கொரோனா தொடர்பில் வடக்கு ஆளுநர் விசேட கவனம்- பரவலை தடுக்க அவசர நடவடிக்கை

வடக்கில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய தீர்மானங்களை மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எடுத்துள்ளதோடு விரைந் செயற்பாட்டிற்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று இடர் நிலைமையை கருத்திற் கொண்டு வடமாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதிகள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாகாண சுகாதார பணிப்பாளர், மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர், கடந்த சில நாட்களாக 5 மாவட்டங்கள் உள்ளடங்கலாக கொரோனா தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். வடமாகாணத்தில் தற்போது இரண்டு கொரோனா நோயாளர் பராமரிப்பு வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. எமது மாகாணத்திலிருந்து பல மைல்கள் தொலைவிற்கு, அதாவது கொழும்பிற்கு நோயாளர்களை அனுப்பி அவர்களது நலன்களை பேணுவதிலுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த கொரோனா நோயாளர் பராமரிப்பு வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று இடர் முன்னேற்பாடு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிவரும் சுகாதார தரப்பினரின் அர்ப்பணிப்பான சேவைக்காக எனது பாரட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுகாதார தரப்பினரின் இத்தகைய ஒத்துழைப்பினால் தான் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையிலும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லக் கூடியதாக உள்ளது.

கொரோனா தொற்று இடர் என்பது ஒரு தேசிய ரீதியான பிரச்சினை. இப்பிரச்சினையை ஒவ்வொரு நிறுவன தலைவர்களும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நிறுவன தலைவர்களும் தமது நிறுவன உத்தியோகத்தர்கள் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்தி வைத்திருப்பதுடன், அவ்விபரங்களை அருகிலுள்ள பொதுசுகாதார காரியாலயத்தில் தெரிவிக்க வேண்டும்.

வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் காவற்துறையினர் போக்குவரத்து நடவடிக்கைகளின் போது சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும். அதனை மதிக்காது செயற்படும் சாரதிகளின் சாரதி அனுமதிபத்திர உரிமத்தை இரத்து செய்வதற்கும் தயங்க கூடாது

பேலியகொட மீன்சந்தை – மீன் விற்பனையாளர்கள் தொடர்பான பிரச்சினை தலைதூக்கியுள்ளதால் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட செயலாளர்களும் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றி செயற்படுவதை அவதானிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதிலுள்ள நிதிசார் பிரச்சினைகள் மற்றும் இடவசதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. தற்போதுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள இடப்பற்றாக்குறை தொடர்பில் கவனத்தில் கொள்கின்றேன்

யாழ்ப்பாணம், மன்னர் போன்ற இடங்களில் மேலும் இரு தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுவதோடு கடற்படை மற்றும் இராணுவத்தினர், மீனவர்களின் நடவடிக்கை தொடர்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

சட்டத்தை மீறி , அத்துமீறி செயற்பட்டு சமூகத்தில் தொற்றை பரப்புபவர்கள் மீது அவர்களின் தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பில்லாத வகையில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். கடமையின் நிமித்தம் வேறு மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் இயன்றளவு பிரயாணங்களை குறைத்து விடுதிகளில் தங்கி நின்று, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பணியில் ஈடுபட முடியும்.

கொரோனா வைரஸ் கிருமியானது 21 நாட்கள் தொடர்சியாக உயிர் வாழ்வதால் இயன்றளவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இலத்திரனியல் பண பரிமாற்று முறைகளையும்,பொருள் கொள்வனவு மற்றும் விற்பனைகளையும் மேம்படுத்த வேண்டும்.

அத்துடன் இயல்புநிலை பாதிக்காதவாறு அரசினால் வெளியிடப்பட்ட சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஏற்றவாறு உரிய உத்திகளை கையாண்டு தொற்றை தடுப்பதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊடகங்கள் பொறுப்புடன் கொரோனா தொடர்பான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

சட்ட விரோத நடவடிக்கைகளான போதைப்பொருள் பாவனை, மரம் வெட்டல் மற்றும் மண்ணகழ்வு என்பவற்றை இறுக்கமாக கவனித்து சட்டநடவடிக்கை பொலிஸார் எடுக்க வேண்டும். அத்துடன் கொரோனா பரவிக்கொண்டிருக்கும் டெங்கு நோய் தொடர்பில், சுகாதார பணியாளரிடம் நோய் தொடர்பான தேவையான நடவடிக்கைகளையும் கட்டுப்பாட்டு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.