எம் உறவுகளைப் போல, நினைவு கற்தூபியும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது – காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்

“தமிழ் மக்கள் மீதான அடக்கு முறையின் அதியுச்சமான முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

 “இனப்படுகொலையின் அதியுச்ச துயரமாக எமது உறவுகளை தொலைத்து விட்டு மனத் துயருடன் வாழும் நாம், எம் மக்களை வேரறுக்க இலங்கை அரசினால் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் இனப் பாராம்பரியம், கட்டுக் கோப்பு மரபுரிமை, வாழ்விட காணி உரிமைகள், கல்வி கலை பண்பாட்டு விழுமியங்களூடாக சிதைத்து, அழித்தொழித்து தமிழ் மக்களின் இருப்பை சீரழித்த இனப் படுகொலையின் உச்சக் கட்டமான யுத்த காலத்தை நினைவு கூரவும், அதன் வலிகளை எமது இளைய சந்ததிக்கு கடத்தவும் உரித்துடையவர்கள்.  எமது இரத்த உறவுகள் எங்கு?, எந்த நேரத்தில்?, எப்படி ? இறந்தனர் என்றறியாது போரின் இறுதி நாளைக் கொண்டு நினைவு கூருகிறோம். அதற்காக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி முற்றத்தையே நினைவு கொள்கிறோம்.

சிங்கள அரசு காலங் காலமாக திட்டமிட்ட முறையில் தமிழ் இன அழிப்பை நடாத்திக் கொண்டிருக்கிறது. இவ் இன அழிப்பின் ஒரு படிமுறையாக இறுதிப் போரின் போது இனப்படுகொலையை மேற்கொண்டும், பல்லாயிரக் கணக்கானவர்களை காணாமல் போகவும் செய்துள்ளது. அதன் உச்சக் கட்ட இன அழிப்பை 2009ஆம் ஆண்டு மே18 வரை நடத்தியது.

இவ்வாறு ஒரு இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அழித் தொழிப்பை கைகட்டி மெளனியாக பார்த்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகம், நடைபெற்று முடித்த மனித அவலத்தின் பின் கூட இதுவரை  ஒரு ‘சர்வதேச நீதி’யை வழங்க முன்வராத காரணத்தினால் சிறீலங்கா அரசு துணிச்சலாக மீண்டும் மீண்டும் தனது அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றது.

சர்வதேச நியமங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமையான ‘நினைவேந்தல்’ உரிமையை தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. அத்துடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியை மனித விழுமியங்களையும் மீறி வெளிப்படையாக அழித்துள்ளனர். என்று அறிக்கை தொடர்கின்றது.