ஈரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட கோபத்தால் வெடித்த மக்கள் போராட்டம், தற்போது 12-வது நாளாகத் தொடர்கிறது. இது ஈரானின் 31 மாகாணங்களிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி முகமை, இந்தப் போராட்டங்களில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 34 போராட்டக்காரர்களும், 8 பாதுகாப்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டதாகவும், 2,270 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
நார்வேயைச் சேர்ந்த ஈரான் மனித உரிமைகள் அமைப்பு, 8 குழந்தைகள் உட்பட குறைந்தது 45 போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
அதே நேரத்தில் ஈரான் அதிகாரிகள் 6 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்,ஈரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் ஆட்சியை வீழ்த்தவும், மறைந்த முன்னாள் ஷாவின் (மன்னர்) மகனும், தற்போது நாடுகடத்தப்பட்டு வசிப்பவருமான ரெசா பஹ்லவி மீண்டும் வர வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.



