கபோனின் முன்னாள் அரச தலைவர் வெளிநாடு செல்ல அனுமதி

அண்மையில் இராணுவப்புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்ட கபோன் நாட்டின் முன்னள் அதிபர்  அலி பொங்கோ ஒடிம்பா வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், மருத்துவ தேவைக்காக வெளிநாடு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14 வருடங்களாக பதவியில் இருந்த அலி கடந்த மாதம் 30 ஆம் நாள் மீண்டும் தான் தேர்தலில் வெற்றியீட்டியதாக அறிவித்ததை தொடர்ந்து அங்கு இராணுவம் அரசை கைப்பற்றி அவரை வீட்டுக்காவலில் வைத்திருந்தது.

அரச தலைவரை விடுவிப்பதற்கு புதிய அரசு இணக்கம் தெரிவித்தபோதும், அரச தலைவரின் மனைவி உட்பட பல குடும்ப உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் அவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவில் உள்ள பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் உள்ள பல நாடுகளில் தொடர்ச்சியாக இராணுவப் புரட்சிகள் ஏற்பட்டுவருவதுடன், மேற்குலக படையினரையும் அந்த நாடுகள் அங்கிருந்து வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.