உண்மைகளைக் கண்டறிய நியாயமான விசாணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

cardinal உண்மைகளைக் கண்டறிய நியாயமான விசாணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் - பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்நீதியை மறைத்து வைக்க முடியாது எனவும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற விசேட நிகழ்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த தேவாலயத்தில் இன்று காலை 8.40 மணிக்கு விசேட ஆராதனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் இந்த ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியாகவும் பல தேவாலயங்களிலும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக விசேட ஆராதனைகள் இடம் பெற்றன.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் உயிரிந்தவர்களை நினைவு கூர்ந்து நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை 8.45 மணி முதல் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்படி சகல தேவாலயங்களிலும் மணி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று மாலை விசேட ஆராதனை நடைபெற்றது.

இந்த ஆராதனையின் பின்னர் அருட்தந்தைமார்கள், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கத்தோலிக்கச் சமூகத்தினர் கலந்து கொண்ட நடைபயணம் குறித்த தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தை நோக்கி ஆரம்பமானது. இந்த நடைபயணம் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தைச் சென்றடைந்திருந்தது.

2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.