ஈழத்தமிழர்களுக்கு இன அழிப்புநிலை! காப்பாற்றும் பொறுப்பில் புலம்பதிந்த தமிழர்

இலங்கைத் தீவில் வாழும் ஈழத்தமிழர்களை தேவையேற்படின் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாய இராஜபக்ச ஹிட்லரைப்போல் இன அழிப்புச் செய்வார் என்னும் தகவலைச் சிறீலங்காவின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார்.  

  1. சிறீலங்கா அதிபர் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் அரச அதிபர் கோத்தபாய இராஜபக்சவிற்கு வாக்களித்தார்கள் எனவும்,
  2. ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாட்டின்மைக்காக மக்கள் அவரைக் குற்றம் சாட்டுகின்றார்கள் எனவும்,
  3. ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால், எவரும் குறைகூற மாட்டார்கள் – குற்றம்சாட்ட மாட்டார்கள் எனவும்,
  4. ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செயற்பட விரும்பவில்லை. தற்போதைய நிலைமை மாறாவிட்டால், அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் எனவும்

சிறீலங்காவின் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார். சிறீலங்காவின் அமைச்சர் அவையின் இராஜாங்க அமைச்சராக உள்ள ஒருவரே இவ்வாறு ஈழத் தமிழர்களைச் சர்வாதிகார முறையில் இனஅழிப்புச் செய்யும் மக்களாணை உண்டென்று உலகுக்கு இப்பேச்சின் மூலம் அறிவித்துள்ளார். இது தங்களை ஆட்சி செய்வதாகக் கூறும் ஒரு அரசாங்கமே தங்களது பாதுகாப்பான அமைதியை மறுக்கின்ற காரணத்தால், ஈழத்தமிழர்கள் உலக நாடுகளால் பாதுகாக்கப்பட வேண்டிய அதீத மனிதாய தேவைகளில் (Extreme Humanitarian Needs) வாழும் பாதிப்புற்ற இனமாக உள்ளனர் என்பதை மீளவும் உறுதியாக்குகிறது.  இத்தகைய மக்களுக்கு அவர்கள் வாழும் நாட்டின் இறைமையைக் கடந்து, உலக நாடுகள், அமைப்புக்கள், அவர்களுக்கான மனிதாய உதவிகளை வழங்கலாம் என்பது ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்ட ஒன்று.

ஆனால் 2009 முதல் இன்று வரை அதீத மனிதாய தேவைகளில் உள்ள ஈழத் தமிழர்களுக்கான நீதியையோ, புனர்வாழ்வையோ, புனரமைப்பையோ  உலக நாடுகளாலும், உலக நிறுவனங்களாலும் சிறீலங்காவின் இறைமையக் கடந்து பெற்றுக் கொடுக்க இயலாத நிலையில், யுத்தமற்ற சூழலிலும், தொடர்ந்தும் பல்வேறு வகைகளில், ஈழத்தமிழ் மக்கள், சிறீலங்காவால் இனத்துடைப்புக்கும், பண்பாட்டு இனஅழிப்புக்கும்  தினம் தினம் உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், உலகெங்கும் தாங்கள் வாழும் நாடுகளின் குடிகளாகப் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள், பின்வரும் நான்கு நிலைகளில் ஈழத்தமிழர்களை இன அழிப்பிலிருந்து பாதுகாக்க முயற்சிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

  1. இனஅழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களைக் காக்க வேண்டிய பொறுப்புள்ள ஐக்கிய நாடுகள் சபையையும், அதன் மனித உரிமைகள் சபை, மனித உரிமைகள் ஆணையகம் என்பவற்றையும், அவற்றின் செயற்பாடுகளை சரியாகச் சரியான முறையில் செய்வதை வேகப்படுத்த பார்வையாளர் தகுதி கொண்டவர்களாக, பாலஸ்தீனிய மக்களுக்கு அனுமதி அளித்தது போல, ஈழத்தமிழர்களுக்கும், சிறப்பு பிரதிநிதித்துவ அனுமதி அளிக்க வேண்டும் என்று கோர வேண்டும்.
  2. பிரித்தானியக் காலனித்துவத்தில் இருதேசங்களை ஒரு தேசமாகக் கட்டமைத் தமையே இன்று மத்திய கிழக்குப் பிரச்சினைக்குரிய காரணமென மிகத்தெளிவான முறையில் மதிப்பீடு செய்துள்ள இன்றைய பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் யோண்சன் அவர்களையும், அவரது அரசையும், அதே நிலைதான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் காரணமென்பதை மனதிருத்தி, இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையை ஒரு நாட்டுக்குள் இருதேசங்கள் என்ற உண்மையின் அடிப்படையில் தீர்ப்பதற்கான அனைத்துலக தலைமையினை அவரும் அவரது அரசும் முன்னெடுக்க வேண்டுமெனக் கோரவேண்டும்.
  3. இன்று தமிழர்களின் தன்மான வாழ்வை (Dignity of life) முன்னெடுக்கும் வகையிலான அரசியல் தீர்வே, சிறீலங்காவில் மனிதஉரிமைப் பிரச்சினைக்கான தீர்வைத் தரும் என்னும் கருத்தினை ஐக்கிய நாடுகள் சபையில் வெளியிட்டு, அதற்கான செயற்பாட்டு இலக்காக, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் 13ஆவது விதி அமைய வேண்டுமென்றும்,  எடுத்துரைக்கும் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான இந்திய மத்திய அரசிடம் புலம்பதிந்து வாழும் தமிழர்களுடனும், தாயகத்தில் உள்ள ஈழத்தமிழர்களுடனும் அவர்களது கருத்துக்களையும் கேட்டறியும் வகையில் பொறிமுறைகளை அமைக்குமாறு கேட்க வேண்டும்.
  4. ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையைக் கவனத்தில் எடுத்து யூன் 21ஆம் திகதி ரூவாண்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் 2021ஆம் ஆண்டுக்கான மாநாட்டில், ஈழத் தமிழர்களுக்கான மனித உரிமைக்கும், தன்னாட்சி உரிமைக்கும் முன்னிலை கொடுத்த நிலையில் பொதுநலவாய நாடுகளின் ‘பொதுவான எதிர்காலத்தை அமைத்தல், இணைத்தல், புதுப்பித்தல், உருமாற்றல்’ திட்டமிடலைச் செய்யுமாறு பொதுநலவாய நாடுகளின் அனைத்து உறுப்புரிமை நாடுகளையும் கோர வேண்டும்.

இவற்றைச் செய்வதற்கான ஈழத்தமிழர்களின் தூதுவர்களாகச் செயற்படவேண்டிய  புலம்பதிந்த தமிழர்கள், ஈழத்தமிழர்களின் பிரிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமைகள், தன்னாட்சி உரிமை என்னும் இருவகை உரிமைகளையும் முன்னெடுப்பதில் என்கிலும், தமக்கிடையுள்ள மாறுபாடுகளை வேறுபாடுகளை மதித்து, அதேவேளையில் அவற்றுக்கு அப்பால்,  ஈழத்தமிழரின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்னும் பொது நோக்கில், அதற்கான பொது வேலைத்திட்டத்தில்  ஒரே அணியில் இணைந்தேயாக வேண்டும். “நாங்கள் சுதந்திரமாகவே பிறந்தோம். சுதந்திரத்தை நம்புகின்றோம். இதனாலேயே நாங்கள் முழங்காலில் இருந்து வாழ்வதை விட சொந்தக்காலில் நின்று கொண்டு சாவதையே சிறந்ததாகக் கருதுகின்றோம்” என்கிற முன்னாள் அமெரிக்க அரச அதிபரும் தன்னாட்சி உரிமைத் தத்துவத்தின் தந்தையுமான, வூட்ரோவில்சன் அவர்களின் வார்த்தைகளையே தங்கள் வாழ்வாகக் கொண்டவர்கள் ஈழமக்கள் என்பதை உலகறியச் செய்வதற்கு புலம்பதிந்த தமிழர்கள், ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்பதில் உலகின் உதவியைக் கோரும் பொது அணியில் காலதாமதமின்றி இணைவார்கள் என்பது இலக்கின் நம்பிக்கை.