புதைகுழிகள் என்பவை வெறும் எலும்புக்கூடுகளின் புதைவிடங்கள் அல்ல.
அவை அதிகார அடக்குமுறைக்கும், சொல்லொ ணாத் துயரங்களுக்கும் ஊமைச் சாட்சிகளாக நிற்கும் வரலாற்றுத் தடயங்களாகும். சர்வதேச ரீதியில் பொஸ்னியா, ருவாண்டா, குவாத்தமாலா மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இனவழிப்புகள் இடம்பெற்றள.
இதன்போது நிகழ்ந்தேறிய  போர்க் குற்றங்களால் ஆயிரக்கணக்கான மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டு மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டமை உலகறிந்த வரலாறு.  ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள ‘காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்’ நெருங்கி வரும் இவ்வேளையில், இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும், மனிதப் புதைகுழிகள் வழியே வெளிப்பட்டு வரும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளும் உலகத்தின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள் ளன.
குறிப்பாக, யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அங்கு மூன்றாம் கட்ட அகழ்வுகளின் போது 540க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும், மனித உரிமை ஆர்வலர்களையும் உறைய வைத்துள்ளது.
1990களின் பிற்பகுதியில் செம்மணியில் நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் படு கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள், இன்று அறிவியல் பூர்வமான சான்றுகளு டன் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
செம்மணி மட்டுமன்றி, மன்னார் ச.தொ.ச., கொக்குத்தொடுவாய், குருக்கள்மடம், மாத்தளை, சம்பூர் மற்றும் கொழும்பு என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப் பட்டு வருவது, இலங்கையின் ஆழமான போர்க்கால வர லாற்று இனஅழிப்பை அம்பலப்படுத்துகிறது.
இவ்வாறானதொரு பெருந்துயரத்தின் பின்னணி யில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்திய வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் உறவினர்களால் நிராகரிப்பட்டுள்ள காணாமல்போனவர்களுக்கான அலுவலகம், செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்களுக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் தாம் தடய வியல் மற்றும் தொல்லியல் பணிகளை அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச விசாரணைகளை மக்கள் கோரிய போதிலும், இதனை உள்ளுர் பொறிமுறையினூடாக விரைவான சிறந்த தீர்வுகளாக வழங்க முடியுமா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் அதன் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள் ளனர். அத்துடன், தம்மிடம் இற்றை வரையான 8 வருடகாலத்தில் காணாமல்போனோர் தொடர்பில் 23,352 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் பொலிஸ் மற்றும் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் பற்றிய முறைப் பாடுகளையும் இரட்டைப் பதிவுகளையும் நீக்கியதன் பின்னர் எஞ்சியிருந்த 14,966 முறைப்பாடுகளில் 9,072 முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இதுவரையில் காணாமல்போன 31 பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ள போதிலும், அவர்களது தனியுரிமையைக் கருத்திற்கொண்டு மேலதிக விபரங்களை வெளிப்படுத்தமுடியாது என்றும் 7,726 முறைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு 200,000 ரூபா இடைக்காலக் கொடுப் பனவை வழங்குமாறு இழப்பீட்டு அலுவலகத்துக்குப் பரிந்து ரைத்துள்ளதாகவும் கூறியுள்ளனா.
தமது பரிந்துரைகளின்படி, 5,427 குடும்பங்களுக்கு அக்கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதுடன், எஞ்சிய குடும்பங்களுக்கான கொடுப்பனவு அடுத்துவரும் சில மாதங்களில் வழங்கப்படும். அத்தோடு இதுவரையான காலமும் 31 பேருடன் இயங்கிவந்த அலுவலகத்துக்குப் புதிதாக 69 ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்களில் 41 பேர் ஏற்க னவே இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும் தன்னிலை விளக்கம் அளித்துள்ளதோடு எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்திலும், தெற்கில் மாத்த றையிலும் நினைவுகூரல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், காணாமல்போனவர்களுக்கான அலு வலகத்தின் இந்தக் கூற்றுகளையும் அணுகுமுறையை யும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் தமிழ் சமூகமும் முற்றாக நிராகரித்துள்ளனர். இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகள் என்பவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்காக அன்றி, குற்ற வாளிகளைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கும் அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட ‘காலத்தைக் கடத்தும் கருவிகளே’ என்பதை கடந்தகால அனுபவங்கள் நிரூபித்துள்ளன.
குற்றவியல் விசாரணை அதிகாரமோ, குற்ற வாளிகளைத் தண்டிக்கும் வல்லமையோ இல்லாத ஒரு கட்டமைப்பால் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும் என்ற நியாயமான கேள்வியை உறவினர்கள் எழுப்புகின்றனர். மனிதப் புதைகுழிகளில் சிறுபிள்ளைகளின் எலும்புக்கூடுகளும், துப்பாக்கிச் தோட்டாக்கள் மற்றும் இராணுவச் சீருடைகளின் பாகங்களும் கண்டெடுக்கப்படும் சூழலில், அதனை வெறும் ‘காணாமல்போனோர் பற்றிய ஆய்வாக’ சுருக்குவது, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற மறைப்பிற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
அர்ஜென்டினாவில் ‘பிளாசா டி மேயோவின் தாயார்கள்’ (Mothers of the Plaza de Mayo) தங்களின் காணா மலாக்கப்பட்ட பிள்ளைகளுக்காக தசாப்தங்களாக வீதியில் இறங்கிப் போராடி சர்வதேச நீதியைப் பெற்றது போல, இலங்கையிலும் தமிழ் தாய்மார்களும் உறவினர்களும் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் வளையாமல் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் தாயாகச் செயலணி அமைப் பின் ஏற்பாட்டில் ‘நீதியின் ஓலம்-2’ எனும் தலைப்பில் வடக்கில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட மக்களுக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் சர்வதேச நீதியைக் கோரியும், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி யும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி அவலம் குறித்தும், தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கெடுத்து தங்களின் பலமான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
உள்ளுர் பொறிமுறைகள் மீது எவ்வித நம்பிக் கையும் இல்லை என்பதையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச சுயாதீன விசாரணை பொறி முறை மூலமாக மட்டுமே தமக்கு உண்மையும் நீதியும் கிடைக்கும் என்பதையும் அவர்கள் உரக்கச் சொல்லி வருகின்றனர். உலகளவில் பொஸ்னியாவில் இடம்பெற்ற ஸ்ரெப் ரெனிக்கா படுகொலைகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் எவ்வாறு உண்மைகளை வெளிக் கொண்டுவந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்ததோ, அதேபோன்று இலங்கையிலும் சர்வதேசத்தின் நேரடிக் கண்காணிப்பிலான தடயவியல் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் மட்டுமே உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண உதவும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் தொழில்முறை உதவிகளை உள்ளுர் அமைப்புகள் பெற முற்பட்டாலும், அரசியல் தலையீடுகளும் அதிகார வர்க்கத்தின் அழுத்தங்களும் விசாரணைகளின் சுயாதீனத்தை சீர்குலைத்து விடுவதாகவே வரலாற்று அனுபவங்கள் காட்டுகின்றன.
மன்னார் சதொச புதைகுழியின் கார்பன் பரி சோதனை முடிவுகள் மற்றும் கொக்குத்தொடுவாய் அகழ் வாராய்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்ட விதத்தில் நிலவிய வெளிப்படைத்தன்மையற்ற தன்மை இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
ஆகஸ்ட் 30 காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வ தேச தினம் நெருங்கும் இந்த தருணத்தில், தமிழ் தாயார்க ளின் ‘நீதியின் ஓலம்’ என்பது இலங்கை அரசாங்கத்தின் காதுகளை எட்டுகிறதோ இல்லையோ, சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மனிதப் புதைகுழிகளில் இருந்து தோண்டியெடுக் கப்படும் ஒவ்வொரு மனித எச்சமும், இலங்கையில் நிலைமாறுகால நீதி என்பது கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது. காலம் கடத்தப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது.
காணமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் போன்ற வலுவற்ற உள்ளுர் பொறிமுறைகளை நிராகரித்து, சர்வதேச நீதியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போராடும் தமிழ் மக்களின் குரலுக்கு சர்வதேச சமூகம் இனிமேலும் செவிசாய்க்கத் தவறினால், அது மனித உரிமை என்ற சர்வதேச அடிப்படைக் கோட்பாட்டிற்கே பேரிழுக்காகும்.