கோவிட் – 19இன் பின்னரான கூட்டு உருவாக்க அரசியலில் உலகமும் ஈழத்தமிழரும் – சனநாயகத்தின் அரசியலில் முதுநிலை அறிஞர் சூ.யோ. பற்றிமாகரன்

2020ஆம் ஆண்டு உலக அரசியலிலும் ஈழ அரசியலிலும் ‘புளொக்ஸ்’ என்று ஆங்கிலத்திலும் ‘கூட்டு’ எனத் தமிழிலும் சுட்டப்படும் அரசியல் முறைமையை மீண்டும் அரசியல் வழக்கு முறையாக்கியுள்ளது.

சீனாவின் சில்க் பாதைத் திட்டத்தின் வெற்றி, அதனைத் தரைவழி, கடல்வழி உலகச் சந்தையை ஆட்டிப்படைக்கும் பொருளாதாரப் பலத்தைச் சீனாவுக்கு அளித்து வருகிறது. இதனை கோவிட் – 19 வீரியின் தொற்றுப் பரவல் கூடப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வல்லாண்மை நிலையில் சீனாவின் மேலாண்மை பூதாகரமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதனை நேருக்குநேர் நின்று தடுத்து வந்த அமெரிக்க மேலாண்மையும்கூட டிரம்ப் ஆட்சிக்காலத்து முன்நோக்கு இல்லாத் தீர்மானங்களால் தடுமாறிப் போயுள்ளது. இந்நிலையில் புதிதாக அமெரிக்காவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கவுள்ள பைடன் அவர்களுக்கு கோவிட் – 19 இன் பின்னரான உலக அரசியலில் புதிய ஒழுங்குமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அமைகிறது. இதனை 1945ஆம் ஆண்டு 2ஆவது உலகப் பெரும்போருக்குப் பின்னர் உருவாக்கிய ஒழுங்குமுறையில் இருந்து முற்றிலும் வேறுபாடான வகையில் ஐரோப்பிய – அமெரிக்க உலகத் தலைமைத்துவத்தைவிட மேலான சமூக, பொருளாதார, அரசியல் சத்தியாக உள்ள ஆசியத் தலைமையினை எதிர்கொண்ட நிலையில் கட்டமைக்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது. இவ்விடத்தில்தான் இந்துமாகடல் மேலான கட்டுப்பாடே உலக அரசியல் சமநிலைக்கான முக்கிய வழியாக அமைகிறது.

இதனைச் சீனா பாகிஸ்தான் சிறீலங்காவுடன் இணைந்த நிலையில் மிக உறுதியான முறையில் கட்டமைத்துள்ளது. இந்தக் கட்டமைப்பு இந்திய ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்குமான சீன – பாகிஸ்தான் அச்சுறுத்தலாகவும், வளர்ச்சி பெற்று வருகிறது. மற்றொரு தீபெத்தாக காஷ்மீர் மாறிவிடக்கூடிய அபாயத்தை உணர்ந்தே இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பாகிஸ்தான் ஊடுருவலைக் கட்டுப்படுத்த காஷ்மீருக்கான விசேட தகுதி நிலைகளை விலக்கி அதனையும் இந்தியாவின் ஒரு சாதாரணமான மாநிலமாக்கியது. அயோத்தி கோவில் பிரச்சினைக்கு வலுக்கட்டாயத் தீர்வொன்றை நடைமுறைப்படுத்தியது. ஆனால் இந்தியாவின் தென்னிந்தியக் கடற்கரையோரத்தில் சிறீலங்காவினூடாக கண்ணுக்குத் தெரியாத நிலையில் ஆழப்படத் தொடங்கிவிட்ட பாதுகாப்பின்மையின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது பலமாகச் சிந்திக்கிறது.

இதனால் இந்துமாகடலில் தோன்றி விட்ட இந்திய எதிர்ப்புத் தன்மையை மேலும் வளரவிடாது தடுப்பதற்கான கூட்டுறவாக அமெரிக்கா தனது படைபலத்தை தென்னிந்தியக் கடலில் வளர்ப்பதன் மூலம் கோவிட் – 19இற்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கு முறையை உருவாக்கும் என்பது உறுதியாகி விட்டது. இவ்விடத்தில்தான் சிறீலங்கா என்ற அரச கட்டமைப்பை அதனுடைய ஈழத்தமிழின அழிப்பு யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுடன் தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாகப் பலமுயற்சிகளைத் தொடங்கியுள்ளன.

ஆயினும் சிறீலங்காவால் இலகுவில் தீர்க்கப்பட முடியாத அளவுக்குச் சிறீலங்கா சீனாவிடம் படுகடனில் சிக்கியுள்ளது. அத்துடன் கைச்சாதான சீன – சிறீலங்கா நீண்ட கால ஒப்பந்தங்கள் சிறீலங்காவை சீனாவின் ஆட்சிக்குட்டபட்ட, வரையறுக்கப்பட்ட சுதந்திரமுள்ள நாடாகவே மாற்றி விட்டது. இதனை மீறி இந்தியா, அமெரிக்கா எதிர்பார்க்கும் இந்துமாகடல் பாதுகாப்பில் சிறீலங்கா நேரடியாக இணைவது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று.

இங்குதான் மிகப்பெரிய மனித ஆளுமையாக 1972 முதல் 2009 வரை 37 ஆண்டுகள் இந்துமாகடலில் பலம் பொருந்திய கட்டுப்பாட்டை மேற்கொண்டிருந்த ஈழமக்களால் மட்டுமல்ல உலகில் உள்ள முழுத் தமிழர்களாலும் தமிழர்களின் தேசியத் தலைமையாக விளங்கிய ஈழமக்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பலம் உலகுக்கு  ஈழத்தமிழர்களின் இந்துமாகடல் பாதுகாப்பு வலிமையை நிரூபித்தமையை இந்தியாவும், அமெரிக்காவும் மீள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்ட அதீத மனிதாய தேவைகளுடன் உள்ள ஈழத்தமிழ் மக்களுடான கூட்டு ஒன்று ஏற்படுத்தப்பட்டாலே, இம்மக்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான இந்துமாகடல் அனுபவத்தின் அடிப்படையில் இந்துமாகடலை அமைதிக் கடலாகப் பேணுவதற்கான உறுதியை அதிகரிக்கலாம்.

இவ்விடத்தில் இந்தக் கூட்டு சிறீலங்காவின் இறைமையை மீறும் செயலாகுமா என்றால், ஈழத்தமிழர்கள் 22.05.1972 முதல் நாடற்ற தேச இனமாக உள்ளார்கள் என்ற அடிப்படையில் இல்லை என்றே அனைத்துலக சட்டங்கள் பதிலளிக்கும்.

இவ்விடத்தில்தான் இன்றைய ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகளும், தங்களுக்குள் இந்த உண்மையை உறுதிப்படுத்தக் கூடிய மீள் கூட்டு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அனைத்துலக மனித உரிமை ஆணையத்திடமோ அல்லது அனைத்துலக யுத்தக் குற்ற நீதிமன்றத்திடமோ ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் ஈழமக்களின் இறைமையும் தன்னாட்சியும் 22.05.1972 முதல் இன்று வரை சிறீலங்காவின் படைபலத்தால் அவர்களுடைய அரசியல் பணிவைப் பெறும் பொறிமுறையூடாகவே பெறப்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் மையநோக்குடனேயே தங்களிடையான கூட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்.

சிறீலங்காவின் ‘போருக்குப் பின்னரான’ என்ற சொல்லாட்சியை சிறீலங்காவின் ‘இனஅழிப்புக்குப் பின்னரான’ எனத் திருத்திக் கொள்ள வேண்டும். அனைத்துல மன்றத்திடமோ அல்லது அனைத்துலக நீதிமன்றத்திடமோ ‘சிறீலங்காவின் மனித உரிமை’ என்ற அடிப்படையில் ஈழத்தமிழர்கள் மனித உரிமையை எடுத்து நோக்காது, ‘பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின்’ மனித உரிமை என்ற அடிப்படையில் கவனத்துக்கு எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

இந்தியாவுடன் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது அவர்களுக்கும் இந்தியாவின் தமிழகத்திற்கும் இருக்கும் பிரிக்கப்பட இயலாத மானிடவியல், சமூகவியல், வரலாற்றியல் தொடர்புகளின் அடிப்படையிலான நிகழ்வுகளை முன்னிறுத்தி, சிங்கள பௌத்த பேரினவாதம்  ஈழத்தமிழர்களுக்கு  உரிமையை அளித்தால் அது சிறீலங்கா மீதான இந்திய ஆட்சி விரிவாக்கமாகி விடும் என்றே சிங்கள மக்களைத் தூண்டி வருகிறது என்பதனைக் கவனத்தில் எடுத்து, இதனை இன்னொரு நாட்டின் பிரச்சினையாகப் பார்க்காமல், இந்தியத் தேசியப் பிரச்சினையின் கடல் கடந்த வடிவமாகவே பார்த்து, அதற்கான ஏற்புடைய தீர்வை துணிந்து முன்மொழியுமாறும் சிறீலங்காவிடம் அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் வலியுறுத்தக் கூடிய கூட்டமைப்பை  ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் உருவாக்க வேண்டும்.

கெஞ்சிப் பெறும் ஒன்றல்ல ஈழத்தமிழர் உரிமைகள்.  ஈழமக்களை படை பலத்தால் மிஞ்சி அடக்கினாலும், அழிக்கப்பட முடியாத உரிமைகள் ஈழத்தமிழர் உரிமைகள். இந்த உண்மையின் அடிப்படையில் நல்லாட்சி மனித உரிமைகள் பொருளாதார வளர்ச்சி என்பன மறுக்கப்படும் போது ஈழத்தமிழர்களின் இறைமை இயல்பாகவே அதனைச் செய்யும் அரசாங்கத்தில் இருந்து  விலகி விடும் என்பது அனைத்துலக இறைமைகள் குறித்த, தன்னாட்சி குறித்த சட்டங்களுக்கு இயல்பான  உண்மை.

இதனையே அன்று தந்தை செல்வநாயகமும் பின்னர் தேசியத் தலைவர் அவர்களும்  இன்று சிறீலங்காவின் முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாணசபைத் தலைவரும் இன்றைய தமிழ்த் தேசியக் கட்சி யாழ்.மாவட்டச் சிறீலங்காப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்புக்குரிய சி. விக்னேஸ்வரன் அவர்களும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றனர். இது பிரிவினை அல்ல தன்னாட்சி உரிமை. ஆதலால் ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் தலைமைகளின் கூட்டு என்பது எவ்வாறு உலகத் தலைமைகளின் கூட்டு தெளிவாக இந்துமாகடலை அமைதிக் கடலாக வைத்திருக்க முயல்கிறதோ அவ்வாறே ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தைத் தேசியத் தன்மையைத், தன்னாட்சியை வெளிப்படையாகப் பாதுகாத்தல் என்பதை முன்னலைப்படுத்தி அமைக்கப்பட வேண்டிய நேரமிது. இதுவே ஈழத்தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளின் தீர்வுக்கான தொடக்க காலமாக கோவிட் – 19 க்குப் பின்னரான காலத்தை மாற்றும்.