கேள்விக்கு உள்ளாகும் இருப்பும் தமிழ்த்தலைமைகளின் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

புதிய ஆண்டு புத்துணர்ச்சியளிப்பது. புது வேகத்துடன் செயற்படத் தூண்டுவது. இது பொதுவானது. ஆனால், பிறந்துள்ள புதிய ஆண்டாகிய 2021 இல் வலிந்த புத்துணர்ச்சியுடனும், மிகுந்த வேகத்துடனும் செயற்பட வேண்டும் என்பதையே 2020 வலியுறுத்திச் சென்றுள்ளது.

அரசியல் உரிமை மறுப்பு, ஆக்கிரமிப்பு, முடிவற்ற அடக்குமுறைகள் என மீள முடியாத சிக்கல்களுக்குள் ஏற்கனவே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் கோவிட் 19இற்கு எதிரான போராட்டத்துடன் புதிய ஆண்டில் தமது அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையின் அரசியல் களம் 2021 இல் கூடிய கொதிநிலையில் அமையப் போகின்றது என்பதையே 2020 இன் நிலைமைகள் கோடி காட்டி இருக்கின்றன. குறிப்பாக மேலோங்கிய இனவாதமும், அரசியல் ரீதியான நெருக்குதல்களும் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்க கங்கணம்கட்டி நிற்கின்றன.

ஒற்றையாட்சியின் கீழ் ஒரே நாடு – ஒரே சட்டம் என்பது அரசாங்கத்தின் கோட்பாடு. இனவாதம் அதன் கவசம். சிங்கள பௌத்த தேசியவாதம் பின்னிப் பிணைந்துள்ள அந்த வலையமைப்பில், ராஜபக்சக்களின் குடும்ப அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. புலிப் பயங்கரவாதமும், இஸ்லாமியப் பயங்கரவாதமும் இந்த அரசியலின் முக்கிய முதலீடு.

பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பது ராஜபக்சக்களின் அசைக்க முடியாத நிலைப்பாடு. இதற்கு இராணுவமயப்படுத்தப்பட்ட ஆட்சிப் போக்கும் சர்வாதிகார நடைமுறைகளுமே ஒரே வழி என்பது அவர்களின் செயல்வழித் தீர்மானம். அதன் அடிப்படையில் புலிப் பயங்கரவாதமும் இஸ்லாமியப் பயங்கரவாதமும் சிங்கள பௌத்த பேரின மக்களைப் பெரிய அளவில் பேய்க்காட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் என்பது அரசியல் உரிமைகளுக்கானதல்ல. அது முழுமையான பயங்கரவாதச் செயற்பாடாகும். அரசியல் உரிமைகளை வழங்கினால், அதிகாரங்களைப் பகிர்ந்தால் பயங்கரவாதம் மேலோங்கி, நாடு துண்டாடப்பட்டுவிடும். தமிழர்கள் சிங்கள பௌத்தர்களை அடிமைப்படுத்திவிடுவார்கள். பௌத்த மதம் இல்லாமற் செய்யப்பட்டுவிடும். சிங்கள மக்கள் வாழ்வதற்கான நாடு இல்லாமல் போய்விடும் என்ற அரசியல் ரீதியான அச்சத்தை ராஜபக்சக்கள் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் ஆழமாக விதைத்துள்ளார்கள்.
muslim family1 கேள்விக்கு உள்ளாகும் இருப்பும் தமிழ்த்தலைமைகளின் போக்கும் -	பி.மாணிக்கவாசகம்
இனவிருத்தி என்பது இஸ்லாமியர்களின் இயல்பு. உலக அளவிலானது. அவர்களின் இனவிருத்தியும் ஆக்கிரமிப்பாக மாறிவிடும். அது சிங்கள மக்களை சிறுபான்மை இனத்தவராக்கிவிடும்.  பௌத்த மதத்தையும் இல்லாமல் செய்துவிடும் என்ற அச்சத்தையும் பேரின அரசியல்வாதிகள் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் புகுத்தி உள்ளார்கள்.

இந்த வகையில் இனவாதத்தையும், மதவாதத்தையும் கருவிகளாகக் கொண்டு ராஜபக்சக்களின் அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கத் தாயகப் பிரதேசமாகிய வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைய விடாமல் தடுப்பதே இந்தக் குடியேற்றங்களின் முக்கிய நோக்கம்.

a4 கேள்விக்கு உள்ளாகும் இருப்பும் தமிழ்த்தலைமைகளின் போக்கும் -	பி.மாணிக்கவாசகம்

வடக்கையும் கிழக்கையும் பிரிப்பது மட்டுமல்லாமல் அந்த இரண்டு மாகாணங்களினது இனவிகிதாசாரத்தைத் தலைகீழாக மாற்றிவிட வேண்டும் என்பதும் பெருந்தேசியவாதிகளின் நீண்ட கால திட்டமாகும். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. மடடக்களப்பில் அது படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்தத் திட்டம் படிப்படியாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரான ஒரு தசாப்த காலத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளாகிய பிரதேச சபை மட்டத்தில் இந்த இனவிகிதாசார மாற்றம் சாதுரியமாகச் செயற்படுத்தப்பட்டிருக்கின்றது.  இதனால் சிங்களப் பிரதிநித்துவமே இல்லாமல் முழுமையான தமிழ்ப்பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த குறிப்பிட்ட பிரதேச சபைகளில் இனரீதியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செயலகப்  பிரிவாகிய நெடுங்கேணி பிரதேச செயலகம் முழுக்க முழுக்க தமிழ்ப்பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாகும். இந்தப் பிரதேச சபைப் பிரிவுக்குள் வெலிஓயா என்ற மணலாறு சிங்களக் குடியேற்றக் கிராமங்களை உள்ளடக்கி எல்லைகளை மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக நெடுங்கேணி பிரதேச சபையின் தலைமைப்பதவியே சிங்களப் பிரதிநிதிகளின் வசமாகின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது.

தமிழர்களின் தாயக மண்ணின் தலைமை நிலமாகக் கருதப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்திலும் இதுபோன்ற தலைகீழான இனப்பரம்பல் நிலைமை ஒன்று திரைமறைவில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கிலும் வடக்கிலும் அரச தரப்பினரால் நன்கு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களையும், சம்பவங்களையும் தடுத்து நிறுத்துவதற்கான வலிமையற்றவைகளாகவே தமிழ்த்தேசியம் பேசுகின்ற அரசியல் தலைமைகள் காணப்படுகின்றன.

மறுபுறம் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டி, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் இருந்து அரசு தன்னிச்சையாகத் திமிர்த்தனமாக வெளியேறி இருக்கின்றது.

மனித உரிமைகள் மீறப்படவில்லை. எந்தவிதமான சட்டமீறல்களும் இடம்பெறவில்லை என்பது இந்த அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு. உரிமை மீறல்கள் எனக் கூறி இராணுவத்தினர் எவரையும் நீதி விசாhணைக்கு உட்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என சிங்கள மக்களுக்கு அரசு உறுதியளித்துள்ளது.  இறுமாப்பான அந்த நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பொறுப்பு கூறலுக்கான தீர்மானங்களை அது புறந்தள்ளி உள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஐ.நாவிடம் ஒப்புக்கொண்ட அந்தக் கடப்பாட்டை நிறைவேற்றப் போவதில்லை எனக் கூறியுள்ளது.

இந்த பின்புலத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் உதவி ஒத்தாசையுடன் ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு அரச தரப்பினர் தயாராகி வருகின்றனர். இறைமையுள்ள ஓர் அரசுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டை மறுதலித்து நிலைமைகளைத் தமக்குச் சாதமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வலிமையோடு அவர்கள் முன்னெடுத்திருக்கின்றனர். இதன் மூலம் சர்வதேசப் பிடியாகிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடப்பாடுகளில் இருந்து விலக்குப் பெற முடியும் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

download கேள்விக்கு உள்ளாகும் இருப்பும் தமிழ்த்தலைமைகளின் போக்கும் -	பி.மாணிக்கவாசகம்

அடுத்ததாக 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளையும் அரசு திரை மறைவில் முன்னெடுத்திருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டதன் அடையாளமாகவே இலங்கை இந்திய ஒப்பந்தமும், அதன் அரசியல் குழந்தையாகிய மாகாணசபை முறைமையும் திகழ்கின்றது.

அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்தியா தனது பிராந்திய நலன்கள் சார்ந்த அரசியல் மற்றும் வல்லாதிக்கத் தேவைகளுக்கு அந்த ஒப்பந்தத்தின் பங்காளி என்ற ரீதியில் இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியும்.

உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமையை இல்லாமல் செய்துவிட்டால் காலம் கடந்துள்ள இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிடியில் இருந்து இலங்கை நழுவிக் கொள்ள முடியும்.  புதிய ஆண்டில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைக்கு முடிவு கட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்குக் கட்டியம் கூறும் வகையிலேயே மாகாணசபைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட அரச தரப்பின் கடும்போக்காளர்களும் பௌத்த பிக்குகளும் மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாகாணசபையை இல்லாதொழிக்கின்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது என்ற கருத்தும் நிலவுகின்றது. இந்திய ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட அந்த ஆட்சி முறையை இல்லாமல் செய்வதன் மூலம் இந்தியாவின் பிடியில் இருந்து விலகிக்கொள்ள முடியும். மாகாண மட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதையும் தவிர்த்துவிட முடியும்.

இத்தகைய அரசியல் வியூகங்கரைள வகுத்துச் செயற்படுகின்ற அரசாங்கத்தை எதிர் கொள்வதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகள் தங்களைத் தாயர்ப்படுத்திக் கொள்ளவோ அல்லது தங்களை நம்பி இருக்கின்ற தமிழ் மக்களை சரியான முறையில் வழிநடத்தவோ முனைந்திருப்பதாகத் தெரியவில்லை. புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கி ஒர் அரசியல் தீர்வு காண்பதற்கும், ஜெனிவா அமர்வை எதிர்கொள்வதற்கும் தமிழ் அரசியல் கட்சிகள் சில முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ஆனாலும், அதிகார பலமும், வலுவான அரசியல் வியூகத்தையும் கொண்டுள்ள அரசாங்கத்தை வலிந்து வளைத்து தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க ராஜதந்திர ரீதியிலான நகர்வுகளை இந்தக் கட்சிகளிடம் காண முடியவில்லை.

தமிழ்த்தேசிய கட்சிகள் மூன்று பிரிவுகளாகப் பிளவுபட்டு கிடக்கின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும், ஜெனிவா அமர்வைக் கையாள்வதற்கும் இவ்வாறு பிளவுபட்ட செயற்பாடுகளையே அந்தக் கட்சிகள் முன்னெடுத்திருக்கின்றன. உறுதியான செயல் வல்லமையுடன் ஒரே குரலில் ஒலிக்க வல்ல ஓர் அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசிய கட்சிகளிடம் காணமுடியவில்லை. அத்தகைய அரசியல் தலைமைக்கான வெற்றிடம் கடந்த  பதினொரு வருடங்களாகத் தொடர்ந்து நிலவுகின்றது.

உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டங்களில் இராஜதந்திர ஊடாட்டங்களை மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை உயிரோட்டமாக வைத்திருப்பதற்கான எந்தவொரு கட்டமைப்பும் தமிழ் அரசியல் தரப்பில் காணப்படவில்லை. இது தமிழ்த்தரப்பின் மிக மோசமான பின்னடைவாகும். நாடாளுமன்ற அரசியல் என்ற எல்லையைக் கடந்து அரசியல், மனித உரிமைகள், நீதிக்கான தேடல் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் செயற்படத்தக்க கட்டமைப்புக்களோ அல்லது புலமைசார்ந்த குழுக்களோ இன்னுமே உருவாக்கப்படவில்லை.

வெறுமனே நாடாளுமன்ற அரசியலில் காலத்தைக் கடத்துகின்ற ஒரு போக்கையே தமிழ் அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றன. தமிழ்த்தேசியத்துக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அரசியல் செய்வதாகக் கூறுகின்ற அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் அந்த மக்களுக்காக ஏன் ஒருங்கிணைந்து செயற்பட முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.

கட்சி அரசியல் நலன்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அரசியல் அந்தஸ்தை எட்டிப்பிடிப்பதிலும் அவர்கள் காட்டுகின்ற அக்கறையும் ஆர்வமும் தமிழ் மக்களுக்காக ஒருங்கிணைந்து செயற்படுவதில் காண முடியவில்லை. தமது மக்களுக்காகத் தங்களுக்குள் பிரச்சினைகளைக் கூடிப்பேசி அரசியல் நடவடிக்கைகளுக்கு அவசியமான தீர்மானங்களை எடுக்க முடியாதவர்களாகவுமே இருக்கின்றார்கள்.

ஒற்றைத் தலைமை அல்லது ஒருங்கிணைந்த தலைமையின் கீழாவது ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையும் அவசியமும் தமிழ் அரசியலில் நிலவுகின்றன. தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பும் அதுவே. இருப்பினும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தீவுகளாகவே செயற்படுவோம் என்ற பிடிவாதப் போக்கில் இருந்து இன்னுமே விடுபடாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

பல்வேறு நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் கொண்ட கொதிநிலை அரசியலை எதிர்கொள்வதற்கு இறுதி நேரத்திலாவது அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தயாராக வேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவை.