உயிர்த்த ஞாயிறு தாக்குதல் -இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்  கையளித்துள்ளது.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை ஆணைக்குழுவின்  தலைவர் உயிர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உள்ளிட்ட உறுப்பினர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்த   சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றின் பொறுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் குறித்த விசாரணை அறிக்கையில், இந்த தாக்குதல்கள் தொடர்பில் 15 மாத காலப்பகுதியில் 450க்கும் மேற்பட்ட நபர்களிடம் சாட்சிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.