குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் கருத்தை அறிவதற்கான ஒன்றுகூடல்

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஈழத் தமிழர்களின் விருப்பங்களையும் கருத்துக்களையும் அறிவதற்கான ஒன்றுகூடல் ஒன்று நேற்றைய தினம்(03) சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் மிகப் பெரியளவில் எதிர்ப்புகளையும், விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. இந்தச் சட்டத்தால் குடியுரிமை வழங்கப்படுவதில் ஈழத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பின.

குடியுரிமைச் சட்டத்தின் மீதான விவாதத்தின் போது ஈழத் தமிழர்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை அரசியல் கட்சிகளைக் கடந்து ஒலித்தது. இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் திரும்பிச் செல்லவே விரும்புகின்றனர் என அரசியல் தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியது.

இதேவேளை ஈழத் தமிழர்களின் மனநிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக விகடன் ஊடகத்தினர் அகதிகள் முகாம்களுக்கு சென்று அவர்களின் அபிப்பிராயங்களை கேட்க முற்பட்ட போது விகடன் நிருபர் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

எனினும் அவர்கள் பெற்றுக் கொண்ட தகவல்களின்படி ஈழத் தமிழர்களில் அனேகமானவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் செல்லவில்லை என்றும் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும் என்பதை தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாடுகளை அறிவதற்கான விவாதம் நடைபெற்றது. இதில் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டு பேசினர். தங்களுடைய கருத்தை வெளியிட்ட விகடன் ஊடகத்தினருக்கு அவர்கள் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

அங்கு பேசிய ஈழத்தமிழர்கள், “இங்குள்ள தமிழர்களுக்க அரசால் என்னென்ன அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றதோ, அதே வசதிகள் எங்களுக்கும் குறைவில்லாமல் கிடைக்கின்றன. அடிப்படைத் தேவைகள் கிடைத்துள்ளனவே தவிர, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு முன்பு வரை நாங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக கருதப்பட்டது எங்களுக்குத் தெரியவில்லை. இந்தியா எந்த அகதிகள் உடன்படிக்கையிலும் கையொப்பமிடவில்லை. அரசிற்குத் தெரியாமல் ஒரு நாட்டிற்கு சென்று தங்குபவர்கள்தான் சட்டவிரோதக் குடியேறிகள் ஆவார்கள்.

நாங்கள் அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்டு முப்பது ஆண்டுகளாக அரசின் கண்காணிப்பின் கீழேயே வசித்து வருகின்றோம். எங்களைச் சட்டவிரோமதாக குடியேறியவர்கள் எனச் சொல்வதோ, இல்லை அவ்வாறு நடத்துவதோ தவறு. போரினால், இனக்கலவரத்தினால் உயிர் தப்பித்து வருபவர்கள் என்ன ஆவணங்களை கையில் எடுத்து வர முடியும். என்று வினா எழுப்பினர்.

இந்த விவாதத்தில் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.