கொரோனா அச்சம் -மாவட்ட எல்லைகளில் பயணத் தடைகளை விதிக்க வலியுறுத்தல்

புத்தாண்டுக் காலத்தில் மக்கள் மாவட்ட எல்லைகளைக் கடப்பதைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.

கொழும்பு மாநகர சபைப் பகுதிக்குள்  அதிகளவான கோவிட்-19 நோயாளிகள் பதிவாகி வருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோகண தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நோயாளர்கள் சமூகத்தில் அடையாளம் காண முடியாத வகையில் புழக்கத்தில் உள்ளனர். கம்பஹா, களுத்துறையிலும் இது போன்ற சூழ்நிலைகளே அறிக்கையிடப்படுகின்றன.

இதேவேளை பொதுச்சுகாதார சங்க செயலாளர் எம்.பாலசூரிய, கட்டுப்பாடுகளை விதிக்க முன் மூன்று வகை குழுக்கள் தொடர்பில் கருத்தில் கொள்ள வேண்டும்.

முதல் குழு மேல் மாகாணத்தில் பணி புரியும் பிற மாகாணங்களைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தற்போது வீடு திரும்பும் வழியில் உள்ளனர். இரண்டாவது குழுவினர் கிராமப்புறங்களிலிருந்து பொருட்கள், சேவைகளைப் பெறுவதற்காக மேல் மாகாணத்துக்கு வருகை தருகின்றனர்.

மூன்றாவது குழுவினர் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தலில் இருப்போர். அவர்கள் இலங்கையின் பிற பகுதிகளுக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்கின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.