சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றன – குணவங்ச தேரர்

சர்வதேச உளவுப்பிரிவுகள் நாட்டுக்குள் செயற்படுகின்றன என்றும், தேசிய சக்திகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவங்சதேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“தேசிய சக்திகள் இணைந்துதான் இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்தன. எனவே, மக்கள், அரசு மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக மேற்படி சக்திகள் தொடர்ந்தும் செயற்படும். எனவே, தேசிய அமைப்புக்களுக்குள்ளும் பல பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் அரசியல் கட்சிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் சூழ்ச்சி நடக்கின்றது. எனவே, விழிப்புடன் இருந்து மதிநுட்பத்துடன் அனைவரும் செயற்படவேண்டும். சர்வதேச உளவு அமைப்புக்கள் நாட்டுக்குள் தீவிரமாக செயற்படுகின்றன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத்தொடர், தேசிய வளங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டே இவை செயற்படுகின்றன. அதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். எரிகின்ற நெருப்பில் எண்ணைய் ஊற்றாமல், நாட்டுக்காக இணைந்து செயற்பட முன்வரவேண்டும். கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் முயற்சி எடுக்கப்படுகின்றது. நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நேசிக்கின்றனர். அவருக்கு துளியளவுகூட பிரச்சினை ஏற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். பிரச்சினைகளை உருவாக்குவதற்கு மஹிந்தவைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.