ஐ.நா.மனிதவுரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு காத்திருக்கும் ஏமாற்றம்!

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா அங்கம் வகிக்காததால், இலங்கைக்கு எதிரான தற்போதைய தீர்மானம் 2021 மார்ச் மாதத்தில் காலாவதியாகும் போது புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றச் செய்வதில் இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கப் போகின்றன.

அமெரிக்கா அந்தப் பேரவையில் இல்லாத சூழ்நிலையில் புவிசார் அரசியல் யதார்த்தங்கள் இலங்கைக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றுவதற்கு பாதகமாகவே அமையும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

அமெரிக்கா, பேரவையில் அங்கம் வகித்து 2012ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட வருடங்களில் தீர்மானங்களுக்கு அனுசரணை வழங்கியபோது அவற்றுக்கு போதுமான வாக்குகள் கிடைத்தன.

ஆனால், பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுகின்ற பொறுப்பு வல்லமை குறைந்த நாடுகளிடமே பாரப்படுத்தப்படுகிறது. இந்த நாடுகளுக்கு தீர்மானத்தை நிறைவேற்ற செய்வதற்கான வல்லமை அல்லது செல்வாக்கு இல்லை’ என்று ஒரு வட்டாரம் கூறியது.

2011ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் ஒன்றுக்கு அனுசரணை செய்ய விரும்பியபோது மனிதவுரிமைகள் பேரவையில் அதற்கு ஆதரவளிப்பதற்கு போதுமான நாடுகள் இல்லை என்பதை புரிந்து கொண்டது. அதனால் அது அனுசரணை வழங்குவதிலிருந்து விலகியது. 2012இல் அமெரிக்கா இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது மாத்திரமே இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. தீர்மானத்துக்கு அமெரிக்கா ஆதரவளித்த சகல சந்தர்ப்பங்களிலும் அது நிறைவேற்றப்பட்டது.

2015ஆம் ஆண்டிலிருந்து 2019வரை பதவியிலிருந்த முன்னைய இலங்கை அரசாங்கம் வீழ்ச்சிகாணும் வரை தனக்கு எதிரான தீர்மானங்களுக்கு இலங்கை இணைஅனுசரணை வழங்கியது. தீர்மானங்கள் வாக்கெடுப்பில்லாமலேயே நிறைவேற்றப்பட்டன என்று தன்னை அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த வட்டாரம் கூறியது.

தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் இல்லாதபட்சத்தில் அதை அறிமுகப்படுத்துவது பயனற்ற ஒரு செயல் என்று நாம் புரிந்து கொண்டோம். எனவே, நாம் ஐக்கிய இராச்சியத்தினதும் ஜேர்மனியினதும் தலைமையிலான பிரதான குழுவுடன் (Core Group) ஆராய்ந்ததுடன் ஆபிரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் ஊடாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டோம் என்று முன்னணி தமிழ் அரசியல்வாதி ஒருவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பாச்லெட்டினாலும் பிரதான குழுவின் பிரதிநிதிகளினாலும் வெளியிடப்பட்ட கடுந்தொனியிலான அறிக்கைகளை நாம் முக்கியமானவையாக கருதுகிறோம் என்று அந்த தமிழ்த் தலைவர் கூறினார்.

ஆனால், பாச்லெட் தனது பிந்திய உரையில் இலங்கைக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் விட்டுவிட்டார்போல் தெரிகிறது என்று மற்றைய வட்டாரங்கள் கூறின. இலங்கை மீது புதிதாக கவனத்தை செலுத்துமாறு மனிதவுரிமைகள் பேரவையை கேட்கும் தளர்வான அறிக்கையொன்றினையே அவர் வெளியிட்டார் என்று ஒரு ஊடக செய்தி கூறியது. பாச்லெட் கடும் சீற்றத்துடன் பேசினார் என்று இன்னொரு வட்டாரம் கூறியது.

சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் 45ஆவது கூட்டத்தொடருக்கு பாச்லெட் விடுத்த அறிக்கையில், இலங்கையிலுள்ள அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை மாத்திரமே குறிப்பிட்டதுடன் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றுக்கான அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு இலங்கை மீது புதிதாக கவனத்தை பேரவை செலுத்தும் என்று கூறினார்.

கடந்த காலத்தை போலன்றி, சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தாமல் உயர்ஸ்தானிகர் பாச்லெட் விட்டுவிட்டார். இது இலங்கையுடன் ஒரு தளர்வான முறையில் இலங்கை விவகாரங்களை கையாளுவதற்கு பேரவை நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடும் என்று சூசகமாக கூறியிருக்கிறார்.

human rights ஐ.நா.மனிதவுரிமைப் பேரவையில் ஈழத்தமிழருக்கு காத்திருக்கும் ஏமாற்றம்!
A participants during the Human Rights Day Event.

இதேபோன்ற ஒரு நிகழ்வு போக்கில் கனடா, ஜேர்மனி, வடமெசெடோனியா, மொன்டிநீக்ரோ மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரதான குழுவின் சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட மனிதவுரிமைகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச தூதுவர் ரீட்டா பிரெஞ் இலங்கை சிவில் சமூகத்தவர்களுடனும் மனிதவுரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களுடனும் உறுதியான உரிமைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன் அவர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, இலங்கையின் பல்வேறு சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் நீதியானதும் அமைதியானதுமான சகவாழ்வையும் மேம்படுத்துவதற்கு இலங்கை தொடர்ந்து பற்றுறுதியுடன் செயற்படுவதை ரீட்டா பிரெஞ் மெச்சினார்.

அந்த வகையாக நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருப்பது கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குள் தள்ளவேண்டும் என்று விரும்புகின்ற தமிழ் ஆதரவு அமைப்புகளுக்கு உற்சாகமான சமிக்ஞையை காட்டவில்லை.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்ட அரசாங்கம் சிவிலியன் பதவிகளில் இராணுவ அதிகாரிகளை அமர்த்தும் போக்கை அதிகரித்திருப்பதுடன் 33வருடங்களுக்கு முன்னர் 1987 செப்டெம்பர் 26ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் மரணமடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திலீபனை நினைவு கூருவதற்கான நிகழ்வை அண்மையில் தடைசெய்தும் இருக்கிறது.

தமிழரசு.