சம்பந்தனும் சுமந்திரனும் பேசும் ஐக்கியம் ஏற்கக்கூடியதல்ல: சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஐக்கியத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர் .ஆனால் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ஐக்கியத்துக்கு நாங்கள் விரோதிகள் அல்லர். திம்பு காலத்தில் இருந்தே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஐக்கியத்துக்காக இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றது. திம்பு காலத்தில் இருந்து இன்றுவரை பல்வேறுபட்ட ஐக்கியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகுவதற்கு நாங்கள் காரண கர்த்தாக்களாகவும் இருந்திருக்கின்றோம்.

ஆகவே நாங்கள் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது என்பதைத் தெளிவாக கூறிக் கொள்கிறோம். ஆனால் சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் பேசக்கூடிய ஐக்கியம் என்பது என்ன அடிப்படையிலானது என்று பார்க்கவேண்டும். அது உண்மையில் தமிழரசுக் கட்சியை வெல்ல வைப்பதற்கான ஐக்கியமா என்பதுதான் முதலாவது கேள்வி. அல்லது ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதற்கான ஐக்கியமா என்பதும் கேள்வி. ஆகையினால் அவை எல்லாம் தவறானவை என்றுநாங்கள் கூறுகிறோம்.

ஆகவே தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறிக் கொண்டிருப்பது என்னவெனில் ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்று சொன்னால் அந்த ஐக்கிய முன்னணிக்கான கட்டமைப்பொன்று உருவாக்கப்படவேண்டும். அந்த ஐக்கிய முன்னணிக்கான யாப்பு இருக்க வேண்டும். அதனுடைய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அந்தக் கொள்கைகளை முன்னெடுத்தச் செல்வதற்கான வேலைத் திட்டங்கள் இருக்கவேண்டும். இவை எதுவுமே இல்லாமல் வெறுமனெஐக்கியத்தைப் பற்றிப் பேசிப் பலனில்லை.

அதிலும் குறிப்பாக நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை, விரும்பியோர் வந்து சேரலாம் என்று சொல்வது அது ஒரு ஐக்கியத்துக்கான அறைகூவல் அல்ல. ஐக்கியத்துக்கான கோரிக்கையும் அல்ல. அது உண்மையாகவே மக்களை ஏமாற்றுவதற்கான செயற்பாடகத்தான் கருது கின்றேன்.

அந்த அடிப்படையில் தான் மாற்று அணியைப்பற்றி நாங்கள் சிந்திக்கின்றோம். தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய வகையில் இதில் யார் சேர்ந்து செயற்பட விரும்பினாலும் அவர்களையும் இணைத்துக் கொண்டு செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்பட வேண்டும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு ஏற்படவேண்டும். அவர்கள் ஒரு சுயமாக முடிவுகள் எடுத்து நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக இருக்கவேண்டுமென்று பல விடயங்கள் இருக்கின்றன.

அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள், ஒரு சமஷ்டி அமைப்பு முறையை முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அனைவரையும் நாங்கள் ஒன்றிணைத்து அதற்கான கட்டமைப்புகளையும் அதற்கான யாப்புக்களையும் உருவாக்கி முன்னெடுத்துச் செல்வோமானால் அதற்குள் பிரச்சினைகள் வருவது நிச்சயமாக குறைவாக இருக்கும்” என்றார்.