ஈரான் சந்தித்த பேரிழப்பு – பதில் தாக்குதல் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ்

சிரியாவில் மீண்டும் இஸ்ரேலின் விமானங்கள் மேற்கொண்ட துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் 3 ஜெனரல் தர அதிகாரிகள் உட்பட 7 படையததிகாரிகளும் ஹிஸ்புல்லா படையினர் இருவரும் மற்றும் சிரியா படையினர் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானிய தூதுவரின் சிறப்பு இல்லத்தின் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கட்டிடம் முற்றாக தரைமட்டமாகியபோதும் ஈரானிய தூதுவர் உயிர்த்தப்பியுள்ளார்.

Iran general ஈரான் சந்தித்த பேரிழப்பு - பதில் தாக்குதல் என்ன? - வேல்ஸில் இருந்து அருஸ்திங்கட்கிழமை(1) மாலை 5 மணியளவில் சிரியாவில் உள்ள இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட கொலன் கெயிட் பகுதியில் இருந்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அவற்றில் பலவற்றறை தாம் சுட்டுவீழ்த்தியபோதும் சில சிரியாவின் தலைநகரான டொமகஸ் பகுதியில் உள்ள ஈரானின் தூதரகத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தை தாக்கியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்க தயாரிப்பான இஸ்ரேலின் எப்-35 விமானங்கள் இந்த இலக்கு மீது ஆறு ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையின் வெளியக புலனாய்வு மற்றும் நடவடிக்கை படைப்பிரிவான காட் படையின் லெபனான் மற்றும் சிரியாவுக்கு பொறுப்பான கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் மொகமட் ரெசா சகீடி முக்கியமானவர். அவருடன் பிரதிக் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் ஹஜ் ரகிமி சகடியும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் காட் படைப்பிரிவின் தலமை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் கொசெயின் அமினெல்லாவும் கொல்லப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு காட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி ஜெனரல் சொலமானி ஈராக்கில் வைத்து கொல்லப்பட்டபின்னர் அந்த பொறுப்பை ஏற்றிருந்த ஜெனரல் சகீடி மிகவும் பிரபலமானவர்.

எனினும் இது தொடர்பில் இஸ்ரேல் கருத்துக்களை தெரிவிக்கவில்லை, இஸ்ரேலுக்கு வெளியில் இடம்பெறும் தாக்குதல்களை இஸ்ரேல் ஒருபோதும் உரிமைகோருவதில்லை. இருந்தபோதும் இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேலிய அதிகாரிகளை ஆதாரம் காட்டி த நியூயோர்க் ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மிக முக்கிய அதிகாரிகளின் இழப்பு என்பது ஈரானுக்கு பலத்த பின்னடைவானது என அது மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் சிரியாவின் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காட் படைப்பிரிவின் ஜெனரல் ராசி மௌசவி கொல்லப்பட்டிருந்தார். அதற்கு பதிலடியாக ஈராக்கில் இருந்த இஸ்ரேலின் மொசாட் தளத்தின் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் இஸ்ரேலின் மொசாட்டுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட செல்வந்தர் உட்பட பல இஸ்ரேலிய அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

தற்போதைய தாக்குதல் ஈரானை அதிக சினமூட்டியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை(2) ஈரானில் உள்ள சுவிற்சலாந்து தூதுவரை அழைத்த ஈரானிய அரசு அமெரிக்காவுக்கு தமது பதில்த்தாக்குதல் தொடர்பில் இரகசிய தாகவல்களை அனுப்பியுள்ளதுடன், இஸ்ரேலிய இலக்குகளை தேடி தாக்குமாறு திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் தமது படையினருக்கு ஈரானின் அரச தலைவர் அயோரல்லா சயீட் அலி காமெனி கட்டளையிட்டுள்ளதாக ஈரான் ஒப்சேவர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி அக்பர் தெகிரானில் இருந்து புறப்பட்டு அஸ்ரானாவில் இடம்பெறும் சங்காய் கூட்டமைப்பின் பாதுகாப்புத்துறை தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு சென்றுள்ளார்.

Iran general2 ஈரான் சந்தித்த பேரிழப்பு - பதில் தாக்குதல் என்ன? - வேல்ஸில் இருந்து அருஸ்அதேசயம் இந்த தாக்குதல் தொடர்பில் தகவல்வெளியிட்டுள்ள ரஸ்யாவின் ஊடகத்துறை பேச்சாளர் டிமிற்றி பெஸ்கோவ் இது அனைத்துலக விதிகளை மீறிய தாக்குதல், தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்ற வியன்னாவின் விதிகளை மீறிய செயல் என தெரிவித்ததுடன் கடும் கண்டனங்களையும் வெளியிட்டுள்ளார்.

ரஸ்யாவின் வெளியக புலனாய்வுத்துறையான எஸ்.வி.ஆரின்; தலைவர் செர்ஜி நரிஸ்கின் இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பில் தமக்கு மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதனை தற்போது வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் இது பிராந்திய மோதலாக மாறும் சாத்தியங்கள் உள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் இந்த கருத்து என்பது சிரியாவில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கு தனது நவீன எஸ்-400 வகை வான்பாதுகாப்பு ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்குமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

சீனா, கட்டார், எகிப்த்து, சிரியா, மலேசியா, சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையும் அவசரமாக கூடியிருந்தது. அதில் அமெரிக்க செங்கடல் தாக்குதல் தொடர்பில் கவலை தெரிவித்திருந்தது.

ஏனைய நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் தற்போது மிகப்பெரும் சிக்கல்களை அனைத்துலக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. அனைத்துலக சட்டங்களை இஸ்ரேல் மதிக்காததை அனுமதிக்கும் மேற்குலகம் ரஸ்யா மட்டும் அனைத்துலக விதிகளை பின்பற்றவேண்டும் என நிiனைக்கின்றதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

என்றுமில்லாதவாறு மிகப்பெருமளவில் ஈரானில் இருந்து ஆயுதங்கள் ஹிஸ்புல்லாக்களின் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக கொண்டுசெல்லப்பட்டிருந்ததுடன், ரஸ்யாவின் மிகப்பெரும் வெப்பக்கனல்களை கக்கும் ரி.ஒ.எஸ் எனப்படும் பல்குழல் உந்துகணை செலுத்திகளும் ஹிஸ்புல்லாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் ஹமாஸ், சிரிய, ஹிஸ்புல்லா அதிகாரிகளை சந்திக்க ஈரானின் குழுவினர் சென்ற சமயம் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் குழுவினர் இஸ்ரேல் மீதான ஹிஸ்புல்லாக்களின் தாக்குதலை ஒருங்கிணைக்கும் திட்டங்களை வகுப்பதற்கு சென்றார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை ஈரான் வழங்கியதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இருந்தபோதும் இந்த தாக்குதல் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போருக்குள் இழுக்கும் இஸ்ரேலின் தந்திரமாகும் என கூறப்படுகின்றது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவிற்கு எதிராக உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் எதிர்ப்புக்கள் வலுப்பெற்றுவருகையில் இஸ்ரேல் அதனை மடைமாற்றும் முயற்சியாக இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.

ஈரானுக்குளும் இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் அதே சமயம் தற்போது அது தனது உத்திகளை மாற்றி ஈரானிய உயர் அதிகாரிகளை ஈரானுக்கு வெளியில் வைத்து கொல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

Iran general3 ஈரான் சந்தித்த பேரிழப்பு - பதில் தாக்குதல் என்ன? - வேல்ஸில் இருந்து அருஸ்கடந்த வருடம் ஈரானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 100 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள இஸ்ரேல் ஆதரவு ஆயுதக்குழுக்கள் மீது ஏவுகணைத்தாக்குதலை மேற்கொண்டிருந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் ஈரானின் ஆணுவாயுத விஞ்ஞானியை ஈரானின் தலைநகரில் இருந்து 50 கி.மீ தொலைவில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்திருந்தது. ஆனால் தற்போது நிலமை வேறுபட்டது. ஆயுதபலத்தால் மிகப்பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ள ஈரானின் படை பலத்தை அழிப்பது தான் இஸஜரேலின் உத்தியாக உள்ளது.

அதாவது உக்ரைனின் மூலம் ரஸ்யாவின் பலத்தை சிதைப்பது, இஸ்ரேலின் மூலம் ஈரானின் பலத்தை சிதைப்பது> தாய்வானின் மூலம் சீனாவை முடக்குவது தான் தற்போதைய போரின் வியூகங்களாக உள்ளன. ஆனால் இந்த வியூகங்கள் முன்னரை போன்று மேற்குலகத்திற்கு இலகுவானதல்ல என்பதை ஈரானின் பதில் தாக்குதல் விரைவில் உணர்த்தலாம்.