ஈராக்கிற்கு அடுத்ததாக காணாமல் ஆக்கப்பட்டோர் அதிகமாகவுள்ள நாடு இலங்கை – சுரேஷ்

“கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஈராக்கிற்கு பிறகு அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் உள்ள நாடு இலங்கையாகும். 1980 களிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. இலங்கை அரசால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுமயமாக்குவதை இந்தப் பேரவை ஆதரிப்பதாக தெரிகிறது.”

இவ்வாறு கூறியிருக்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இணைய வழியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சுரேஷ் பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

பெப்ரவரி 22ம் திகதி தொடங்கிய ஐ.நா மானிட உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது. ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் செயற்பாட்டாளர்கள் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு உரையர்றிவருகின்றார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரிவு 3 – அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதத்தில் பிரான்ஸ் தமிழர் பண்பாட்டு அமைப்பின் சார்பாக உரையாற்றிய, சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது உரையில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:

“கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஈராக்கிற்கு பிறகு அதிகமாக காணாமலாக்கப்பட்டோர் உள்ள நாடு இலங்கையாகும். 1980 களிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதிவேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஒரு முடிவும் வரவில்லை. இலங்கை அரசால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இராணுவ மயமாக்குவதை இந்தப் பேரவை ஆதரிப்பதாக தெரிகிறது.

2008 முதல் மே 2009 வரை நடைபெற்ற இறுதி ஆறு அல்லது ஏழு மாதகால இன அழிப்பு போரில் வன்னியில் மட்டும் 1,46,679 இற்கு மேற்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு தகவல் இல்லை. நிறுவனப்படுத்தப்பட்ட கொடுமைபடுத்தும் முகாம்களும், இராணுவ முகாம்களுக்கு அருகில் கொலைக்களமும் உள்ளன. அரசாங்கம் தேசியத்தையும், இறையாண்மையையும், சுயநிர்ணய உரிமையையும் மறுக்கிறது.

தீர்மானம் கொண்டுவர உதவிய உறுப்பு நாடுகளிடம் கீழ்கண்ட விடயங்களை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்: விரைவாக இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை உருவாக்கவேண்டும். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டுசேர்க்கவேண்டும். 4 வது திட்ட வரைவுக்குகீழ் சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டும். வடக்கு, கிழக்கு மகாணங்களை காலனியாக்குவதை நிறுத்தி, இராணுவ மயமாக்கலை தடுத்து நிறுத்தவேண்டும்” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.