கால் நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு என்ன??? – ஹஸ்பர் ஏ ஹலீம்

நாட்டின் தேசிய உற்பத்தியில் பால் உற்பத்தி என்பதும் பாரிய பங்கு வகிக்கின்றது இதன் மூலமாக இதனை பெற வேண்டுமாக இருந்தால் கால் நடை வளர்ப்பான பசு மாடு போன்றவற்றை வளர்ப்பில் ஈடுபடுத்தவும் அதனை பாதுகாக்கவும் முயற்சிக்க வேண்டும். திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியானது ஒரு விவசாய பூமியாகவும் கால் நடை வளர்ப்பின் மூலமாக வருமானங்களை ஈட்டக்கூடிய பால் உற்பத்தி மூலமான தயிர்,பால் விற்பனையும் இடம் பெற்று வரும் ஒரு பிரதேசமாக காணப்படுகிறது.

trinco cattle farmers கால் நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு என்ன??? - ஹஸ்பர் ஏ ஹலீம்கால் நடை வளர்ப்பாளர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்ற தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றார்கள்.

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் பதிவு செய்யப்பட்ட 45க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் அவர்கள் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி  பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். கோடைகால சிறுபோக செய்கையின்போது நெற்செய்கை மேற்கொள்ளப்படாத தம்பலகாமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து தமது கால்நடைகளை பராமரித்து வருகின்றபோதும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற காலப்பகுதிகளில் தங்கள் கால்நடைகளை வைத்து பராமரிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் இதனால் பெரும்பாலான பண்ணையாளர்கள் கால்நடை வளர்ப்பினை கைவிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற நவம்பர் மாதம் தொடக்கம் தைப்பொங்கல் வரையான 75 நாட்களுக்கு தம்பலகாமத்தில் இருந்து 58 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மொரவெவ குளத்தை அண்மித்துள்ள பகுதியில் சிலர் தமது கால்நடைகளை வைத்து பராமரித்து வருகின்றனர். இவர்களில் தம்பலகாமத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் பண்ணையாளர்கள் 20 பேரும், மொரவெவ பகுதியைச் சேர்ந்த ஒரு பண்ணையாளரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே கால்நடைகளுக்கான நிரந்தரமான மேய்ச்சல் தரையை வழங்குமாறும் இல்லாவிடில் பெரும்போக செய்கையின்போது கால்நடைகளின் மேய்ச்சலுக்காக தற்காலிக இடங்களையாவது வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாட்டின் ஜனாதிபதி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்குமாறும் கால்நடைகளின் உற்பத்திகளை அதிகரிக்குமாறு கூறிவருகின்றபோதும் கால்நடை வளர்ப்பிற்கான மேய்ச்சல் தரைகள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்னர் வனஜீவி மற்றும் வனவளத்துறை திணைக்களினால் பெரும்பாலான மேய்ச்சல்தரைகள் கையகப்படுத்தப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் அது விடுவிக்கப்படாமையினால் பெரும்பாலான பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை விற்று வருகின்றார்கள்.

Trinco farmers கால் நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு என்ன??? - ஹஸ்பர் ஏ ஹலீம்1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடவான பகுதியில் கால்நடை வளர்ப்புக்காக 1500 ஏக்கர் மேய்ச்சல் தரை நிலம் வழங்கப்பட்டிருந்ததுடன் அப்பகுதியில் 60 பேருக்கான உறுதிக்காணி 120 ஏக்கரும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவையும் தற்போது வனஜீவி மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறான நிலை தொடருமானால் தாமும் கால்நடை வளர்ப்பை கைவிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

கால் நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் தரையின்றி பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் கால் நடைகளை முறையாக வளர்ப்பதன் ஊடாக உற்பத்திகளை அதிகரிக்கலாம் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கால் நடை வளர்ப்பான பசு மாடுகள் அரச சார்பற்ற நிறுவனம் ஊடாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வழங்கப்பட்டிருந்தன. ஆனால் முறையான தீர்வில்லாமல் மேய்ச்சல் தரையின்றிய நிலையில் வாழ்கின்றார்கள்.

கால் நடை வளர்ப்பாளர் ஒருவர் தம்பலகாமம் பாலம்போட்டாறு ஊத்தை வாய்க்கால் ஆற்றுப்பகுதியில் கால் நடை மேய்ச்சலின் போது முதலை தாக்குதளுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான கே.சசிகுமார் வயது (36) என்பவரே இவ்வாறு பலியானார்.

இவ்வாறாக இதே பகுதியில் தங்களது மாடுகளை மேய்ச்சலின் போதும் முதலை கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .அன்றாட ஜீவனாம்சமாக காணப்படும் இக் குடும்பத்தின் எதிர்கால நிலை தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது இருந்த போதிலும் உயிரிழந்தவருக்காக பத்து இலட்சம் அரசாங்கம் மூலமாக வழங்கப்படவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாவுக்கான காசோலை 2023.12.04 ந் திகதி தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வைத்து உயிரிழந்தவரின் மனைவிக்கு வழங்கப்பட்டது இதனை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ,பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் வழங்கினர். மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் தம்பலகாமம் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடலும் பிரதேச செயலக மண்டபத்தில் 04.12.2023 இடம் பெற்றது. பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட செயலாளரிடம் எடுத்துரைத்தனர்.

பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரை வழங்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான  பால் உற்பத்தியை அதிகரித்து அதன் மூலம் நல்லதொரு வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதை எதிர்பார்ப்பாக கொள்கின்றனர்.