கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தற்போதும் தொடர்கின்றது – சுரேஸ்

கட்டமைக்கப்பட்ட இன அழிப்புகள் முள்ளிவாய்க்காலுடன் நின்று விடாமல், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். ‘இலக்கு’ வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மிகப்பெரும் பேரழிவாகவே முள்ளிவாய்க்கால் படுகொலைச் சம்பவத்தினை நாம் பார்க்கின்றோம். முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது உலக நாடுகள் தங்களுடைய பிராந்திய நலனுக்காக திட்டமிட்டு மேற்கொண்ட ஓர் படுகொலையாகும். மனித இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலை. வகை தொகையின்றி, வயது வேறுபாடுகள் இன்றி எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். நிராயுத பாணிகளாக நின்ற சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்கள். மிகப் பெரும் மனித படுகொலை அரங்கேறிய ஒரு களமாகத் தான் முள்ளிவாய்க்கால் இருக்கின்றது.

எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 72வருடங்களுக்கும் மேலாக பெருமளவிலான அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டினை சிங்கள பௌத்த நாடாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறான படுகொலைகளை இந்த நாட்டு அரசுகள் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றன. கட்டமைக்கப்பட்ட இன அழிப்புகள் முள்ளிவாய்க்காலுடன் நின்று விடாமல், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த செயற்பாடுகளுக்கு உடந்தையாக கடந்த காலத்திலே தமிழ் தலைவர்கள் செயற்பட்டு வந்துள்ளார்கள். தற்போதும் அந்த நிலைப்பாட்டிலிருந்து அந்த தலைவர்கள் மாறவில்லை. அண்மையில் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 46/01 பிரேரணையானது, முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடிமறைத்து, தமிழ் மக்களுக்கான நீதியை கோருவததை கேள்விக்குட்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை கண்மூடித் தனமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆதரித்திருந்தார்.

யுத்தம் முடிந்து 12வருடங்கள் கடந்துள்ள நிலையில், இங்கு நடைபெற்றது இனப் படுகொலை என்பதை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வந்தது. அதற்கு உடந்தையாக தமிழ்த் தலைவர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு தமிழ் மக்கள் தங்களுக்கான பூர்வீகமான வடகிழக்கினை தாயகமாக கொண்டவர்கள். எங்களுக்கு நடைபெற்ற இனஅழிப்புசார் நடவடிக்கைகளுக்கு பக்கச் சார்ப்பற்ற விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு நடைபெற்றது இனப்படுகொலையென்பதை சர்வதேசத்திற்கு தாயக மக்கள் இடித்துரைக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.