கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமயமாக்கப்பட்டுவருகிறது. கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளி கட்சிகளான ரெலோ,புளெட் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் வரமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது இருக்கும் கோத்தபாய
அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலிலும் அறுதிப்பொரும்பாண்மையோடு வெற்றிபெற்று அவர்களுடைய ஆட்சி இன்னும் ஐந்து,பத்து வருடங்கள் தொடர்வதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமைக்கு முக்கியமான காரணமே ஜக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கின்ற உள் முரன்பாடுகளாகும் இதுவே கோத்தா அரசாங்கத்தை பலமிக்கவர்களாகவும் அவர்களது ஆட்சி காலத்தை தொடர்ந்து நீடித்து செல்வதற்கும் வழிவகுக்க போகின்றது.

இந் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து மறுநாள் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் தாம் அமைச்சு பொறுப்புக்களை எடுத்து எமது மக்களுக்கு அபிவிருத்தியை செய்யப்போவதாக பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.இதனை அதே கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் கோத்தபாயவை நேரில் சந்தித்தபோது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டிருந்தார் அதற்கு கோத்தபாய அவர்கள் காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் 13வது
திருத்தச் சட்டம் தொடர்பில் பரிசீலிப்பதாகவும் இந்தியாவில் வைத்து இந்தியப் பிரதமருக்கு பதிலளித்து விட்டு நாடு திரும்பினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன்,சுமந்திரன் அவர்கள் மோடி 13வது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்டுத்தும் படி கூறியதை தாம் வரவேற்பதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர் இதற்கு முன் 13வது திருத்தச் சட்டத்தை தாம் தும்புத்தடியாலும் தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பகிரங்கமாக கூறியது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

sajith samp கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்து 40 நாட்கள் ஆகியும் தம்மை கோத்தா,மகிந்த அரசாங்கம் அழைத்து பேசவில்லை என்று அரசாங்கத்திடமும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் தங்களுடைய கவலையை தெரிவித்து வரும் கூட்டமைப்பினரின் கருத்தை தற்போதைய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான முக்கிய காரணி ஜனாதிபதித்
தேர்தலுக்கு முன்பாக திரு சம்பந்தன் அவர்களிடம் மகிந்த ராஜபக்ஸ அவர்கள் கடந்தகாலத்தில் விட்ட தவறுகளை இம்முறையும் விடவேண்டாம் என்றும் சஜித் பிரேமதாசாவை ஆதரித்துவிட்டு என்னிடம் அரசியல் தீர்வுக்கு வரவேண்டாம் என்று கூறியிருந்த காரணமாகும்.

ஏமாற்றம் அடைந்திருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போதைய
அரசாங்கத்துடன் நெருங்கிய உறவை வைத்துக்கொண்டு பாராளுமன்ற தேர்தலை கடந்து விடலாம் என்ற நப்பாசையில் இருந்தாலும் கோத்தா அரசாங்கம் அதற்கு இடம் கொடுக்க மறுக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் விரக்தி அடைந்திருக்கின்ற சம்பந்தன்,சுமந்திரன் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜந்துவருடகாலம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அரசுக்கு முண்டுகொடுத்து ஜநா தீர்மானங்களை நீர்த்துப் போகச்செய்துவிட்டு மறுபடியும் அவற்றை தூசி தட்டி எடுத்து மார்ச் மாதம் ஜநா மனித உரிமை கூட்டத்தொடரில் தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது என்று சுமந்திரன் கூறுவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கவனத்தில் எடுத்து கூட்டமைப்பினர் செயற்படுகின்றார்கள்
என்பதை புரிந்து கொள்வதில் அவ்வளவு கடினமிருப்பதாக தெரியவில்லை.

sampanthan dss 1 கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்கூட்டமைப்பினுடைய கடந்த இரண்டு தசாப்த கால அரசியலை தீர்மானிப்பவர்கள் தாமே என்றும் தமிழரசுக் கட்சி எழுபது வருடகாலம் பழமைவாய்ந்த கட்சி என தம்மைத் தாமே கூறிக்கொண்டு அக்கட்சியில் இருப்பவர்கள் வயது முதிர்ந்து தள்ளாடுவதைப்போல் தமிழரசுக் கட்சியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும்
தள்ளாடுகின்ற நிலைக்கு மட்டுமல்லாமல் நடுத்தெருவுக்கு கொண்டுவந்து
விட்டுள்ளார்கள்.

மேற்குறிப்பிடப்பட்ட நிலமைகளுக்கு முக்கிய காரணங்கள் கொள்கைசார்ந்த அரசியலை முன்னெடுக்காமல் சுயநல அரசியல்,தேர்தல் அரசியல்,பணம்,பதவி போன்ற சுகபோகங்களுக்காக அரசுடன் ஒத்தூதி இவர்களால்  இணக்க அரசியலையும் செய்யமுடியவில்லை,கொள்கை அரசியலை செய்யமுடியாதவர்களாக  தமிழ் மக்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

இரண்டு தசாப்த காலத்தில் இவர்கள் பெற்றுக் கொண்டது கம்பெரிலியா நிதியை மட்டுமே அதைக் கூட மக்களின் தேவைகள் அறிந்து எதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்,எப்படி அந்த நிதியை செலவு செய்யப்படவேண்டும், ஒதுக்கபடும் நிதிக்கேற்ற வேலைத்திட்டங்களை சரியாக செய்யப்பபடுகின்றனவா  என்று தெரியாமல் பல வீதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மழைகாலத்திற்கு முன்பும் பின்பும் வீதிகள் போட்ட அடையாளமே தெரியாமல் போய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒப்பந்தகாரர்களிடம் இருந்து கொமிசன் பணம் பெற்றுக்கொண்டதன் விளைவு இன்று கம்பெரலியா நிதியில் நடந்த ஊழல் மோசடிகளை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை நியமிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலே, புளெட் தமிழரசுக் கட்சினுடைய அத்தனை சர்வாதிகரதனங்களுக்கும் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு தமிழ் மக்களுக்கு எதிரான ஜநா தீர்மான கால நீடிப்பில் கையெழுத்திட்டும் வரவுசெலவுத்திட்டம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட அனைத்துக்கும் ஆதரவு வழங்கிவிட்டு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் ஆசனப்பங்கீட்டுக்காக இன்று கூட்டமைப்புக்கள் குடுமி சண்டை பிடிக்கின்றனர்.

ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும்,பாராளுமன்ற,மாகாண சபை, உள்ளுராட்சி தேர்தல்களில் ராஜதந்திரிகளிடமிருந்தும் புலம்பெயர்ந்த மக்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் நிதியை தமிழரசுக் கட்சியே சுருட்டிக்கொள்வதாகவும் தமக்கு சிறிய தொகை நிதிமட்டும் கிடைப்பதாகவும் குற்றம்சாட்டுவதோடு மைத்திரி, ரணில் அரசாங்கத்திலும் வேலைவாய்ப்புகள் அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகளை தமிழரசுக்
கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுவதாகவும் குறைகூறுகின்றனர்.

அதே போல் பங்காளிக் கட்சிகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பிரித்தெடுத்து தமக்கு எதிராக செயற்படவைப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தினால் தமிழரசுக்கட்சிக்குள்
இருக்கவும் முடியவில்லை வெளியேறவும் முடியாத நிலையில் ஆயுதப் போராட்டத்திற்கு தலமைதாங்கிய இரண்டு கட்சிகளின் தலைமைகள் (செல்வம், சித்தார்த்தன்) தமிழரசுக்கட்சியினுடைய அடிமைகளாக தங்களுடைய கட்சி தோழர்களின் தியாகங்களையும் தங்களுடைய நீண்டகால போராட்ட அனுபவங்கள் சுயமரியாதை என்பவற்றை இழந்து தமிழரசுக் கட்சியினுடன் இணைந்து தமிழ் மக்களை நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டுள்ளார்கள்.

எது எவ்வாறாயினும் எழுபது வருடகாலமாக தோற்றுப்போன தமிழரசுக் கட்சியின் ராஜதந்திரத்தை கைவிட்டு தமிழ் மக்களுக்கு ஓர் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கப்போவது யார்? தமிழ் மக்களின் மாற்று தலமையாக உருவெடுக்கப்போகின்றோம் என கூறும் விக்கினேஸ்வரன் அணி கூட்டமைப்பு விட்ட தவறுகளில் இருந்து தம்மை தாமே திருத்தி  தமிழ் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து புதிய அரசியல் தலைமையை கொடுப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.