காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த மாவட்டங்களில் எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு எட்டு மணி வரை நாளாந்தம் இரவு எட்டு மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி வார இறுதி நாட்களான எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.