இளைஞர்களுக்கு வழிவிடுவோம் – துரைசாமி நடராஜா

இலங்கையின் 10 வது பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலை மையிலான தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்று 159 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படும் நிலையில் மலையகம் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதன் எதிர் விளைவுகள் பல்வேறு மட்டங்களிலும் எதி ரொலிக்கும் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை இவ்வருடத்தில் இரண்டு முக்கிய தேர்தல்களை சந்தித்தது. ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன அவை இரண்டுமாகும். இதனடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க 57,40,179 வாக்குகளைப் பெற்று நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவானார். இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 42.31 வீதமாகும். தேசிய மக்கள் சக்தியின் அலை சூடு தணியுமுன்னே பொதுத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 14 ம் திகதி இடம்பெற்று முடிந்துள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன் றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளதாக ஏற்கனவே ஆரூடங்கள் கூறப்பட்டன. இது தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கட்சி பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கின்றது. இதுவரை இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் கூடுதலான ஆசனம், கூடுதலான தேசியப் பட்டியல் ஆசனம், கூடுதலான தொகுதிகளில் வெற்றி, ஒரு கட்சி பெற்ற கூடுதலான வாக்குகள், ஒரு வாக்காளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் என்று தேர்தலின் சகல பரப்புகளிலும் தேசிய மக்கள் சக்தியே முன்னணியில் இருக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இக்கட்சி பொதுத்தேர்தலில் 68,63,186வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைத்திருக்கின்றது. எனவே ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் 11,23,007 வாக்குகள் குறுகிய காலத்தில் இக்கட்சிக்கு அதிகமாக கிடைத்திருக்கின்றன.  இதற்கு தேசிய மக்கள் சக்தியின் கீழ்மட்ட வேலைத்திட்டங்கள் மிகவும் வலுவானதாக காணப்படுகின்றமையே பிரதான காரணமாகும் என்று கருதப்படுகின்றது.

எரிக் சொல்ஹெய்ம்

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களுக்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அனுரகுமார திசாநாயக்க அல்லது மக்களால் ஏகேடி என அழைக்கப்படும் இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான தேர்தல் வெற்றி பெற்றிருக்கின்றார். பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையில் சிக்கியுள் ளவர்களை மீட்பதற்கான பொருளாதார சீர் திருத்தம் என்பவற்றில் புதிய மக்கள் ஆணை வலுவாகவுள்ளது. தேசிய நல்லிணக்கம், சிறுபான்மை தமிழர்கள் மற்றும் முஸ்லிம் களுக்கான உரிமைகள் உட்பட ஊழலுக்கு எதிராக கடுமையான போராட்டம் என்பன நாட்டில் ஏற்பட்டுத்த வேண்டிய மாற்றங்களை பிரதிபலிக்கின்றது என்று சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கசப்பான அனுபவங்களை வரலாற்றில் சந்தித்த இக்கட்சி இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படும் கட்சியாக மேலெழும்பியுள்ளமை குறித்து உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தேசிய மக்கள் சக்திக்கு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் மாவட்டங் கள்  22 இல் போட்டியிட்டு 21 இல் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே பின்னடைவு கண்டுள்ள மையும் தெரிந்ததேயாகும். இவ்வெற்றி மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மை கட்சி களை நிலைகுலைய வைத்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியால் மலையக கட்சி களின் வாக்கு வங்கியில் கணிசமான சரிவு  ஏற்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் கணிசமான வாக்குகள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அடித்தளமாகியுள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்நிலையில் சமகாலத்தில் மட்டுமன்றி இடதுசாரிக் கட்சிகளை ஏற்கனவே இந்திய வம்சாவளி மக்கள் ஆதரித்துள்ளமையை வரலாறு உணர்த்துகின்றது.

இதனடிப்படையில் இலங்கையில் 1947 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இத்தேர்த லில் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதித்துவம் அதிகரித்தமைக்கு இந்திய வம்சாவளி மக் களே வலுசேர்த்திருந்தனர். இலங்கை – இந்திய காங்கிரஸ் பாராளுமன்றத்துக்கு இத் தேர்தலில் ஏழு பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி இருந்த நிலையில் அது இந்திய வம் சாவளி மக்களின் அரசியல் ஆளுமையை புலப்படுத்தியதாக அப்போது பலரும் பேசிக் கொண்டனர். காங்கிரஸ் போட்டியிடாத தொகுதி களில் தோட்டத் தொழிலாளர்கள் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தனர். இந்நிலையில் 14 தொகுதிகளில் இந்திய தொழிலாளரின் ஆதரவு டன் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

தேர்தலுக்கு பின் இலங்கை – இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருடன் அமர்ந்து முக்கியமான விடயங்களில் இடதுசாரிகளுடன் சேர்ந்து வாக்களித்தனர். இதனால் இனவாதிகள் அச்ச மடைந்தனர். 1947 ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. 95 தொகுதிகளில் 42 தொகுதிகளில் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலைக்கு இந்திய வம்சாவளி மக்களின் எழுச்சி, இம்மக்கள் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவளித்தமை என்பன முக்கிய காரணமாக அமைந்ததெனக் கருதிய ஐ.தே.க. இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை மற்றும் பிரசாவுரிமை என்பவற்றை பறித்தெடுப்பதில் கவனம் செலுத்தி பின்னர் அதில் வெற்றியும் கண்டது. பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன இல்லாததன் காரணமாக இம்மக்கள் எதிர்கொண்ட சவால்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்றுவரை மாறியதாக இல்லை. இது சகல துறைகளிலும் எதிரொலிக்கின்றது.

ஐ.தே.க. பின்னடைவு

இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவளித்ததால் இந்திய வம்சாவளி மக்களை பல துறைகளிலும் நிர்வாணப்படுத்திய ஐ.தே.க. இன்று தேசிய மக்கள் சக்தி என்னும் இடதுசாரிக் கட்சியால் தான் நிர்வாணமாகி இருக்கின்றது. மலையகம் உட்பட நாடளாவிய ரீதியில் போட்டியிட்ட இக்கட்சி மிகவும் குறைந்தளவு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றிக் கொண்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான் மட்டுமே வெற்றி பெற்றுள்ளமை நோக்கத்தக்கதாகும். ஒரு காலத்தில் ஐ.தே.க.வின் கோட்டையாக விளங்கிய இம்மாவட்டத்தில் இக்கட்சிக்கு 66,234 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 0.59 வீதமாகும். மலையக மக்களுக்கு இழைத்த கொடுமையின் எதிரொலியே  ஐ.தே.க.வின்  பின்னடைவுக்கு காரணமாகுமென்று பலரும் பேசிக் கொள்வதையும் இப்போது கேட்க முடிகின்றது.

இம்முறை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமானுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இவர்கள் கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டி லும் குறைந்தளவு வாக்குகளையே பெற்றுக் கொண்ட மையும் நீங்கள் அறிந்ததாகும். அத் தோடு இம்மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஷ்வரன், உதயகுமார் ஆகியோரின் வெற்றி யும் சாத்தியப்படாமல் போனது. இதேவேளை நுவரெலியா மாவட்டத் தில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வேட்பாளராக முன் னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரனின் மகள் அனுஷா சந்திரசேகரன் காணப்பட்டார். எனினும் மைக் சின்னத்தில் (ஐக்கிய ஜனநாயகக் குரல்) போட்டியிட்ட இவ ரால் வெற்றி பெற முடியவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் சில வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை காட்டிலும் சிங்கள மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். எனினும் இதில் ‘மண் விழுந்த’ நிலையில் சிங்கள மக்களில் அதிகமானோர் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கே தமது ஆதரவை வழங்கி இருந்தனர்.

பதுளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர்களான வடிவேல் சுரேஷ், அ.அரவிந்தகுமார் ஆகியோர் தோல்வி கண்டுள்ளனர். இதே வேளை கண்டி மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட வேலு குமார் சுமார் ஏழாயிரம் வாக்குகளைப் பெற்று தோல்வியடைந் திருக்கின்றார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக கடந்தகால பொதுத்தேர்தலில் போட்டியிட்டு இரண்டு தடவைகள் பாராளுமன்றத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இம்மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர் பிரசாத்தும் குறைந்தளவு வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்திருக்கின்றார். இவர் பெற்றுக் கொண்ட வாக்குகள் சுமார் 3000 ஆகும். இந்நிலையில் ஏற்கனவே இ.தொ.கா.வில் அங் கம் வகித்த பாரத் அருள்சாமி அக்கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பட்டியலில் கண்டி மாவட்ட வேட்பாளராக களமிறங்கினார். எனினும் அவரும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

ஷோபனா சொல்வதென்ன?

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற நான்கு மலையக வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று இம்முறை பாராளுமன்றம் செல் கின்றனர். பதுளை மாவட்டத்தில் இருந்து   கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் ஆகியோர் பாராளுமன்றத்துக்கு செல்லும் நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணன் கலைச்செல்வியும்,இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து சுந்தரலிங்கம் பிரதீப் என்ற இளைஞரும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நீண்டகால இடைவெளியின் பின்னர் இரத்தினபுரி மாவட் டத்திற்கு ஒரு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித் துவம் கிடைத்துள்ளமை தொடர்பில் இம்மாவட்ட மக்கள் தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி யுள்ளனர். இதேவேளை பாராளுமன்றத்தில் மலையக பெண் பிரதிநிதித்துவம் என்பது நீண்ட காலமாகவே ஒரு கனவாகவே இருந்தது. இந்த கனவை இப்போது அம்பிகா, கலைச்செல்வி ஆகியோர் நனவாக்கி இருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கலைச்செல்வி 33,346 வாக்கு களையும், தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் அம்பிகா 58,201 வாக்கு களைப் பெற்று பாராளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கின்றனர். இது மலையக பெண்களின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ஆர்.ஷோபனாதேவி குறிப்பிடுகின்றார். மலையகப் பெண்களின் வாழ்வில் பல்வேறு அபிவிருத்தி ஏற்படுவதற்கு இது உந்துசக்தியாக அமையும் என்பதும் ஷோபனாதேவியின் கருத்தாகவுள்ளது.

முடிவாக அரசியல் என்பது ஒரு குறிப் பிட்டவர்களுக்கே உரித்தான சொத்து அல்ல. இது பன்முகப்படுத்தப்படுவதோடு சகலரும் அரசிய லில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அந்த வாய்ப்பினை இப்போது தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொடுத்திருக்கின்றது. பரம்பரை அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் இத்தேர்தலில் காணாமல் போயிருக்கின்றார்கள். 176 புதிய வர்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு உள்ளீர்க்கப்பட்டிருப்பது உண்மையில் மாற்றத்திற்கான அத்திபாரமாகவே அமையும் என் பதையும் மறுப்பதற்கில்லை. சமகால அரசியல் சூழ்நிலைகளையும் முன்னெடுப்புக்களையும் மலையக அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். எனினும் அவர்கள் இதனை விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. பிழைப்பூதியம் கருதி அரசியலுக்குள் நுழைகின்ற நடவடிக்கை இனியும் சாத்தியப்படாது. அத் தோடு வாரிசு கலாசாரத்தை மையப்படுத்தி செயற்படுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். மலையக அரசியல்வாதிகளின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் மக்களி டையே அதிகமான அதிருப்தி காணப்படுகின்றது. இதனை விளங்கிக் கொண்டு அவர்கள் முன்செல்ல வேண்டும். மலையக அரசியல் இப்போது குப்புற விழுந்துவிட்டது. இதற்கு காரணகர்த்தாக்களாக மலையக அரசியல்வாதிகளே விளங்குகின்றனர். எனினும் ‘ குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக’ இவர்களின் போக்கு அமைந்திருக்கின்றது. தான் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற நோக்கில் சமூக சிந்தனை இல்லாது சில மலையக அரசியல்வாதிகள் செயற்படுகின்றார்கள். இவர்கள் சமூகத்தின் சாபக்கேடுகள் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. மக்களை மயக்கப் படுத்துவதாலும், வேறு சில அற்ப சலுகைகளை வழங்குவதாலும் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னமும் சில மலையக அரசியல்வாதிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது அவர்களின் அறியாமையாகும் என்பதைத்தவிர வேறொன்று மில்லை.

நாற்காலிகளை சூடேற்றுதல்

கடந்த பொதுத் தேர்தலின்போதும் அது நடந்தேறி இருக்கின்றது. இவையெல்லாம் புத்தி சாலித்தனமான செயற்பாடுகள் ஆகாது. மலையக சமூகம் இப்போது கல்விமையச் சமூகமாக உருவெடுத்து வருகின்றது. இளைஞர்கள் பல்துறை ஆளுமை கொண்டவர்களாக விளங்கு கின்றார்கள். நீங்கள் பாராளுமன்றம் சென்று சாதிக்கமுடியாதவற்றை அவர்கள் சாதிக்க தயாராக இருக்கின்றார்கள். உங்களைப் போல் வெறுமனே நாற்காலிகளைச் சூடேற்றவும், வயிற்றுப் பிழைப்புக்காக, பந்தாவுக்காக அரசியல் செய்வதற்கும் இன்றைய மலையக இளைஞர்கள் தயாராக இல்லை. சமூகத்தின் வலியை நன்றாக உணர்ந்த அவர்கள், இச் சமூகத்தை மேலெழும்பச் செய்வதற்கு, தம் மாலான உச்சகட்ட பங்களிப்பினை வழங்க அவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.எனவே அவர்களுக்கு வழிவிட்டு, இதுகாலவரை பரம்பரை பரம்பரையாக அரசியலில் ஊறித் திளைத்தவர்கள் விலகிக்கொள்ள வேண்டும்.அது மலையக சமூகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்.பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் இருந்து மலையகமும் விடுபட வேண்டும்.இது அவர்க ளின் முன்னேற்றத்திற்கு வழி சமைப்பதாக அமையும் என்பதே உண்மையாகும்.