கோத்தபாயா வெற்றிபெற்றால் நாம் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம் – சிங்கள மக்களை எச்சரிக்கிறார் அமைச்சர்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் கோத்தபயா வெற்றி பெற்றால் சிறீலங்கா அரசு அனைத்துலக விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் அது சிங்கள சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என தனது மக்களை எச்சரித்துள்ளார் சிறீலங்கா ஐக்கிய தேசிய முன்னியின் முன்னனி அமைச்சர் ரஜிதா செனிவரத்னா.

கடந்த வெள்ளிக்கிழமை (25) ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கோத்தபாயா சிறீலங்காவின் அரச தலைவராக வருவது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் ஆபத்தானது, நாம் அனைத்துலக விசாரணைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சன்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்காவின் கொலை தொடர்பில் கோத்தபயா மீது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசு அனைத்துலக மட்டத்தில் சிறீலங்காவுக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தி வைத்துள்ளது. அதனை நாம் இழந்துவிடக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்கு இந்தியா முயற்சி செய்வதாகவும், கோத்தபயாவின் வெற்றிக்கு சீனா உதவி வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கோத்தபயாவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் கலந்துகொண்டதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

china gota கோத்தபாயா வெற்றிபெற்றால் நாம் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவோம் - சிங்கள மக்களை எச்சரிக்கிறார் அமைச்சர்