சமூகத்திலிருந்து கொரோனா தொற்று மே மாதத்தில் இல்லை ; புலனாய்வுத்துறை அறிக்கை

சமூகத்திற்குள் இருந்து மே மாதம் முதலாம் திகதி முதல் கொரோனா தொற்றுக்குள்ளானோர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அரச புலனாய்வுத்துறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா இந்த விடயத்தை நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது சட்ட மாஅதிபர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா, இந்த விடயத்தை மன்றிற்கு அறிவித்துள்ளார்.

அரச புலனாய்வுத்துறையினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக் குழுவிற்கு இயலுமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலை ஒரேதினத்திலோ அல்லது கட்டம் கட்டமாகவோ நடத்துவதற்கான சட்ட இயலுமை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு நாட்டில் தற்போதுள்ள சட்டம் போதுமானது எனவும், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி புதிதாக சட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் தேமுனி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளை இன்று வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் நேற்று தீர்மானித்திருந்தது.