கிழக்கு மாகாண விசேட காணிக்குழு விவகாரம்: ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள விசேட குழு மற்றும் கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய காவல்துறைப் பிரிவு ஆகியவற்றை நியமிக்க அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானத்திற்கு ‘இலங்கை நீதிக்கான மய்யம்’ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசரக் கடிதத்தில், குறித்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு அல்லது இடைநிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தை மட்டும் இலக்கு வைத்து எடுக்கப்பட்ட இந்தத் தன்னிச்சையான நடவடிக்கை, தேவையற்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் மக்களிடையே தோற்றுவிப்பதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

காணி ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் என்பன நாடு தழுவிய பிரச்சினைகளாக இருக்கையில், கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இத்தகைய விசேட பொறிமுறையை உருவாக்குவது அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) உறுப்புரைகளுக்கு முரணானதும், இன மற்றும் பிராந்திய ரீதியான பாகுபாட்டைக் காட்டுவதுமாகும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரச காணிகள் சட்டங்கள், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் கடலோரப் பாதுகாப்புச் சட்டம் என போதுமான சட்டக் கட்டமைப்புகள் நாட்டில் நடைமுறையில் உள்ள நிலையில், புதிய குழுக்களின் அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்டங்களை பிரதேச செயலாளர்கள் மற்றும் காவல்துறை ஊடாக ஒன்பது மாகாணங்களிலும் பாரபட்சமின்றிச் செயற்படுத்துவதற்கே உண்மையான அரசியல் விருப்பம் தேவைப்படுகிறதே தவிர, புதிய குழுக்கள் அல்ல என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எனவே, சர்ச்சைக்குரிய இந்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நிறுத்தி வைத்து, வெளிப்படையான பொதுமக்கள் ஆலோசனைகளை மேற்கொள்வதோடு, நாடளாவிய ரீதியில் சட்டத்தை சமத்துவமாக அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.