கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்

2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும், தமிழ் மக்கள் மீதான பேரினவாத அடக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் முனைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை எதிர்ப்புகள் இன்றி இலகுவாக முன்னெடுத்துச் செல்ல இவர்கள் இன்று மீண்டும் கையில் எடுத்துள்ள ஆயுதம் ‘பிரித்து ஆள்தல்’ என்பதாகும். எமது கைகளாலே எம்மை குத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரச தரப்பு மிகக் கச்சிதமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இளைஞர்கள் இந்த நாட்டில் தமிழர்களுக்கு விடுதலை கோரி ஆயுதப் போராட்டத்தில் உணர்வு ரீதியாக குதித்த போது, அவர்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி போராட்டங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகள் முன்னெடுத்திருந்தன.

அந்த வகையில் தொடர்ச்சியான விடுதலைப் போராட்டம் ஊடாக தமிழர்களின் வீரத்தினையும் தமிழர்களின் நியாயமான கோரிக்கையினையும் உலகின் பக்கம் கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப்புலிகள் விடயத்திலும் பல வகையான பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

இவ்வகையான பெரும்பாலான முயற்சிகள் பயனற்று போனபோதும், (மாத்தையாவை பயன்படுத்தி இந்தியா விடுதலைப் போராட்டத்தை அழிக்க மேற்கொண்ட முயற்சி இதில் குறிப்பிடத்தக்கது) கருணாவை கொண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினை பலவீனப்படுத்தும் முயற்சியில் சிங்கள பேரினவாதம் ஓரளவு வெற்றி பெற்றதென்றே கூறவேண்டும்.

ஆயினும் ‘கிழக்கை பிரித்தெடுத்தல்‘ என்ற அவர்களின் குறிக்கோளை அவர்களால் எட்ட முடியவில்லை. பல்வேறு பிளவுகள் பிரித்தாளும் தந்திரங்களை கிழக்கில் பேரினவாதிகள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போதிலும் இங்குள்ள தமிழ் மக்களின் ஒன்றுபட்ட தேசியம் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை அவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை.

விடுதலைப்புலிகளின் காலத்திற்கு பின்னர் கிழக்கில் பிள்ளையான், கருணா ஆகியோரை பயன்படுத்தி அரசியல் செய்து தமது எண்ணங்களை நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று பேரினவாதம் கிழக்கில் தமிழ் மக்களினால் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட சந்தர்ப்பவாதிகளையும் தனிப்பட்ட சுயதேவையுடையவர்களையும் இணைத்து தமிழர்களின் கூட்டணியென்ற பெயரில் பல்வேறு குழுக்களை உருவாக்கி அவற்றை தமது தேவைகளுக்காக பயன்படுத்தும் நடவடிக்கையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை உறுதி செய்வதில் மட்டக்களப்பு மாவட்டம் காத்திரமான பங்கை வகித்து வருகிறது. இங்கு அதிகளவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாணசபை உறுப்பினர்களை தமிழ் தேசியம் சார்ந்து தமிழ் மக்கள் தெரிவு செய்து வருகின்றனர். இந்த நிலைமையை சீர்குலைக்கும் நோக்குடனே இன்று மட்டக்களப்பில் பல்வேறு ‘அரசியல் குழுக்கள்’ தோற்றுவிக்கப்படுகின்றன.

அதற்காக கோடிக்கணக்கில் பணமும் இறைக்கப்படுவதகாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றி பெற்ற பியசேன, வியாழேந்திரன் போன்றவர்கள் பேரம் பேசலில் சோரம் போன வரலாறு நாம் அறிந்ததே.

எதிர்வரும் சித்திரை மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ் தேசியத்திற்கு எதிரான பல்வேறு குழுக்களை ‘தமிழர்’ என்ற அடையாளத்துடன் களமிறக்கும் முனைப்பு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பில் இருந்து ‘கிழக்கு தமிழர் ஒன்றியம்’ என்னும் பெயரில் ஒரு பகுதியினரும் ‘கிழக்கு தமிழர் கூட்டணி’ என்ற வகையில் ஒரு பகுதியினரும் தங்களுக்கு ஏற்றாற்போல் கூட்டணிகளை ஒன்று சேர்க்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.IMG 2e69b5790e1bd2b05d9c809766466d98 V கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஊடாக பிள்ளையான் கருணாவினை ஒருங்கிணைத்து ஒரு அணியாக களமிறங்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில், கிழக்கு தமிழர் கூட்டணி ஊடாக வியாழேந்திரன், அருண் தம்பிமுத்து போன்ற, தமிழர்களினால் புறக்கணிப்பட்டு விரட்டப்பட்டவர்களை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான கூட்டணிகளின் பின்னால் பேரிவான கட்சிகள் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்த உண்மையாகவுள்ளது.

இவற்றிற்கு மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இக்கூட்டணிகளில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன. தமிழ் தேசிய கொள்கைக்கு அப்பால் செயற்படும் எந்த அமைப்புகளுடனும் கூட்டணிகளை ஏற்படுத்த முடியாது என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கிழக்கு தமிழர் ஒன்றியம், கிழக்கு தமிழர் கூட்டணி ஆகிய இரு அமைப்புகளும் தற்போதைய ஜனாதிபதிக்கு சார்பான கள பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த அமைப்புகளாகும். இந்த அமைப்புகள் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென அறிவித்திருந்த போதிலும், தேர்தல் நெருங்கி வரும் காலத்தில் அவற்றின் முகத்திரைகள் விலக ஆரம்பித்துள்ளன. அதில் உள்ளவர்கள் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர்களாக மாறியுள்ளனர்.

மறுமுனையில் பட்டிருப்பு தொகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தியினால் ‘இலங்கைத் தமிழர் முற்போக்கு முன்னணி’ எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்று இந்த கட்சியை ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய ஆட்சியாளர்களின் தொடர்புகளுடன் முன்னாள் பிரதியமைச்சரினால் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.625.0.560.320.160.600.053.800.700.160.90 கிழக்கில் முனைப்புறும் பிரித்தாள்கை; முளைக்கும் புதிய கூட்டுகள்-மட்டூரான்

நில அபகரிப்பு, காணாமல் போனோர் பிரச்சினை, இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகள் என பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பலத்தினை சிதைப்பதன் மூலம் கிழக்கில் உள்ள தமிழர்களின் குரல் வளையினை நசக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறாக கூட்டமைப்புகளை உருவாக்கி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள வாக்கு பலத்தினை சிதைத்து தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியும் என அரசு எண்ணுகின்றது.

மேலும் அண்மையில் மட்டு. ஊடக அமையத்தில் ஏழு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக செயற்படும் ஊடகவியலாளர்களின் குரல்வளையினை நசுக்குதல் உட்பட கிழக்கின் நிலைமைகள் தொடர்பில் வெளிப்படுத்தல்களை தடுக்கும் வகையில் இந்த செயற்பாடுள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் இருப்பு இங்கு உறுதி செய்யப்பட வேண்டுமானால், தமிழர் தேசிய அரசியலில் ஈடுபடும் கட்சிகள் தம்மை சுயபரிசோதனைக்குட்படுத்திக் கொண்டு மக்களின் தமிழ் தேசிய நலனுக்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட வேண்டும். அவை தமக்குள் ஒரு குறைந்தபட்ச பொது இணக்கப்பாட்டையாவது ஏற்படுத்தி பயணிக்க வேண்டும்.

வடக்கில் உள்ள அரசியல் புவிசார் நிலைமைகள் வேறு. இங்குள்ள நிலைமைகள் வேறு. இந்த வகையில் இங்குள்ள தமிழ் தேசிய அரசியற் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது தவிர்க்க முடியாத காலத் தேவையாகும். அவ்வாறு இல்லையாயின் கிழக்கில் தமிழரின் இருப்பே இல்லை என்ற நிலை ஏற்பட நெடுநாளாகாது.