ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை ஏன் வேண்டும்m – பழ.நெடுமாறன்

உலகின் எந்த நாட்டிலிருந்து யூதர்கள் வந்தாலும் இஸ்ரேலில் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். வராவிட்டாலும் வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இஸ்ரேல் குடியுரிமை கொடுப்பது அவர்களின் சட்டம். அதை அப்படியே பி.ஜே.பி அரசும் பின்பற்றுகின்றது. இந்துக்களுக்கு மட்டும் இங்கே உரிமை என சொல்கிறார்கள்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று(23)  சென்னையில் தமிழக எதிர்க்கட்சிகளின் சார்பில் மிகப் பெரும் பேரணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றார். தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் அவரை சந்தித்த இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.

அந்த நேர்காணலில்,

குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், “இந்திய அரசு நிறைவேற்றியிருக்கக்கூடிய தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிரானது. இந்திய குடிமக்களை அரசியல் அமைப்புச் சட்டம் மத ரீதியாகப் பிரித்துப் பார்க்கவே இல்லை. ஆனால், பா.ஜ.க,  ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளின் நோக்கம் என்பது இந்தியாவை இந்துக்களின் நாடாக அறிவித்து இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என மாற்ற வேண்டும் என்பது தான். அதை நோக்கி படிப்படியாக அவர்கள் நகர்கின்றார்கள்.

முதல்படி, காஷ்மீர் முஸ்லிம்கள் நிறைந்த மாநிலம் என்பதற்காக அதற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகளை ரத்துச் செய்தனர். காஷ்மீர் மாநிலமே இல்லாதபடி செய்து அதை இந்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இரு பகுதிகளாக மாற்றி விட்டனர். இதனால் மாநில அந்தஸ்தை காஸ்மீர் முஸ்லிம்கள் இழந்து விட்டனர். அடுத்ததாக முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வந்து அதையும் நிறைவேற்றி விட்டனர். மூன்றாவதாக தேசிய குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், சமணர்கள், பௌத்தர்கள் மட்டும் இந்தியாவிற்கு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்படும் என்றிருக்கின்றார்கள். வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளத. குறிப்பாக நாகாலாந்து மாநிலங்களில் மொழியளவிலான சிறுபான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 200இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மொழிகள் அழிந்து விட்டன. மிச்சம் இருக்கும் மொழிகளையும் இந்தச் சட்டம் அழித்துவிடும். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், இந்த நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்கின்றனர். இதை எதிர்த்து நாடு முழுவதும் கிளர்ச்சிகள் மூண்டுவிட்டன. வெளிநாட்டிலிருந்து முஸ்லிம்கள் வந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனச் சொல்கின்ற சட்டம் நாளைக்கு இந்தியாவைத் தாயகமாக ஏற்றுக் கொண்டு காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற 15கோடி முஸ்லிம் பெருமக்களை என்ன செய்யப் போகின்றார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதில்லை. இஸ்ரேலில் மட்டும் இதுபோன்ற சட்டம் இருக்கின்றது.

உலகத்தின் எந்த நாட்டிலிருந்து யூதர்கள் வந்தாலும் இஸ்ரேலில் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். வராவிட்டாலும் வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இஸ்ரேல் குடியுரிமை கொடுப்பது அவர்களின் சட்டம். அதை அப்படியே பி.ஜே.பி. அரசு பின்பற்றி இந்துக்களுக்கு மட்டும் இங்கே உரிமை எனச் சொல்கின்றார்கள்.

ஈழத் தமிழ் அகதிகள் இலங்கைக்குச் செல்லக்கூடிய சூழல் இருக்கின்றதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

“நிச்சயமாக இல்லை. இங்கே இருக்கின்ற போதே ஐ.நா. அகதிகள் ஆணைய பொறுப்பில் அவர்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், இந்திய குடியுரிமையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் இந்தியக் குடிமக்களுக்கு என்னென்ன சலுகைகள் இருக்கின்றதோ அவை அனைத்தும் கிடைக்கும். அதை இந்த அரசு செய்ய வேண்டும்.“

இந்தியக் குடியுரிமை கொடுத்தால் மீண்டும் இலங்கை செல்ல முடியுமா? என்ற கேள்விக்கு,

“அதற்குத் தான் இரட்டைக் குடியுரிமை இந்தியா கொடுக்க வேண்டு் என்கிறோம். வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு அவர்கள் அந்த நாடுகள் குடியுரிமை வழங்கினாலும் எம்.ஆர்.ஐ என்கின்ற அடிப்படையில் விசா இல்லாமலேய அவர்கள் எப்போதும் வேண்டுமானாலும் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் இங்கு தேர்தலில் மட்டும் போட்டியிட முடியாது. பதவிகளில் வகிக்க முடியாது. வெளிநாட்டு குடியுரிமை வேண்டாம் என்று இங்கேயே வந்து விட்டால் இங்கே குடியுரிமையைக் கொடுத்து விடுவார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுத்து விட்டால், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சலுகைகளும், உரிமைகளும் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், இப்போது அகதிகள் வெளியே செல்ல முடிவதில்லை. முதலில் செய்ய முடியவில்லை. சிறைக் கைதிகளைப் போல் இருக்கின்றார்கள். அரசு கொடுக்கும் உதவியும் அவர்களுக்கு போதுமானதாக இல்லை“.

தமிழகத்தில் இதற்கான போராட்டங்கள் குறித்து என்ற கேள்விக்கு,

“பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும் போராடி வருகின்றனர். இதை ஒடுக்க வேண்டும் என என்மீது உட்பட பலர் மீது வழக்கு பதிந்து வருகின்றனர். போராட்டம் இன்னும் பெரிய அளவில் பரவ வேண்டும். அதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இல்லையென்றால், காஸ்மீர் மக்களுக்கு இருந்த சிறப்புரிமையை பறித்து அந்த மாநிலமே இல்லாமல் செய்தது போல் நாளைக்கு தமிழ் நாட்டையும் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரித்து புதுச்சேரி மாதிரி ஒரு யூனியன் அந்தஸ்து உள்ள ஒரு பகுதியாக மாற்ற மாட்டார்கள் என என்ன உறுதி இருக்கின்றது. அரசியல் சட்டத்தில் இதற்கு அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. அதனால் பி.ஜே.பி அரசு இதைச் செய்யலாம். அதனால் இந்தப் பிரச்சினை யாருக்கோ வந்தது எனக் கருதாமல் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கா விட்டால் கடைசியில் எல்லோருக்கும் இந்த நிலைமை வரும். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மக்களுக்கு வந்திருப்பது நாளைக்கு தமிழர்களுக்கும் வரலாம்.” என்றார்.

அதிமுக அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

“நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுகவினர் இதை ஆதரித்து வாக்களித்துள்னர் என்பது பெரும் கொடூரம்”.  என்றார்.