சங்கே முழங்கு! – மட்டு.நகரான்

1 e1725814672750  சங்கே முழங்கு! - மட்டு.நகரான்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ,இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும், விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத் தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங் கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் , ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்!

தமிழர்கள் தங்களுக்குள் சாதி, மதங்களால் பிரிந்து வாழ்கிறார்கள், அவர்கள் அனைவரும் தமிழ் என்ற மொழியின்கீழ் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று பாவேந்தர் பாடியுள்ளார். தமிழர் ஒற்றுமையாய் வாழ்ந்தால் தமிழ் மொழி ஏற்றம் பெறும் என்னும் உண்மையை அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

வடகிழக்கு தமிழர்களின் வாழ்வில் ஒற்றுமையும் ஐக்கியமும் ஏற்பட்டு தமிழர்களின் பலம் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட வேண்டுமானால் இம்முறை சங்கு ஓங்கி ஒலிக்கவேண்டும்.அதற்குள்ள தடைகள் வடகிழக்கில் அகற்றப்படவேண்டும்.அதற்கான முன்னெடு ப்புகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

வடகிழக்கினைப்பொறுத்த வரையில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 15வருடங்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் இலங்கை அரசாங் கத்தினாலும் சர்வதேசத்தினாலும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றோம்.இன்னும் ஏமாற்றப்படுகின்றோம்.காலத்திற்கு காலம் தமிழர்களை ஏமாற்றி தங்களது வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் பெரும்பான்மையின தலைவர்கள் இறுதியில் தமிழர்களுக்கு எதிரான செயற் பாடுகளை முன்னெடுத்து சிங்கள தேசத்தில் தமது இருப்புகளை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகளையே முன்னெடுத்துவந்திருக் கின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே தமிழர் கள் இம்முறை விழித்துக்கொண்டனர்.சில விமர்சனங்கள் இருந்தாலும் வடகிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்பது இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தாகவே பார்க்கப்படுகின்றது. இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள வேட் பாளர்கள் தமிழர்களின் வீடுகளுக்கு சென்று தமிழர்களின் கதவுகளை தட்டுகின்றார்கள் என்றால் தமிழ் மக்களின் வாக்குப்பலம் என்பது எத்தகையது என்பதை தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.இந்தவேளையில் நாங்கள் எமது வாக்குப்பலத்தினைப்பயன்படுத்தி எமக்கான உரிமை ரீதியான விடயங்களை இந்த நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிக் காட்டப்போகின்றோமா அல்லது எந்த சிங்கள வேட்பாளருக்காவது வாக்களித்து மீண்டும் ஏமாற்றமடைந்து மீண்டும் சர்வதேசத்திட மும் இலங்கையிடமும் உரிமைக்காக கையேந்தப் போகின்றோமா என்பதை சிந்திக்கவேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளார்கள்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் இன்று தமிழர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர்.கிழக்கில் தமிழர்கள் மீதான உச்சமட்ட அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.கிழக்கில் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்படும் செயற் பாடுகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளையே சிங்கள தலைவர்கள் முன்னெடுத்தார்களே தவிர அவற்றினை தடுத்து நிறுத்தி தமிழர்கள் சுமுகமான சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக திருகோணமலை மாவட்டத் தில் கோணேஸ்வரம் உட்பட தமிழர்களின் தொன்மையான அனைத்து இடங்களும் பௌத்த மயமாக்கல் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல் லைப்பகுதியான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் சிங்கள மயப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேநேரம் மயிலத்தமடு மாதவனை பகுதியில் பாரியளவில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு எதிராக 358 நாட்களையும் தாண்டிய வகையில் கால்நடை பண்ணையாளர்கள் போராடி வருகின்றனர்.அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் சிறுபான்மை இனங்களுக்குள் மோதல்களை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் படுகின்றன.

இவ்வாறான நிலையில் மேற்குறித்த பிரச்சினைகளை தீர்த்து தமிழர்கள் தமது பகுதி களில் நிம்மதியாக வாழும் நிலைமையினை ஏற்படுத்துமாறு தொடர்ச்சியாக தமிழ் அரசியல் தலைவர்களினாலும் தமிழ் தேசிய பரப்பிலுள்ள செயற்பாட்டாளர்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களினாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவருகின்றபோதிலும் அதில் ஒரு சிறு பிரச்சினை கூட தீர்க்கப்படாத நிலையே காணப்படுகின்றது.தேர்தல் காலத்திலாவது தமிழர்களின் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுப்போம் என்ற உத்தரவாதம் கூட தராமல் இன்று தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள பெருந்தேசியவாதிகள் கையேந்தி வந்திருக்கின்றார்கள்.

சூடு சொறணையுள்ள தமிழர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அண்மையில் வாகரையில் நடை பெற்ற தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக் கும்  கூட்டத்தில் கூறியிருந்தார்.

உண்மையில் இந்த கருத்தே இன்று கிழக்கில் பெரும்பாலான தமிழர்கள் மத்தியில் காணப்படுகின்றது.கடந்த காலத்தில் பெரும் பான்மையின கட்சிகளை ஆதரித்தவர்கள் கூட இன்று தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நிலைமையே காணப்படுகின்றது.அதற்கு கார ணம் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அடக்கு முறையாகும். இவ்வாறான நிலையில் இந்த பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கும்போது இந்த தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகளின் நிலைப்பாடுகளினால் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தி நிலவுவதை காணமுடிகின்றது.

குறிப்பாக தமிழ் பொதுவேட்பாளர் அறி விப்பு வெளியான காலம் தொடக்கம் தமிழ் தேசிய கட்சிகளுக்குள் இருக்கும் நிலைமைகள் பெரும் சந்தேகங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து நின்ற தமிழ் கட்சிகள் இன்று தமது சொந்த நலனை முன்னிறுத்தி பின்வாங்கும் நிலைமை அல்லது ஒதுங்கும் நிலைமையினையும் காணமுடிகின்றது.பேரினவாதம் தமது நிகழ்ச்சி நிரல்களுக்குள் அவர்களை உள்வாங்கும் செயற்பாடுகளை மிக காத்திரமாக முன்னெடுத்துவரும் நிலையிலேயே இவ்வாறான நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது.

மறுபுறத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றது. சிங்கள பெரும்தேசியவாதத்தினால் உள் இறக்கப்பட்டவர்கள் தமது கடமைகளை சிறப்பாக செய்துவருகின்றனர்.ஆனால் தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த உள்ளகமுரண்பாடுகள் தமிழ் பொதுவேட்பாளரின் செயற்பாடுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் சிங்கள பெரும்பான்மையின வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுத்த தமிழரசுக்கட்சியின் ஒரு சாராரின் செயற்பாடுகளை தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதை அவதானிக்கமுடிகின்றது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு ஜனாதி பதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக் கப்போவதாக அறிவித்திருந்த நிலையில் கிழக்கிலுள்ள பெரும்பாலான தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தினை நிராகரித்துள்ளதுடன் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது.

எவ்வாறாகயிருந்தாலும் கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் தமிழ் மக்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தில் உறுதியாகவுள்ளபோதிலும் தமிழ் தேசிய அரசி யல் கட்சிகளில் செயற்பாடுகளினால் இந்த நிலைமையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் இந்த தமிழ் பொது வேட்பாளர் மூலம் எதிர்காலத்தில் தமிழ் தேசிய கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழர்களின் உரிமை ரீதியான ஜனநாயக போராட்டங்கள் வலுப்பெறவேண்டும்.அதன் ஊடாக தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒரு தீர்வினைப்பெற்று வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.