சர்வதேச குற்றவியல் நீதிமன்றமா? ஐ.நா மனித உரிமைச்சபையா? உருத்திரகுமாரன் தெளிவுரை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் சாத்தியம் இல்லை. ஜெனீவாவும் விடுபட்டுப் போய்விடும், இதனால் சிறிலங்கா உலக கண்காணிப்பில் வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறுவது தவறான கருத்தென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை மையப்படுத்தி ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையின் அமர்வுமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ள இவ்வேளையில், சர்வதேச நீதிமன்றமா அல்லது ஐ.நா மனித உரிமைச்சபையா என்ற கேள்விக்கு இடமின்றி இரண்டு தளங்களையும் நாம் கையாளவேண்டும் என அவர் இடித்துரைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபையும், தமிழர் தரப்பின் நிலைப்பாடும் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இணைவழி கருதாடலொன்றில் இக்கருத்தினை தெரிவித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை அனுப்பினால், 2009ம் ஆண்டு வரையிலான சர்வதேச குற்றங்களான இனப்படுகொலையினைத்தான் அது பார்க்கும். ஆனால் தற்போது தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு, அச்சுறுத்தல்கள், போர்கைதிகள் விடுதலை (அரசியல் கைதிகள்) போன்ற மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இல்லை;. ஆனால் அவ்விடயங்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபையில்தான் இருக்கும்.

2005ம் ஆண்டு சூடான் நாட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பிய போதும், அதன்பிறகும் ஐ.நா மனித உரிமைச்சபையில் தொடர்சியாக சூடான் நாட்டு விவகாரம் பேசப்பட்டுக் கொண்டே இருந்தது.

எனவே ‘பொறுப்புக்கூறலை’ சர்வதேச நீதிமன்றத்துக்கும், பிற மனித உரிமை விடயங்களை ஐ.நா மனித உரிமைச்சபையிலும் வைத்திருக்க வேண்டும்.

சர்வதேச நீதிமன்றமா அல்லது ஐ.நா மனித உரிமைச்சபையா என்ற கேள்விக்கு இடமில்லை. இரண்டு தளங்களையும் நாம் கையாளவேண்டும். ஜெனீவாவில் மட்டும் எமது அரசியல் போராட்டம் தங்கியிருப்பதாக கருத்திவிடக்கூடாது. மனித உரிமைப் பேரவை ஒன்று மட்டும்தான் எமக்கு நீதியினைத் தரும் என்று கருதிவிடக்கூடாது. பல்வேறு தளங்களை நாம் பாவிக்க வேண்டும். அதில் ஜெனீவாவையும் ஒரு முக்கியமான தளமாக கையாள வேண்டும்.

எல்லா நாடுகளது சம்மதத்தினை பெற வேண்டும் என்பதற்காக, எங்கள் கோரிக்கையினை நாம் மழுங்கடிக்ககூடாது. பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலைப்பாட்டை நாம் தெளிவாக அந்நாடுகளுக்கு முன்வைக் வேண்டும். அந்நாடுகள் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்காவிட்டாலும் சரி, நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, அதனை அடுத்த தளங்களை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை அனுப்ப வேண்டாம் என்றால், ஐ.நா மனித உரிமைச்சபையில் பொறுப்புக்கூறலுக்கு எதனை கோரப்போகின்றோம் ? குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவிடமே பொறுப்புக்கூற கொடுங்கள் என்றா கோரப்போகின்றோம் ?

‘பொறுப்புக்கூறலை’ சர்வதேச நீதிப்பொறிமுறைக்கே நாம் கொண்டு செல்ல வேண்டும். நமது (நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்) நிலைப்பாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே ஆகும்.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் 2015ம் ஆண்டு கையெழுத்து இயக்கம் ஒன்றினை நாம் நடத்தியிருந்தோம். 1.6 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ஒப்பமிட்டிருந்தனர். இதன் நோக்கம் உலக அபிப்பிராயத்தை (கருத்துருவாக்கத்தினை) உருவாக்க வேண்டும் என்பதுதான். அதில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம்.

ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் அறிக்கையில், சில தமிழ் அமைப்புக்களிடத்தில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று வலியுறுத்தியவர்களிடத்தில் இன்று அது முக்கிய பேசு பொருளாக மாறிவிட்டது. இது தமிழ் அமைப்புக்களிடத்தில் மட்டுமல்ல, சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடத்திலும் இது காணப்படுகின்றது.

பொறுப்புக்கூறலுக்கான நிலைப்பாடாக ‘சர்வதேச விசாரணை’, ‘சர்வதேச நீதிப்பொறிமுறை’ ஆகிய விடயங்ககள் தாயக தமிழர் அரசியல் தரப்புக்களிடத்திலும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடத்திலும் இன்று பேசுபொருளாகியுள்ளது.

இனப்படுகொலையினை புரிந்தது தனிநபர்களோ, இராணுவ தளபதிகளோ, பற்றாலியன்களோ அல்ல. மாறாக முழு சிங்கள தேசமும் (சிங்கள அரசு) இக்குற்றத்தினை புரிந்துள்ளது. எனவே இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை உள்ளாக்க வேண்டியது , தனிப்பட்ட கோத்தபாயவையோ, தனிப்பட்ட சந்திரிகா குமாரதுங்காவையோ அல்ல. மாறாக ‘சிறிலங்கா அரசே’ இதற்கு பொறுப்புக் கூறவேண்டும். ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் அறிக்கையில் ‘ திட்டமிடப்பட்ட குற்றங்கள்’ என குறிப்பிட்டுள்ளார். அதவாது தற்செயலாக நடந்த குற்றங்கள் அல்ல. நன்கு திட்டமிடப்பட்ட குற்றங்கள் ஆகும் அவை.

ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ முன்னினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையிலும் ‘சிறிலங்கா அரசே’ இக்குற்றங்களை செய்தது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

எனவே சிறிலங்கா அரசினையே நாம் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். குற்றவாளிக்கூண்டில் என்பது சிறையில் அடைப்பதல்ல. அதற்கான ‘பொறுப்புக்கூறலேயாகும்.

2009க்கு பின்னர் எமது விடுதலைப் போராட்டம் நீதிக்கான போராட்டமாக நடைபெற்று வருகின்றது. இப்போராட்டத்தினை வெறுமன சட்டப் போராட்டமாக மட்டும் குறுக்கிப்பார்க்காமல், இதனை ஒரு அரசியல் போராட்டமாக கருத்திக் கொண்டுதான் எம்முடைய நிலைப்பாட்டினை நாம் எடுக்க வேண்டும்.

பரிகாரநீதியே (ஈடுசெய் நீதி) எமது மக்களுக்கான தீர்வாக அமையும். நிலைமாறுகால நீதியல்ல.

நிலைமாறுகால நீதி என்பது , ஆர்ஜென்ரீனாவில் இருந்த அரசாங்கமொன்று மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தது. அதற்கு பின்னாக வந்த அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்தது. அதுதான் நிலைமாறுகால நீதியின் அடிப்படைக் கோட்பாடாகும். நிலைமாறு கால நீதி என்பது அவ்வாறான தேசங்களில் இருந்தே, பாதிக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கம் பெற்றிருந்தது.

ஆனால் இந்த நிலைமாறுகால நீதி என்பது இனப்படுகொலைக்கு உள்ளான எமக்கு நீதியினை தரும் என்று நம்பவில்லை. ஆயினும் எம்மைப் பொறுத்தவரை எந்தவொரு தளத்தினையும், எந்தவொரு களத்தினையும் எமது விடுதலையினை நோக்கி, எமது மக்களுக்கான நீதியை நோக்கி எடுத்துச் செல்லாம் என பார்க்க வேண்டும்.

நாடுகளை மையப்படுத்தியே உலக ஒழுங்குகள் இயங்குகின்றன. சர்வதேச நீதிப்பொறிமுறைகளும் நாடுகளை மையப்படுத்தியே இயங்குகின்றன. மனித உரிமைப் பேரவையிலும் நாடுகள்தான் முடிவுகளை எடுக்கின்றன. சர்வதேச நீதிமன்றம் என்றாலும் நாடுகளற்ற இனத்துக்கு அங்கு வழக்குகளைக் கொண்டு போவதற்கு வழிமுறையே இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்றாலும் நாடுகள் அதில் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அல்லாது விட்டாலும் நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச்சபை அதற்கு அனுப்ப வேண்டும். எனவே எந்தவொரு விடயத்தினை எடுத்துபார்த்தாலும் நாடுகள்தான் முடிவுகளை எடுக்கின்ற சக்திகளாக இருக்கின்றன.

தமிழீழத் தேசியத் தலைவர் குறிப்பிட்டது போல் நாடுகள் தர்மத்தின் சக்கரத்தில் சுழல்வதில்லை. நாடுகள் தமது அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.

இந்த யதார்த்தங்களை புரிந்து கொண்டுதான் நாம் எங்களுடைய நலன்ங்களின் அடிப்படையில் நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.