உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 33 பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு – சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 267 பேரில் 33 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகையில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“உயிர்த்த ஞாயிறு தினத்தில் 8 இடங்களில் குண்டை வெடிக்கச் செய்தமை தொடர்பான பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டு, அது தொடர்பான 8 விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் கையளித்திருக்கின்றோம். இந்தத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 267 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் 33 பேருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடுக்க இருக்கின்றோம். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் சிறைச்சாலைகளிலும் மற்றும் சிலர் தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுதொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வது தாமதிப்பது தொடர்பில் சட்டமா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினேன். இதன்போது அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இடம்பெற்று வருகின்றது. அதன் அறிக்கை வரும் வரைக்கும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளிப்படும் புதிய சாட்சிகளின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமாக இருப்பதால், அதனால் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும்வரை காத்திருக்க வேண்டும்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதுதொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே வழக்குத் தொடுக்க முடியும் என என்னிடம் தெரிவித்தார். அதேபோன்று இதுதொடர்பில் ஆராய 12 சட்டத்தரணிகள் சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அத்துடன் விசாரணை நடவடிக்கைகள் முறையாக இடம்பெற்றிருக்கின்றதா எனத் தேடிப்பார்க்க வேறு ஒரு குழுவையும் நான் நியமித்திருக்கின்றேன்” என்றார்.