ஈராக்கிலுள்ள மொசாட் தலைமையகம் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்

240116095255 02 erbil missiles attack ஈராக்கிலுள்ள மொசாட் தலைமையகம் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்ஈரான் நடத்திய திடீர் தாக்குதலில் ஈராக், சிரியா அதிர்ச்சியடைந்துள்ளன. ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புகழ்பெற்ற உளவு அமைப்பான மொசாட் உளவு அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இந்த உளவு அலுவலகம் குர்திஸ்தானின் அர்பில் பகுதியில் அமெரிக்க தூதரகக் கட்டிடத்தின் அருகே உள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மொசாட் உளவு அமைப்பு ஈரானுக்கு எதிராக உளவுத் தகவல்களை சேகரிப்பதாக நீண்ட நாள் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில் மொசாட் உளவுத்துறை அலுவலகம் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து குர்தீஷ் பிராந்திய அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில், ஈரான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் 4 பேர் இறந்ததாகத் தெரிவித்துள்ளது. இவர்களில் பெஷ்ராய் தியாஷி என்ற உள்ளூர் தொழிலதிபரும் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது. இவர் ரியல் எஸ்டே, பாதுகாப்பு ஏஜென்சி நிறுவனத் தொழில்களை வெற்றிகரமாக செய்துவந்தார். தியாஷியின் அரண்மனை மீதே ஈரான் குண்டு விழுந்துள்ளது.

இதற்கிடையில், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் பாதுகாப்புப் படையான புரட்சிகர காவல் அமைப்புகள் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். ஈரானுக்கு எதிராக உளவு வேலைகளை செய்துவந்த இஸ்ரேலுக்குச் சொந்தமான மொசாட் உளவு அமைப்பின் தலைமையகத்தை தாக்கி அழித்தோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமாணி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.