ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வெறும் இலங்கைத் தீவை மையப்படுத்திய பிரச்சினை அல்ல (நேர்காணல்)-கஜேந்திரகுமார்

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வெறும் இலங்கைத் தீவை மையப்படுத்திய பிரச்சினை அல்ல. இன்று அது சர்வதேசமயப்படுத்தப்பட்டு, இன்று பெரிய வல்லரசுகள்  இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி மோதுகின்ற நிலைமை உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்முடனான நேர்காணலில் தெரிவித்தார்.

திரு  சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி தொடர்பாகவும்,  எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாகவும் இலக்கு இணையத்திற்குஅவர் வழங்கிய சிறப்பு நேர்காணலை இங்கு தருகிறோம்.

கேள்வி – புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு அரசியல் சூழ்நிலையில் எவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது?

இலங்கைத் தீவிற்குள்ளே எங்களுக்கு ஒரு கடும் நெருக்கடி உள்ளது என நினைக்கின்றேன். இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற கோணத்தில் தான் எதையும் செய்யத் தயாரில்லை என்று கோத்தபாயா ராஜபக்ஸ கூறியிருக்கின்றார். 30 வருடங்களில் வடகிழக்கில் அபிவிருத்தி பெருமளவில் நடக்கவில்லை என்றும், அதற்கு முன்னுரிமை கொடுப்பதற்கு தான் தயார் என்ற கோணத்திலேயே அவரின் கருத்து அமைந்திருக்கின்றது.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சியிலிருந்த 10 வருடங்களில், விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்காக தமிழர்களுக்கு தான் தீர்வைக் கொடுப்பதற்கு தயார் என்று கூறியிருந்தார். ஆனால் இன்று அவரின் சகோதரர் ஆட்சிக்கு வந்ததையடுத்து அதை முற்று முழுதாக நிராகரித்திருக்கின்றார்.  13ஆம் திருத்தச் சட்டத்தைக்கூட இந்தியா சென்று அவர் நிராகரித்துள்ளார். தீவிற்குள்ளே என்று பார்க்கும் போது தமிழர்களுக்கு மிகவும் மோசமான ஒரு நிலைமை என்று தான் கூறவேண்டும். தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்கள பௌத்த மக்களைத் தவிர்ந்த அனைவருக்கும் ஒரு கடும் சவாலான ஒரு நிலைமை என்று தான் நான் கூறுவேன்.

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வெறும் இலங்கைத் தீவை மையப்படுதுத்திய பிரச்சினை அல்ல. இன்று அது சர்வதேசமயப்படுத்தப்பட்டு,  இன்று பெரிய வல்லரசுகள்  இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி மோதுகின்ற நிலைமை உள்ளது.  கோத்தபாயா ராஜபக்ஸ இந்தியாவிற்கு சென்று 13ஆவது திருத்தத்தை தான் ஏற்க முடியாது என்ற கோணத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் கூறியுள்ளதானது, ஒரு பாரிய விளைவை  ஏற்படுத்தும் என்பதே எங்களின் கருத்து.

கேள்வி -கடந்த வாரம் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தலைமையில் மாற்று அணி ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது?

விக்னேஸ்வரன் இந்தியாவின் இன்னொரு கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் இன் உறுப்பினராகத்தான் இருக்கின்றார். மாற்று அணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் புதிய தலைவராகத்தான் அவர் இயங்குகின்றார். இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தி 10 வருடங்களாக மேற்கொள்ளவிருந்த அரசியல் முயற்சி இன்று தோல்வியடைந்துள்ளது. அதுதான் யதார்த்தம். ஏனெனில் கூட்டமைப்பை இன்று தமிழர்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளார்கள்.  மாற்று அணிகள் என கடந்த 10 வருடங்களாக நாங்கள் மட்டும் தான் இயங்கிக் கொண்டு வருகின்றோம். 2010ஆம் ஆண்டு தேர்தல் காலத்திலிருந்தே நாங்கள் தமிழ்க் கூட்டமைப்பின் பிழைகளை சுட்டிக்காட்டிக் கொண்டு வருகின்றோம்.

கூட்டமைப்பிற்கு எதிராக நாங்கள் வைத்த அனைத்து விமர்சனங்களும் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகவே மக்கள் கட்டாயம் எங்களின் பக்கம் திரும்பவுள்ளார்கள் என்ற ஒரு நிலைமை வரும் போது, அந்த மாற்றம் எங்கள் கைகளுக்கு வரக்கூடாது என்பதற்காக, வல்லரசுகளுக்கு தாங்கள் விரும்பியபடி செயலாற்றக்கூடிய ஒரு அமைப்பு தேவைப்படுகின்றது. ஆனால் நாங்கள் சுயமாக இயங்கும் ஒரு அமைப்பு. புதிய தலைமைத்துவத்தை நாங்கள் ஏற்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் விக்னேஸ்வரனையும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியையும் பயன்படுத்தி மேற்கொண்டுள்ளனர்.

கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தது மற்றும் தமிழ் மக்கள் பேரவையை நிலைகுலையச் செய்தது நீங்கள் தான் என சி.வி.விக்னேஸ்வரன் ஐயா கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

தானே கேள்வி எழுதி, தானே பதில் சொல்பவர் விக்னேஸ்வரன். இன்று பத்திரிகைகளில் வந்துள்ளது. நான் இதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் எங்களின் அமைப்பில் இதற்கு ஒரு பதில் கட்டாயம் வழங்கப்படும். 2010ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குழப்பினோம் என்றால், இன்று அவர் என்ன செய்கின்றார்? அன்று நாங்கள் செய்ததை பிழை என்று கூறுபவர். இன்று தான் என்ன செய்கின்றார். இன்று அவருடன் இருக்கும் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து  சென்றவர்களே.

நாங்கள் 2010இல் வகித்த பதவிகளை புறக்கணித்து, கூட்டமைப்பினர் செய்த பிழைகளை சுட்டிக்காட்டினால், இந்த இனத்திற்கு ஒரு புதிய தலைமைத்துவம் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் நலன்களை கைவிட்டு ஏனைய வல்லரசுகளின் சொற்படி செயற்படப் போகின்றார்கள் என்பதையே அன்றும் சொன்னோம். இன்றும் சொல்கின்றோம்.அது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

விக்னேஸ்வரன் 10 வருடங்களில் 5 வருடங்கள் கூட்டமைப்பிற்குள்ளே தனது பதவியை அனுபவித்த பின்னர்   வெளியில் வந்து பதவி போன அடுத்த நாள் புதிய கட்சியை தொடங்கியவர். அவரும் கூட்டமைப்பிற்கு மாற்றாகத் தான் செயற்படுகின்றார். நான் கூட்டமைப்பிலிருந்து வெளியே வந்தது பிழை என்று சொல்பவர் தானும் அதையே செய்திருக்கின்றார்.

தமிழ் மக்கள் பேரவையைப் பொறுத்தவரையில், நாங்கள் இன்றும் தமிழ் மக்கள் பேரவையில் உறுப்பினராக இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாக பிழை விடுகின்றது என்பதை காரணம் காட்டியேதமிழ் மக்கள் பேரவை  உருவாக்கப்பட்டது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்விற்கான யோசனைகளை ஒற்றையாட்சிக்குள்ளே  கொண்டு சென்று முடக்கப் போகின்றார்கள் என்பதனால், தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு தேவை என்பதால், அந்தத் தீர்வுத் திட்டத்தை உருவாக்கவே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.   தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட முதலாவது பணி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான ஒரு சரியான தீர்வுத் திட்டத்தை தயாரித்து வழங்குவதே .

தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய வகையிலேயே அந்த தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த தீர்வுத்திட்டம் தயாரிப்பதற்கான குழுவிற்கு விக்னேஸ்வரன் எவரையும் நியமிக்கவில்லை. நாங்கள் தான் நியமித்தோம். அதில் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்றவர்கள் உறுப்பினர்களை நியமித்தனர். ஆனால் விக்னேஸ்வரன் ஒருவரையும் நியமிக்கவில்லை. அந்த தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் ஜனவரி 30ஆம் திகதி நாங்கள் அதனை வெளியிட்டோம்.

29 ஆம் திகதி   இரவு பேரவையின் இணைத் தலைவர் வைத்திய கலாநிதி லக்ஸ்மன் தொடர்பு கொண்டு விக்னேஸ்வரனுக்கு தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் சிறிய பிரச்சினை இருப்பதாகக் கூறி அதை மாற்ற வேண்டும் என கேட்கவுள்ளார் என்று கூறினார். தீர்வுத் திட்டம் வெளியிடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, வீரசிங்கம் மண்டபமும் ஒழுங்கு செய்யப்பட்டு விட்டது.

இந்த திட்ட வரைபில் ஒருசில திருத்தங்களை நான் செய்திருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பியதற்கேற்ப நான் திருத்தங்களை மேற் கொண்டிருப்பதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடும் பிழைகளை சுட்டிக்காட்டவே நாங்கள்  தீர்வுத் திட்டத்தை அமைத்தோம்.

72 வருடங்களாக கடைப்பிடித்து வரும்  தேசம் என்ற கோட்பாட்டை யுத்தத்தின் பின்னர் கைவிட வேண்டும் என்று கூட்டமைப்பு கூறியமையாலேயே நாங்கள் பிரிகின்றோம். அதே விடயத்தை சுட்டிக்காட்டி, தேசம் என்ற வார்த்தை ஓர் பிரச்சினைக்குரிய வார்த்தை என்பதால், அதை தவிர்க்க வேண்டும் என கேட்டுள்ளனர்.  தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை நீக்க வேண்டும் என்று சொல்வதால், யார் இங்கு ஒற்றுமையைக் குழப்புகின்றார்கள்? அன்று விக்னேஸ்வரன் மட்டும் தான் தமிழ் மக்களின் தேசம் என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமை என்பது கொள்கை அடிப்படையிலேயே இருக்கலாம். கூட்டமைப்பு மக்கள் மத்தியில் தங்கள் செல்வாக்ககை இழந்து கொண்டு போகும் சமயத்தில் , ஒரு மாற்று ஒன்றை மக்கள்தேடகின்றார்கள். அந்த மாற்றாக கூட்டமைப்பை தோற்கடித்து நாங்கள் வரவேண்டும். கூட்டமைப்பு என்ன முடிவு எடுத்தாலும், நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற கோட்பாட்டுடன் நாங்கள் இறங்கத் தயாரில்லை.

இது தவிர எங்களுக்கு சம்பந்தனுடனும் சுமந்திரனுடனும்  எங்களுக்கு எந்தவித தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. அவர்கள் எடுத்த கொள்கை முடிவு பிழை என்பதற்காகவே நாங்கள் வெளியேறுகின்றோம். விக்னேஸ்வரனும் அதே பிழையை செய்யும் போது, அவருடன் இணைய முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்.

விக்னேஸ்வரன் தனது கட்சியான ஈ.பி.ஆர.எல்.எப் கட்சியின் கீழ் கூட்டணி அமைத்த பிற்பாடு அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, தான் தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்று கூறியிருக்கின்றார். கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றலாம் என்றால் ஏன் அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். நீங்கள் பிரிந்து நிற்காவிட்டால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் புதிய தலைத்துவத்தைக் கொடுக்கக்கூடிய ஒரேயொரு தரப்பாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிழையென நினைக்கும் மக்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே  சைக்கிள் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பர். அந்த வாக்கு வரக்கூடாது என்பதற்காக  நீங்கள் கூட்டமைப்பிற்கு எதிரானவர்கள் எனக் காட்டி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு உண்மையில் ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய, புதிய அரசியலை செய்யக்கூடிய எங்கள் தரப்பு வாக்கு வங்கியை உடைப்பதற்காக மட்டுமே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதே உண்மை.

கேள்வி -அண்மைக்காலமாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை நீங்கள் தொடர்ச்சியாக புறம் தள்ளிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?

கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினராக இருந்தும், அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு கொள்கைகளை வலியுறுத்தியே ஈ.பி.ஆர.எல்.எப் போட்டியிட்டது. அதுவும் உதயசூரியன் சின்னத்திலான ஆனந்தசங்கரியின் கட்சியுடன் போட்டியிட்டது. ஆனந்தசங்கரியின் வெளிப்படையான நிலைப்பாடே 13ஆம் திருத்தச் சட்டம் போதும் என்பதாகும். சங்கரியுடன் சேர்ந்து எப்படி சமஸ்டியைப் பற்றிப் பேச முடியும்?

எங்களுடன் சேராது, உதயசூரியன் சின்னத்திலான ஆனந்தசங்கரியின் கட்சியுடன் செல்ல விரும்பி, ஈ.பி.ஆர்.எல்.எப் உம் நாங்களும் கூட்டுச் சேரும் வாய்ப்பை இல்லாது செய்தது ஈ.பி.ஆர்.எல்.எப். தவிசாளர் பதவியைப் பெறுவதற்காக ஈ.பி.டி.பி. ஐ.தே.க. சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. அனைத்து சபைகளிலும் இந்த மூன்று கட்சிகளுடனும் சேர்ந்து தான் தவிசாளர் பதவியைப் பெற்றது.

அது பிழையென  தமிழ் மக்கள் பெரியளவில் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கையில்,  ஈ.பி.ஆர்.எல்.எப். வவுனியா நகரசபையில் 3 உறுப்பினர்களை ஈ.பி.ஆர்.எல்.எப் வைத்திருந்தது. அந்த மூன்று உறுப்பினர்களையும் தவிசாளர் ஆக்குவதற்கு  மேற்படி 3 கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்கின்றார்கள்.

வவுனியா வடக்கு நெடுங்கேணியில், மகிந்த ராஜபக்ஸவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் 5 சிங்கள வேட்பாளர்களுடன் இணைந்து  இவர்கள் போருக்குப் பின்னர் நடைபெற்ற சட்டவிரேத குடியேற்றங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிட்டனர். கூட்டமைப்பு செய்தது பிழை என்றால், ஈ.பி.ஆர்.எல்.எப் செய்தது அதைவிட மோசம். கூட்டமைப்பு தாமரை மொட்டுச் சின்னத்துடன் சேரவில்லை.

நாங்கள் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டு அங்கீகாரம் கிடைத்த பின்னர் அதை தூக்கியெறிந்து செயற்பட மாட்டோம். நாங்கள் ஒன்றை சொல்கின்றோம் என்றால், செயலிலும் அதையே செய்வோம்.