குருந்தூர்மலை விவகாரம்-மறவன்புலவு சச்சிதானந்தம் பொறுப்பற்றவிதத்தில் அறிக்கை விடக்கூடாது எச்சரிக்கிறார் – ரவிகரன்

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் உள்ள தமிழ் தெய்வங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதோடு, தமிழ்மக்கள் அங்கு வழிபாடுகளை மேற்கொள்ளச் செல்லமுடியாத நிலையே காணப்படுகின்றது.

இந் நிலையில் மறவன் புலவு சச்சிதானந்தம் எமது மதத்தின்பெயரால் பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு, பொறுப்பற்றவிதத்தில் அறிக்கைகளை வெளியிடக்கூடாதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரித்துள்ளார்.

குருந்தூர் மலையிலிருந்த சூலம் மற்றும் இந்து மத அடையாளங்கள் அழிக்கப்படவில்லை எனவும், அதேளை தமிழ் மக்களின் வழிபாட்டிற்கு அங்கு எவ்வித தடைகளும் இல்லை என கோவில் அறங்காவலர் சபைத் தலைவர் சசிக்குமார் தன்னிடம் தெரிவித்ததாக  மறவன்புலவு சச்சிதானந்தம் அண்மையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1 குருந்தூர்மலை விவகாரம்-மறவன்புலவு சச்சிதானந்தம் பொறுப்பற்றவிதத்தில் அறிக்கை விடக்கூடாது எச்சரிக்கிறார் - ரவிகரன்

அந்தவகையில் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மறுத்துள்ள குருந்தூர்மலைக்கோவில் அறங்காவலர் சபைத்தலைவர் சசிக்குமார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் இவ்விடயம் தொடர்பில் எழுத்துமூலமான மறுப்பு அறிக்கை ஒன்றினையும் கையளித்துள்ளார்.

இதனையடுத்து இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன்  இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

‘குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம்  ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், குருந்தூர் மலையிலிருந்த சூலம் மற்றும் இந்து மத அடையாளங்கள் அழிக்கப்படவில்லை எனவும், அதேளை தமிழ் மக்களின் வழிபாட்டிற்கு அங்கு எவ்வித தடைகளும் இல்லைஎனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அத்தோடு கோவிலின் அறங்காவலர் சபைத் தலைவர் சசிகுமார் இத் தகவலை தனக்குத் தெரிவித்ததாகவும், இது தொடர்பாக அறங்காவலர் சபைத் தலைவருடன் தொடர்புகொண்டு விடயங்களை அறிந்துகொள்ளமுடியுமென அறங்காவலர் சபைத் தலைவர் சசிகுமாரின் தொலைபேசி இலக்கமும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்களின் இவ்வறிக்கையினைப் பார்த்ததும் எனக்கு வியப்பாக இருந்தது.

ஏன்எனில் குருந்தூர் மலை தொடர்பான விடயங்களில் அங்குள்ள மக்களுடன் நான் நாளாந்தம் தொடர்புகளைப் பேணிவருகின்றேன்.

அந்தவகையிலே குருந்தூர்மலையில் இருந்த சூலம் உள்ளிட்ட தமிழ் மக்களின் மத அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவே அங்குள்ள மக்கள் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

எனவே இவரது இந்த அறிக்கை  உண்மைக்குப் புறம்பாக இருப்பதை உணர்ந்து உடனடியாக குமுழமுனைப் பகுதிக்குச் சென்று, அங்குள்ள குருந்தூர்மலை அறங்காவலர் சபைத் தலைவர் உட்பட குருந்தூர்மலை கோவில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியபோது, தாங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை என்ற கருத்துப்பட, உடனடியாக எனக்கு எழுத்துமூலமாக அறங்காவலர் சபைத் தலைவர் தனது பெயருடனும், ஐந்தாம் வட்டாரம், குமுழமுனை கிழக்கு, முல்லைத்தீவு என்னும் தனது முகவரியையும் இட்டு, அவரின் கையெழுத்துடன் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் இத்தகைய அறிக்கைக்கு மறுப்பறிக்கை ஒன்றை என்னிடம் கையளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில்,

குருந்தூர் மலையில் நடைபெற்றது இதுதான், இதுவே உண்மை,

கடந்த 2020.03.23ஆம் திகதியன்று குருந்தூர்மலையில் இருந்த முச்சூலம் இந்தெரியாதவர்களினால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் பின்பு நாம் வழிபாட்டிற்குச்சென்றபோது சூலம் காட்டிற்குள் வீசப்பட்டிருந்ததை கண்டோம். அச்சூலத்தினை எடுத்து சூலம் இருந்த இடத்தில் மீண்டும் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுவந்தோம்.

இந் நிலையில் 18.01.2021 அதாவது இராஜாங்க அமைச்சரம், ஆய்வுக்குழுவினர் குருந்தூர் மலைக்கு வருகைதந்தபோது மீண்டும் அந்த ஆதிசிவனும், முச்சூலமும் திருடப்பட்டோ என்னவோ, விசமிகளால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் கடந்த 17.01.2021 அன்று இராஜாங்க அமைச்சர் வருவதற்கு முதல் நாள் ஆலய அறங்காவலர் தலைவராகிய நானே குருந்தூர் மலைக்குப் பொங்கல் பொங்குவதற்காகச் சென்றபோது, அங்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டதுடன், படையினரால் திருப்பி அனுப்பப்பட்டேன்.

இந் நிலையல் மறவன் புலவு சச்சிதானந்தம் என்பவர் என்னால் தெரிவிக்கப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், எனது தொலைபேசி இலக்கத்தினையும் ஊடகங்களில் தெரியப்படுத்தியுள்ளமை எனக்கு மனவேதனையினையும், கவலையுமளிக்கின்றது. என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனக் குறித்த மறுப்பறிக்கையில் குருந்தூர்மலை கோவிலின் அறங்காவலர் தலைவர் சசிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில், நிச்சயமாக அவர் இங்கு வருகைதருவாரானால், அங்கு குருந்தூர்மலைக்குச் செல்வதற்கு படையினர் வழிவிட்டால்  நாம் அவரை அழைத்துச்சென்று நேரடியாக நிலைமைகளை காண்பிக்கமுடியும்.

அங்கு சிவனும், முச்சூலமும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் அதுதான் உண்மையான நிலைமை.

காணால் ஆக்கப்டுவது இவர்களுக்குக் கைவந்த கலையாகும். மக்களை காணாமல் ஆக்கியதன் தொடரச்சியாக, தற்போது தெய்வங்களையும் காணமல் ஆக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதற்கு இச்சம்பவம் ஒரு ஆதாரமாகும்.

மேலும் அங்கு மக்கள் செல்வதற்குத் தற்போதும் தடைவிதிக்கப்படுகின்றது.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1 குருந்தூர்மலை விவகாரம்-மறவன்புலவு சச்சிதானந்தம் பொறுப்பற்றவிதத்தில் அறிக்கை விடக்கூடாது எச்சரிக்கிறார் - ரவிகரன்

இந்த நிலையில் அவரது இத்தகைய கருத்தானது எமக்கு மிகுந்ந வேதனையழிக்கின்றது.

அவர் காணாத ஒரு விடயத்தினை, அவருக்குத் தெரியாத விடயத்தினைப்பற்றி அவர் ஏன் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கவேண்டும்.  யாருக்கு ஆதரவாக இவர் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கின்றார். எமது மத அடையாளங்களை அழிக்கும், அழிக்க முற்படுகின்ற தரப்புகளுக்காக ஆதரவாக கருத்துத் தெரிவிக்கின்றார்.

நாம் இந்த இடத்திலே இருந்துகொண்டிருக்கின்றோம். நிச்சயமாக அவருடைய கருத்துக்கள் பொய்யானவை. எனவே இவ்வாறான தவறான தகவல்களைப் பரப்பவேண்டாம்.

அதேவேளை அவருடைய அறிக்கையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் வருகைதந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய இத்தகைய கருத்தையும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஏன் எனில்  நீதிமன்றத் தீர்ப்பின்படி யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களை அழைத்தே ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர பேராதனைப் பல்கலைக்கழகமாணவர்களை அழைத்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு சொல்லப்படவில்லை.

கடந்த 18.01.2021அன்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க வருகைதந்தபோது இராணுவத்தின் கொடிகள் அங்கே பறக்கவிடப்பட்டிருந்தன. அன்றைய தினம் இராணுவ ஆதிக்கத்தோடுதான் அந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறு இராணுவ ஆதிக்கத்துடன் குருந்தூர்மலைப் பகுதியில் நிகழ்வுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் நீதிமன்றக் கட்டளைகள் இருக்கவில்லை.

அங்குள்ள பல மரங்கள் வெட்டப்பட்டுக் காணப்படுகின்றன. மரங்களை வெட்டக்கூடாதென அரசு அறிவித்தல்களை வெளியிடுகின்றது. ஆனால் படைகள் மரங்களை வெட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக செங்கற்கள் உட்பட பல கட்டுமானப் பொருட்களையும் அங்கு காணக்கூடியதாகவிருந்து.

ஆய்வுப் பணிகள்தான் மேற்கொள்வதாகவிருந்தால், அங்கு கட்டுமானப் பொருட்கள் பல கொண்டு செல்லப்பட்டதற்கான காரணம் என்ன? இவ்வாறாக பல பொருத்தமற்ற செயற்பாடுகள் பல இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் எமது மதத்தின் பெயரால் பொறுப்பான பதவிகளில் இருந்துகொண்டு, பொறுப்பற்ற விதமாக அறிக்கைகளைவிடுவதை மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்” – என்றார்