இலங்கை அரசு கலாசார படுகொலையை திட்டமிட்டு செயற்படுத்துகின்றது – பேராசிரியர் மணிவண்ணன்

யாழ். நூலக எரிப்பு – தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய அறிவு, காலாசாரம் என்பவற்றுடன், மக்கள் தங்கள் இருப்பாகப் பார்க்கின்ற நுாலகங்களை எரிப்பது என்பது; உலக அரங்கில் பல நாடுகளில் இன அழிப்பிற்கு ஓர் முக்கியமான அடையாளமாக கலாசார அழிப்பு பார்க்கப்படுகின்றது என சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள்  சுட்டிக் காட்டியுள்ளார்.

இது குறித்து ‘இலக்கு’ செய்தி நிறுவனத்திற்கு மேலும் அவர் தெரிவிக்கையில்,

“யாழ்.நூலகம், தமிழினத்தின் மையம், இருப்பு என்பது மட்டுமல்லாமல், அடையாளமும் கூட. அத்தகைய ஓர் களஞ்சியமாக விளங்கிய ஓர் நூலகத்தை இலங்கைப் பேரினவாதம், அதன் எதிர்ப்பு அலையாக அழிப்பதற்கு முற்பட்டது ஓர் முழுமையன கலாசாரப் படுகொலையாகும்.

அடிப்படையாகவே யாழ். நூலக அழிப்பு என்பது கூட, இலங்கை அரசு எந்த நேரத்திலும் தமிழினத்திற்கு எதிராக செய்யக் கூடிய  பிரதானமான கருவியாக – காலாசார இன அழிப்பின் அடையாளமாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.

மேலும் பிரதான நினைவுச் சின்னங்கள், மக்களின் வாழ்வாதாரம், இவை அனைத்துமே; ஓர் சமூகத்தினுடைய கலாசாரத்தின் அடையாளமாகவே நூலகங்கள் பார்க்கப்படுகின்றது.

நூலகங்களில் இருக்கின்ற எழுத்துக்கள் மக்களின் சரித்திரத்தை பிரதிபலிக்கும். எனவே மக்களின் சரித்திரத்தை அழிப்பதற்கான ஓர் முனைப்பே  யாழ். நூலக எரிப்பு.

இலங்கை அரசாங்கம் கடந்த 60 மற்றும் 70களில்  நடத்திய பல இனப் படுகொலைகளுக்கான அத்தியாயங்களில் யாழ். நூலக அழிப்பு பிரதானமாகப் பார்க்கப்படுகின்றது.

அதற்கு பின்பும் கூட தொடர்ந்து இந்த கலாசார ரீதியான போரின் அடிப்படையில் மக்களை அழிப்பது, அவர்களுடைய சரித்திரத்தை மறைப்பது அதோடு மட்டுமல்லாது வரலாற்று தொல்லியலையும்,  சின்னங்களையும், குறிப்புக்களையும் அழிப்பது என்று இலங்கை அரசாங்கம் 2009ஆம் அண்டு போருக்கு பின்பும் அதை செயற்படுத்தி வருகின்றது.

நூலகம் என்பது ஓர் கட்டிடத்திற்குள் வைக்கப்படுகின்ற வரலாற்று சான்றுகள், எழுத்துக் குறிப்புக்கள், அறிவுக் களஞ்சியங்கள். ஆனால் திறந்த வெளி சமூகத்தில் இருக்கின்ற சரித்திர அடையாளங்களை அழிப்பதிலும், குறிப்பாக 2009ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை அரசாங்கம் பெரும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

உலக நாடுகளுக்கு யாழ். நூலக எரிப்பு நாளை நினைவுபடுத்துவதன் ஊடாக கலாசாரப் படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட ஓர் சமூகமாகவும், இனப் படுகொலைக்கு உட்படுத்தப்பட்ட ஓர் சமூகமாகவும் நம்முடைய நீதி வேண்டுதலில் இத்தகைய மிகப்பெரிய அர்ப்பணிப்புக்களை இழக்க வேண்டியதும், அதை திரும்பப் பெற வேண்டியதும் நம்முடைய ஓர் வரலாற்றுப் போராட்டமாகும்.

எனவே நாம் இனப்படுகொலைக்கும் கலாசாரப் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட ஓர் சமூகம். அதில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு நீதி தேடுதலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்“. என்றார்