ஏட்டுச் சுரைக்காய் – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.இதன் தாக்க விளைவுகள் மலையகத்தில் அதிகளவில் எதிரொலிக்கக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்கள் தனித்துவிடப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றமையானது இவ்வபாய நிலைக்கு மேலும் வலுசேர்ப்பதாகவுள்ளது.

இதனிடையே சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் கடுமையான சட்ட மூலமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டம் குறித்த நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

child ஏட்டுச் சுரைக்காய் - துரைசாமி நடராஜாநாளைய உலகை படைக்கும் சிற்பிகளாக சிறுவர்கள் விளங்குகின்றார்கள்.எனவே இவர்களின் நலன் பேணி சிறந்த முறையில் ஒழுக்கசீலர்களாகவும், நாட்டிற்கு பொருத்தப்பாடுடையவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாடு சமூகத்தின் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது.சிறுவர்களின் உரிமைகள் பலவுள்ள நிலையில் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் காணப்படுகின்றது.

சிறுவர் உரிமைகளை வலியுறுத்தும் சாசனங்கள் பல காணப்படுகின்றன.இவற்றுள் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைப் பிரகடனம் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.

சிறுவர்களின் நலன்களை பேணும் நோக்கில் 1924 இல் ஜெனிவாவில் சிறுவர்களை பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.எனினும் அது சட்ட ரீதியான அங்கீகாரம் பெறாமையால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.இதேவேளை 1948 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டது.

எனினும் இதன் சாதக விளைவுகள் குறைவாக இருந்தன.எனவே 1959 இல் ஐ.நா.பொதுச்சபையினால்  சிறுவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பத்து அம்சங்களை உள்ளடக்கிய சிறுவர் உரிமைப் பிரகடனம் உருவாக்கப்பட்டது.இப்பிரகடனமும் 1924 ம் ஆண்டு பிரகடனத்தைப் போலவே சட்ட வலுவற்றதாகிவிட்டது.

இதன் பின்னர் 1989 இல் ஐ.நா.பொதுச்சபையினால் சிறுவர் உரிமைப் பிரகடனம் மீண்டும் உருவாக்கப்பட்டது.இப்பிரகடனம் 1990 இல் சட்ட ரீதியாக அங்கீகாரம் பெறப்பட்டு நடைமுறைக்கு வந்தது.1991 இல் இலங்கை அரசு இதனை உறுதிப்படுத்தியது.சிறுவர் உரிமைப் பிரகடனமானது சிறுவர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்பதை வலியுறுத்துவதுடன் சிறுவர்களை முழுமையாக பாதுகாத்து அவர்களை சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கான சகல அம்சங்களையும் கொண்டதாக விளங்குகின்றது.

இதேவேளை இலங்கையும் சிறுவர் உரிமைகளை பாதுக்காக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.1883 இல் முதன்முறையாக கோவையாக்கப்பட்ட தண்டனை சட்டக் கோவை  மூலம் சிறுவர்களின் பாதுகாப்பு தன்மைக்கான பழைமைவாய்ந்த சட்டங்களின் ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக 1939 ம் ஆண்டில் சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினர் பற்றிய கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது.இச்சட்டம் இன்று அதிகமாக பாவிக்கப்படுகின்ற ஒரு கட்டளைச் சட்டமாக உள்ளது.இந்தக் கட்டளைச் சட்டம் (CYPO) என்னும் சுருக்கப்பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றது.

1956 ஆம் ஆண்டு 47 ம் இலக்கம் கொண்ட பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் சட்டமானது முறையற்ற விதத்தில் உழைப்பைப் பெறுவதை தடுப்பதற்கான முயற்சியின் முக்கிய திருப்புமுனையாகுமென்று  புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.1995 ம் ஆண்டின் 22 ம் இலக்கம் கொண்ட தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம், 1998ம் ஆண்டின் 27 ம் இலக்கம் கொண்ட நீதிமன்ற ஒழுங்கமைப்பு (திருத்தச்) சட்டம், 1998 ம் ஆண்டின் 28 ம் இலக்கம் கொண்ட குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவை (திருத்தச்) சட்டம், 1998 ம் ஆண்டின் 29 ம் இலக்க தண்டனை சட்டக் கோவை (திருத்தச்) சட்டம், 1998 ம் ஆண்டின் 50 ம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டம்,2005 ம் ஆண்டின் 30 ஆம் இலக்க விலைமாதர் தொழிலுக்காக பெண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்தலை தவிர்த்தல் மற்றும் அதற்கெதிராக கருமமாற்றல் பற்றிய இணக்கச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் இலங்கையில் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.

child 960x540 1 ஏட்டுச் சுரைக்காய் - துரைசாமி நடராஜா

1998 ம் ஆண்டின் 50 ம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைச் சட்டத்தின் மூலம் சிறுவர்களுடைய பாதுகாப்பு பற்றிய வேலைகளைச் செய்யும் பிரதான நிறுவனமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நிறுவப்பட்டது.இச்சபையானது சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய விசாரணை மற்றும் சட்டத்தை செயற்படுத்துதல், சட்டத்தை திருத்தம் செய்தல், ஆலோசனை வழங்குதல், ஆய்வுகள், சட்ட உதவிகளை பெற்றுக் கொடுத்தல், தேசிய மட்டத்தில் விழிப்புணர்வூட்டல் போன்ற பல கருமங்களை மேற்கொள்ளும்.சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியில் 1997 இல்  இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட  கட்டாயக் கல்விச் சட்டம் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.

பெண்களுக்கும், சிறுவர்களுக்குமான தனியான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டமை ஒரு முக்கிய விடயமாகும்.இலவசக் கல்வி  மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமையானது சிறுவர்களின் கல்வி மற்றும் சுகாதார நலன்களுக்கு வலுசேர்ப்பதாகவுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

மலையக நிலை

பெருந்தோட்டத் துறையில் 06 – 14 வயதிற்கு உட்பட்ட 10.3 வீதமான ஆண் பிள்ளைகளும்,14.6 வீதமான பெண் பிள்ளைகளும்  முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ளதாக  அண்மைய தகவலொன்று வலியுறுத்துகின்றது.இத்தகவலின்படி மொத்தமாக 12.4 வீதமான சிறுவர்கள் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளமை அதிர்ச்சியைத் தருகின்றது.தொழில் நிலையில் சிறுவர்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.எஜமானர்களினால் சூடு வைக்கப்பட்டும், உழைப்பு ரீதியாக கசக்கிப் பிழியப்பட்டும் சில சிறுவர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பாலியல் ரீதியான தொல்லைகளும் குறைந்ததாக இல்லை.சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்துவதென்பது பெரும் சவாலாகியுள்ளது இதேவேளை சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பேசுகின்றபோது .” வேலியே பயிரை மேய்ந்த ” சில சம்பவங்களையும் குறிப்பிட்டாதல வேண்டும்.

child2 ஏட்டுச் சுரைக்காய் - துரைசாமி நடராஜாசிறுவர் துஷ்பிரயோகங்களின் தொடர்ச்சியானது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இலைமறைகாயாக பல்வேறு சம்பவங்கள் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் களுத்துறையில் ஹோட்டலொன்றிலிருந்து விழுந்து 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்தமை,, சிறுவர்களைக் கடத்துதல், களுத்துறை தனியார் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரால் 16 மாணவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை போன்ற அண்மைக்கால சம்பவங்கள் நாட்டு மக்களை கிலி கொள்ளச் செய்திருக்கின்றன.

பெற்றோரின் கனவுகளில் மிகவும் முக்கியமானது பிள்ளைகளை நற்பெயருடன்  தலை நிமிர்ந்து வாழச் செய்வதாகும்.எனினும் சில கயவர்கள் பெற்றோரின் அந்தக் கனவை பிஞ்சிலேயே பறித்தெடுப்பது வேதனைக்குரிய விடயமாகும்.பூக்களாகிய சிறுவர்களை நாசம்செய்து அவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்துவோர் எவராயினும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுதல் வேண்டும்.

அண்மைக்கால சிறுவர் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களை பார்க்கும் போது மலையக சமூகத்தினரின் அச்சம் ஏனைய சமூகத்தினரைக் காட்டிலும் இரட்டிப்பாகியுள்ளது.மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர்கள் தனித்துவிடப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழில் நிமித்தம் வேலைத் தளத்த்திற்கு செல்வதன் காரணமாக  லயன்களில்  5 வயதுக்கும் குறைந்த சில  சிறுவர்கள் வயோதிபர்களின் பாதுகாப்பில் இருந்து வருகின்றனர்.வயோதிபர்களின் உடல் நிலை மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக நோக்குகையில் இவர்களால் உரியவாறு சிறுவர்களை பராமரிக்க முடியுமா என்ற கேள்வியெழுகின்றது.

இத்தகைய  நிலைமைகள் சிறுவர்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி வருகின்றன.இதேவேளை 3.8 வீதமான சிறுவர்கள் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடாது வெறுமனே தோட்டத்தில் சுற்றித்திரிவதாக அதிர்ச்சிதரும் அண்மைய தகவலொன்று வலியுறுத்துகின்றது.இத்தகையோரும் தனித்துள்ள சந்தர்ப்பங்கள் அதிகமாகும் என்ற நிலையில் இவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம்  அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைகள் அநேகமாக கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேசங்களிலேயே அமைந்துள்ளன.இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் உரிய வாகனவசதியின்றி  போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியிலேயே  பாடசாலைக்கு சென்று தமது கல்வியைத் தொடருகின்றனர்.இந்நிலையில் இத்தகைய மாணவர்கள் பெரும்பாலும் நடந்து சென்று கல்வி பயில்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இதன்போது மாணவர்கள் கடத்தும் அல்லது துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.எனவே இத்தகைய மாணவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.

இது தொடர்பில் பெற்றோர், பாதுகாவலர், நலன்விரும்பிகள் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்து அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இந்நிலையில் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய கவனம் செலுத்தியுள்ளார்.சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டமூலங்களை தயாரிக்குமாறு அவர் சட்டம் குறித்த நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.குறித்த சட்டமூலம் சிறுவர் பாதுகாப்புக்கான பிரத்தியேகமானதாக அமைய வேண்டுமென்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் சிறுவர் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் பல ஏட்டளவில் இருந்தபோதும் அவற்றின் நடைமுறைப் பயன்பாடு தொடர்பில் திருப்தி கொள்ள முடியவில்லை.சட்டங்களின் வலுவிழந்த தன்மையையே அவதானிக்க முடிகின்றது.இந்நிலையில் புதிய சட்டங்களை ஆக்குவதை விடுத்து உள்ள சட்டங்களை உரியவாறு அமுல்படுத்தினாலே போதும் என்பதோடு இது சிறுவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உந்துசக்தியாக அமையும் என்று பலர் பேசிக் கொள்வதனையும் கேட்க முடிகின்றது