கொரோனாவால் 2021ஆம் ஆண்டிற்குள் 4.7 கோடி சிறுமிகள், பெண்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்

கொரோனா தாக்கத்தால் வரும் 2021ஆம் ஆண்டிற்குள் 4.7 கோடி பெண்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது

ஐ.நா பெண்கள் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டக் குழு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி கொரோனா தொற்று காரணமாக ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வறுமைக்கோட்டிற்குகீழ் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கினை அடைய கொரோனா தொற்று தடையாக இருக்கின்றது.

அத்துடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு சேவைகள், வீட்டு வேலைகள், தங்கும் விடுதிகளில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், வேலையை விட்டு விலகுகின்றனர்.

2019 – 2021 காலப்பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் சதவீதம் 2.7ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொற்றுக் காரணமாக 9.1 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்குள் கொரோனாவால் மொத்தம் 9.6கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள். இதில் 4.7 கோடி சிறுமிகள், பெண்கள் அடங்குவர். இதன் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் பெண்களின் எண்ணிக்கை 43.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.