சட்டவாட்சி தொலைந்து போகும் சிறீலங்காவில் கொடுங்கோன்மை ஆட்சி வீச்சுப் பெறுகிறது

ஒரு இனத்தின் படுகொலையை தனது போர் வெற்றியாகக் கொண்டாடி மகிழும் கொடூரம் சிறீலங்காவில் 2010 முதல் அரங்கேறிய அகோரம். அதேவேளை தம் உறவுகளை கொடூரமாக பலிகொடுத்த பேதிலிகள் அதை கூடியழுது நினைவில் கொள்ளக் கூட அதற்கான இடைவெளிக்காக போராடிய அவலம்.

இந்நிலையில் தான் மாற்றத்தின் குறியீடு எனக்கூறி ஆட்சிக்கட்டில் சனாதிபதியாக 2015இல் அமர்த்தப்பட்டார் மைத்திரி. ஆனால் அவ்வாண்டே மே 19 அனைவருக்குமான நினைவு நாளாக கொள்ளப்படும் என அறிவிக்கப்பட வெற்றிவிழா நிகழ்வை நடாத்தினார் மைத்திரி. அப்போதும் தமிழினம் விழித்துக் கொள்ளவில்லை.

2020, மே 19இல் மைத்திரியும் கலந்து கொள்ள, வெற்றி விழாவை வெகுசிறப்பாக அரங்கேற்றியிருக்கிறார் கோத்தா. ஆனால் மே 18இல், கோவிட்-19 சுகாதாரக் கெடுபிடி, பாதுகாப்புக் கெடுபிடி, புலனாய்வு அச்சுறுத்தல், நீதிமன்றக் கெடுபிடி, அடிப்படை உரிமைகள் மறுப்பு, என சட்டவாட்சியே தொலைந்து போன சிறீலங்காவில், கூடி அழவும் நினைவில் கொள்ளவும் முடியாமல், பந்தாடப்பட்டது தமிழினம்.

மறுநாள் மே 19இல், கோவிட்-19 மட்டும் சுகாதாரக் கெடுபிடி எங்கு போனது? கோத்தாவே முகக்கவசம் கூட அணியவில்லை. ஆறடி இடைவெளி எங்கும் பேணப்படவில்லை. பெருவிழாவாக பல நூற்றுக்கணக்கானோரின் பிரசன்னம். ஊர்காவல் படையின் உறவுகள் வரை கூட அனுமதி. நீதிமன்றக் கெடுபிடிகள் எதுவும் கிடையாது. இதைத் தான் கொடுங்கோன்மை ஆட்சி ஒன்றின் சிறப்பு எனலாமா?

இருக்க, தனது சிங்கள மக்களுக்கு உரையாற்றிய கொத்தா, பின்வருமாறு தெரிவித்தார். “I will not allow any room for attempts to discredit and destroy the dignity of our war heroes who made countless sacrifices to bring peace to entire Sri Lanka. I assure you that under my administration, we will take every measure always to protect the dignity of our heroic forces… If any international body or organization continuously target our country and our war heroes, using baseless allegations, I will also not hesitate to withdraw Sri Lanka from such bodies or organizations.”

கோத்தா தன் படைகளுக்கும் மக்களுக்கும் என்றும் உண்மையாகவும் விசுவாசமாகவும் உள்ளார். அவர் குறிப்பிட்டது போல் ஏற்கனவே, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரேரனையில் இருந்து சிறீலங்காவை வெளியேற்றி விட்டார். அவர்கள் வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்க வேண்டும், என பிரேரித்து தொடர்ந்து இருமுறை வழங்கி வந்த எம்மின் அடுத்த கட்டம் தான் என்ன? எம்மக்களுக்கு நாம் என்று உண்மையாக இருந்திருக்கின்றோம்?

இன்றுவரை யாராவது ஒரு சிங்களத்தின் முக்கிய தலைவராவது தமிழர் படுகொலை குறித்து வருத்தமாவது தெரிவித்துள்ளாரா? இன்றைய கோத்தா ஆட்சியில் நாளுக்கு நாள் சட்டவாட்சி சிதைந்து, கொடுங்கோலாட்சி வீச்சுப் பெறுகிறது. இது தான் வீச்சாகப் போகும் அடுத்த கட்டம் என, நவம்பரில் சனாதிபதித் தேர்தல் முடிவுகள் வரும் முன் அடித்துக் கூறியிருந்தேன். கோத்தாவின் வெற்றி கூட சாத்தியம் என்ற கருதியலுக்கே வராத தமிழ்த் தலைமைகள், கோத்தா ஆட்சியை எதிர்கொள்ள எவ்வித திட்டமும் பார்வையும் அற்றிருப்பது பேரச்சம் தருகிறது என்றிருந்தேன் அன்று.

இன்று 6 மாதங்கள் கழிந்தும் அதேநிலை தொடருகிறது. இங்கு வரலாற்றின் பதிவொன்றை உங்கள் கவனத்திற்கு தர விரும்புகின்றேன். வரலாறு எம்மை விடுவிக்கும் என்பார்கள். ஆனால் ஏனோ தற்போதைய தமிழ்த் தலைமைகளிடம் அது மருந்திற்கும் கிடையாது. றோபேட் நொக்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி, அவனின் கப்பல் நவம்பர் 19 1659இல் கடல்சீற்றத்தில் மாட்டுண்டு இலங்கையில் கரையொதுங்கியது.

அவனுடன் கூடிய 16 பேர், அவன் தந்தை உட்பட கைதாகி கண்டியில் கண்டி அரசனால் சிறைவைக்கப்பட்டனர். அவன் தந்தை அங்கு இறந்து போக, 20 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின் அவனும் சகா ஒருவனும் தப்பி, அரிப்பில் நிலைகொண்டிருந்த போத்துக்கேயரிடம் சென்று அவர்களுடாக பிரித்தானியா சென்றடைந்தனர். றோபேட் நொக்ஸ் 1681இல் எழுதிய ‘Historical Relations of Sri Lanka’ என்ற நூலில் பின்வரும் குறிப்பு ஒன்று உண்டு.

“They (Sinhala authorities) are craftily and treacherous to be trusted upon any professions, for their manner of speaking is very smooth and courteous in so much. THOSE WHO ARE UNACQUAINTED WITH THEIR DISPOSITION AND MANNERS MAY EASILY BE DECEIVED BY THEM. For they make an account of no conscience of lying, neither is it any shame or disgrace to them if they be catched in telling lies it is so customary”.

அதாவது 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே, அன்பொழுகப் பேசி, ஆரத்தழுவி ஏமாற்றுவதில் வல்லவர்கள். வழமையாகவே பொய் சொல்வதில் வல்லவர்களான இவர்கள், அதில் மாட்டிக் கொள்ளும் போது, அதை அவமானமாகவோ இழிவாகவோ கருதாதவர்கள், என்கிறார் சிங்களத் தலைமைகள் குறித்து றோபேட் நொக்ஸ். இவர்களின் பண்புகளை முன்பின் தெரியாதவர்கள் இலகுவாக இவர்களிடம் ஏமாந்து விடுவார்கள் என்கிறார் மேலும்.

கடந்த 350 வருடங்களில் சிங்களத் தலைமைகள் அதில் எவ்விதத்திலாவது மாறிவிட்டார்களா? இவர்களை இவர்கள் பண்புகளை நன்கறிந்த நாம் தொடர்ந்தும் ஏமாறுவதன் விந்தைதான் என்ன? இதைத் தான் இணக்க அரசியல் என்ற சோரம் போதல் என்பதா? வரலாறு எம்மை விடுவிக்குமானால ;இலவு காத்த கிளிகள் எம்மத்தியில் குறையும்!

நேரு குணரட்னம்