காவல்துறை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

காவல்துறை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தொடர்பில் விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்து செல்லும் நோக்கில் தற்போது குறித்த வாகனங்களுக்கான ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரங்கள், காவல்நிலைய பொறுப்பதிகாரிகளின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து அனுமதி பத்திரங்களை மட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 11 ஆயிரத்து 607 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் இரண்டாயிரத்து 878 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 151 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.