கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக இன்று (11) திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பலர் திரண்டிருந்தனர்.
இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றப்பட்டு நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பலர் நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர்.
இதேவேளை, கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் மேயர் பெற்றிக் பிரவுண் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.
‘நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது’ என்று அவர் தமது உரையின் போது வலியுறுத்தினார்.
‘இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என கூறுபவர்களுக்கு பிரம்டனிலும் கனடாவிலும் இடமில்லை. கொழும்பிற்கு திரும்பி செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார்.
‘ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தினால் படுகொலை செயப்பட்டார்கள்’.
‘இலங்கை அரசாங்கம் தவறான தகவல்களை பரப்பிவருகின்றது’
‘அவர்கள் உண்மைக்காகவும் நீதிக்காவும் குரல்கொடுத்த தமிழர்களை இழிவுபடுத்தவும் தாக்கவும் முயன்றனர்’.
‘இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல்’ என்றும் பிரம்டன் மேயர் தெரிவித்துள்ளார்.
‘தமிழர் படுகொலை நினைவுதூபி என நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன’ என்றும் பிரம்டன் மேயர் பெற்றிக் பிரவுண் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ‘கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும்’ என்று கனடாவின் நீதியமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
‘இந்த நினைவுத்தூபி இலங்கையில் அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிரான இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவுச்சின்னமாக விளங்குகின்றது’.
‘உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் வலிமை மற்றும் மீள் எழுச்சி தன்மையை இது கௌரவிக்கின்றது. அவர்களின் அர்ப்பணிப்பே இந்த நினைவுத்தூபி உருவாகுவதற்கான காரணம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக குரல்கொடுக்கும் அதேவேளை ஐக்கியப்பட்டவர்களாக வலிமையானவர்களாக விளங்குவோம்’ என்றும் கனடாவின் நீதியமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.