உரிமைகளை மழுங்கடிக்கும் பெருந்தேசிய வெறி – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களை காணியுரிமை பெற்ற சமூகமாக மேலெழும்பச் செய்தல் வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.எனினும் இதன் சாத்தியப்பாடு இதுவரை இல்லாத நிலையில் தொடர்ந்தும் இழுபறியான நிலைமைகளே இருந்து வருகின்றன. இந்நிலையில் பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென ஜனாதிபதியால் நான்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு  அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.மேலும் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் எதிர்வரும் மே மாதத்தில் சாத்தியமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கதாகும்.

Malayakam 1 உரிமைகளை மழுங்கடிக்கும் பெருந்தேசிய வெறி - துரைசாமி நடராஜாஒவ்வொரு சமூகத்தைப் பொறுத்தவரையிலும்  காணியுரிமை என்பது மிகவும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.ஒரு சமூகம் தமது இருப்பையும், அடையாளத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு காணியுரிமை உந்துசக்தியாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை. உலகில் பல சமூகங்கள் காணியுரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.அத்தோடு இன்றும் ஈடுபட்டும் வருகின்றன.

இப்போராட்டங்கள் சாதக விளைவுகளுக்கும் வித்திட்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.இந்த வகையில் மலையக பெருந்தோட்ட சமூகம் குறித்து நோக்குகையில் இச்சமூகம் இலங்கையில் 200 வருடகால வரலாற்றைக் கொண்டுள்ளபோதும் ஒரு அங்குலமேனும் காணியுரிமை இல்லாத சமூகமாக இருந்து வருவது வேதனைக்குரியதாகும். இம்மக்களுக்கு கனவாகவுள்ள காணியுரிமையை நனவாக்கப்போவதாக ஆட்சியாளர்கள் அவ்வப்போது வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்ற போதும் இதுகாலவரை எவ்விதமான சாதக விளைவுகளும் ஏற்படவில்லை என்பதும் தெரிந்ததேயாகும்.

காணி உச்சவரம்பு சட்டம்

பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் அவ்வப்போது அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரிக்கப்பட்டு வருகின்றமை புதிய விடயமல்ல.இவ்வாறாக சுவீகரிக்கப்படும் காணிகள் கிராமப்புற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வரலாறுகளே இலங்கையில் அதிகமாக காணப்படுகின்றன.இதற்கு பல உதாரணங்களையும் எம்மால் கூறமுடியும்.1972 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட காணி உச்சவரம்பு சட்டமும், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளுமே தேயிலைக் காணிகளின் உடைமைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.1972 ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்ட காணி உச்சவரம்பு சட்டத்தின் கீழ் இலங்கையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளின் உடைமைகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டது.

இதற்கமைய நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 10 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியுடைமைகளும், பெருந்தோட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 20 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியார் உடைமைகளும் நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டன.

kida malayakam உரிமைகளை மழுங்கடிக்கும் பெருந்தேசிய வெறி - துரைசாமி நடராஜா1972 ம் ஆண்டு காணிச் சுவீகரிப்பின்போது சிறியபகுதி பெருந்தோட்டக் காணிகளே சுவீகரிக்கப்பட்ட நிலையில் 1975 ம் ஆண்டு காணிச் சுவீகரிப்பின்போதே அதிகளவான பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்பட்டன.1972 ம் ஆண்டு முதல் 1975 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 169,208 ஹெக்டேயர் தேயிலைக் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் இலங்கையைப் பொறுத்தவரையில் காணி உரிமையில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட காணிகளாக பெருந்தோட்டக் காணிகளே காணப்படுவதாக பேராசிரியர் சின்னத்தம்பி குறிப்பிடுகின்றமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

பெருந்தோட்ட காணிச் சுவீகரிக்கப்பினை மையப்படுத்தி 1980 ம் ஆண்டில் பயனற்ற தேயிலைக்காணிகளென 10,000 ஹெக்டேயர் காணிகள் இலங்கையின் கம்பளை, கண்டி, உலப்பனை, கடுகண்ணாவை போன்ற பகுதிகளில் இனங்காணப்பட்டன.இக்காணிகளை மாற்றுப்பயிர் நடவடிக்கைக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் உலக வங்கியும் இத்திட்டத்திற்கு அனுசரணையாக இருந்தது.எனினும் சுவீகரிக்கப்பட்ட தேயிலைக் காணிகள் நிலமற்ற கிராமிய மக்களுக்கே பின்னர்  பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதன்போது இத்தோட்டங்களில் வேலைசெய்த இந்தியத் தமிழர்களுக்கும் இக்காணிகளை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இக்கோரிக்கை புறந்தள்ளப்பட்டு  கிராமத்தவர்களுக்கே காணிகள் வழங்கப்பட்டன. பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிப்பதன் ஊடாக அம்மக்களின் இருப்பு, அடையாளம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பலவற்றையும் கேள்விக்குறியாக்கி அம்மக்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்துவதே இனவாதிகளின் நோக்கமாக இருந்தது என்றும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

துணைபோன அரசாங்கம்

மேலும் மலையக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து திட்டமிடப்பட்ட அடிப்படையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் துணைபோயின.இதன் அடிப்படையிலேயே உசவசம  போன்ற தோட்டங்களில் மாற்றுப்பயிர்ச்செய்கை ‘பன்முகப்படுத்தல்’ என்ற போர்வையில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கண்டி, மாத்தளை, யட்டியாந்தோட்டை,அவிசாவளை, போன்ற பகுதிகளில் தோட்டக் காணிகளில் இருந்தும், லயன்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் நகரப் பகுதிகளில் பிச்சைக்காரர்களாக சுற்றித்திரிந்த வரலாறானது மலையக வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயமேயாகும்.மலையக மக்களின் பலத்தைக் குறைக்கும் வகையில் 1972,1975,1977 ம் ஆணடு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.இது இனக்கலவரங்கள் ஏற்படுவதற்கும் அடிப்படையான நிலையில் இதனால் மலையக மக்கள் அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகினர் என்றும் கருத்துப் பகிர்வுகள் உள்ளன.

1958,1977,1981 ஆகிய ஆண்டுகளிலும் அதனைத் தொடர்ந்தும் மலையக மாவட்டங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்களால் மலையக மக்கள் அதிகரித்த பாதிப்பிற்கு உள்ளாகினர்.இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளானவர்களும்,1972 ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் ஏற்பட்ட வேலையின்மை பிரச்சினை, உணவுப் பற்றாக்குறை என்பவற்றால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உள்ளானோருமென  கணிசமான தொகையினர் வடமாகாணத்திற்கு சென்று குடியேறுவதில் ஆர்வம் செலுத்தினர்.

இவ்வாறு சென்றவர்கள் இலங்கை தமிழர்கள் செறிந்து வாழும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் காலப்போக்கில் தமது இந்திய, மலையக அடையாளங்களைக் கைவிட்டு உள்ளூர் மக்களுடன் கலந்துவிடும் போக்குகள் காணப்படுவதாகவும், இவ்வாறான மக்கள் வெளியேற்றம் குடித்தொகை ரீதியாக மலையக மாவட்டங்களில் இந்தியர்களின் வலிமையைக் குறைத்துவிட்டதாகவும் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே மலையக பெருந்தோட்டங்களில் காணப்படும் நிலப்பயன்பாடும், காணியுரிமையும் தெளிவாக பௌதீக ரீதியாக ஒரு இனப்பாரபட்சத்தைக் காட்டி நிற்பதாக அமரர் அ.லோறன்ஸ் தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெருந்தோட்டம் என்பது  வெறும் தோட்டக் காணிகளாகவும், அதில் காணப்படும் லயன் முறைகளையும், வேறு எந்த வகையான வீடமைப்பு முறையைக் கொண்டிருந்தாலும் அதனை வெறும் பௌதீக அம்சங்களாக மாத்திரம் பார்க்கக்கூடாது.அதில் ஒரு சமூகம் முடக்கப்பட்டுள்ளதையும், அந்தப்பகுதி சுதந்திரமாக வளர்ச்சியடைவதற்கான வழிவகைகள் யாவும் மூடப்பட்டுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நிலையிலும் கடந்த 200 வருடங்களாக பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் மூலம் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு வித்திட்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு இன்றும் கூட அவர்கள் இருக்கும் வீடும், காணியும் உரித்தாக்கப்படவில்லை. nஎவ்வளவோ காணிகளும், வளங்களும் வீணாக விரயமாகும் போது ஏழு பேர்ச் காணியேனும் மலையக பெருந்தோட்டங்களில் வாழும், சுமார் 3 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கத் தயாராக இல்லை.சுதந்திரத்தின் பின்னர் மாறிமாறி ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் மலையக மக்களுக்கு வீடு மற்றும் காணியுரிமையை வழங்க பிடிவாதமாக மறுத்து வருவதற்கு அவர்களுக்கு இருக்கும் பெருந்தேசிய வெறியே காரணமாகும்.  பெருந்தோட்டக் காணிகளில் அல்லது  பெருந்தோட்டத் துறையில் இந்நாட்டின் ஏனைய இனத்தவர்கள் வாழ்ந்திருந்தால் அவர்களுக்கான காணியுரிமை, வீட்டுரிமை மற்றும் அடிப்படை வசதிகள் நிச்சயமாக உருவாக்கப்பட்டிருக்கும் என்று லோறன்ஸ் குறிப்பிடுகின்றார்.

தேசியக் கொள்கை வகுப்பு

பெருந்தோட்ட மக்களின் காணியுரிமை இதுவரை வாக்குறுதி வட்டத்திலேயே முடங்கிப்போன நிலையில் தற்போது இதனை சாத்தியப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 பேர்ச்சஸ் காணியை நிரந்தர உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கென ஜனாதிபதியால் நான்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.தேசிய ரீதியிலான 86 வீதமானோருடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களில் 08 சதவீதமானோருக்கு மாத்திரமே சொந்தவீடு காணப்படுகின்றது.

இந்த வரலாற்று அநீதியை நாம் சரிசெய்வோம்.பொருத்தமான காணிகள் மற்றும் பயனாளிகளை அடையாளம் காணுதல்,வரைபடம் இடுதல்,அளவீடு செய்தல், பத்திரங்களை தயாரித்தல் போன்ற நடைமுறைகளை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.குறித்த திட்டத்தின் மூலம் இரண்டு இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.இதேவேளை பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் மே மாதத்தில் சாத்தியமாகும் என்றும் அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி உறுதியளித்தவாறு காணிகளை உறுதிப்பத்திரங்களுடன் ஒப்படைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு தலவாக்கலை பிரதேச செயலகத்தில் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.கண்டியை தளமாகக் கொண்டியங்கும் ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டயகம,அக்கரபத்தனை,லிந்துலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இத்தகைய நடவடிக்கைகள் மலையக மக்கள் காணியுரிமையை பெற்றுக் கொள்வதற்கு உந்துசக்தியாகும்.இதேவேளை மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமையை நனவாக்கும் நோக்கில் ஒரு தேசியக் கொள்கை வகுக்கப்படுவது அவசியமாகும் என்பதையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.