குறைந்த விலையில் சீனாவின் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

சினோபெக் என்ற சீனாவின் எரிபொருள் நிறுவனம் இலங்கையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை கடந்த புதன்கிழமை (30) ஆரம்பித்துள்ளது. கொழும்பில் முதலாவது நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள இந்த நிறுவனம் எரிபொருட்களை லீற்றருக்கு 3 ரூபாய்கள் குறைவான விலையில் விற்பனை செய்கின்றது.

இலங்கையில் வெள்நாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் சந்தைவாய்ப்பை வழங்குவது என்று இலங்கை அரசு கடந்த வருடம் தீர்மானித்தபின்னர் சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்தியாவின் நிறுவனங்கள் ஏற்கனவே இயங்கிவரும் நிலையில் சீனா தற்போது தனது பணியை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் எரிபொருள் தேவையை பூர்த்திசெய்தல், நீண்டகாலதிற்கான வழங்கலை உறுதி செய்தல் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் சீனா நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களக்கான 20 ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 நிலையங்களை சீனா புதிதாக அமைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் எண்ணைக்களஞ்சியங்களில் சேமிக்கப்படும் எண்ணையை சீனா பயன்படுத்த தீர்மானித்துள்ளதால் எதிர்காலத்தில் இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை இல்லாது செய்து அதன் மூலம் ஏற்படும் அரசியல் அழுத்தங்களை கட்டுப்படுத்த சீனா தீர்மானித்துள்ளதாக தொவிக்கப்படுகின்றது. வடமாகாணத்திலும் 7 நிலையங்களை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.