இலங்கையில் புற்று நோயாளர்கள் அதிகரிக்க காரணம் என்ன? – மருத்துவர் . சி.யமுனாநந்தா கருத்து

இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது குறித்து மருத்துவர் . சி.யமுனாநந்தா விளக்குகையில்,

பெரும்பாலான புற்று நோயாளர்கள் மிகவும் பிந்திய நிலையிலேயே இனம் காணப்பட்டு வருகின்றனர். பிந்திய நிலையில் இனம் காணப்படும் நோயாளர்கள் குணமடையும் வீதம் குறைவாகும்.

மேலும் இது பெரும் பொருளாதார சுமையினை ஏற்படுத்துகின்றது. ஆரம்ப நிலைகளில் புற்று நோயினைக் கண்டறிந்தால் சிகிச்சை வெற்றியளிக்கும் வீதம் அதிகமாகும், எனவே புற்று நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக மருத்துவ ஆலோசனை வழங்களில் முறையான நடைமுறை அவசியமாகும். புற்று நோயாளர்கள் பல தடவைகள் படிப்படியான நோய் அறிகுறிகளுடன் வைத்திய சேவையை நாடிய போதிலும் பிந்திய நிலையிலேயே கண்டறியப்படுகின்றனர்.

(விசேட சேவை வழங்கல்) அமைப்பாக புற்று நோயினை ஆரம்ப நிலையில் கண்டறியும் நிலையம் வைத்தியசாலைகளில் இயங்குதல் அவசியமாகும். இதன் மூலம் வெளி நோயாளர் பிரிவில் ஒரே தடவையில் குறுகிய நேரத்தில் மருத்துவப் பரிசோதனையினை மேற்கொள்ளலாம்.

புற்று நோயினை ஆரம்ப நிலையில் இனம் காணும் சிகிச்சை நிலையத்தினால் பொதுவான புற்று நோய்களான

வாய்ப் புற்று நோய்
மார்பகப் புற்று நோய்
கருப்பைப் புற்று நோய் ஆகியவற்றைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இலங்கையில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்று நோய்களில் ஆண்களில் கண்டறியப்படும் புற்று நோய்களில் வாய்ப் புற்று நோய் 16 வீதம் ஆகவும் பெண்களில் கண்டறியப்படும் புற்று நோய்களில் மார்பகப் புற்று நோய் 25 வீதம் ஆகவும் காணப்படுகின்றது. தைரோயிட் புற்று நோய், கருப்பைக் கழுத்துப் புற்று நோய் என்பன சுமார் 10வீதமாகக் காணப்படுகின்றன.

மார்பகப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் கருப்பைக் கழுத்துப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் வாய்ப் புற்று நோயினை ஆரம்பத்தில் கண்டறியவும் இலங்கை சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஒன்பது மாவட்டங்களிலும் புற்று நோயினை ஆரம்ப நிலையில் கண்டறியும் நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்கு உரிய புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறியும் மருத்துவ ஆலோசனைப் பிரிவு யாழ் போதனா வைத்தியசாலையிலும் இயங்கவுள்ளது.

புற்று நோயினை கண்டறிதலில் நோய் அறிகுறி அற்றவர்களில் விசேட பரிசோதனைகள் குறிப்பாக கருப்பைக் கழுத்துப் புற்று நோய் , மார்பகப் புற்று நோய் என்பனவற்றுக்கு மேற்கொள்ளப்படுகின்றது. நோய் அறிகுறி உடையவர்களில் விசேடமாக குருதிப் பரிசோதனை, கதிர்ப் படங்கள், மாதிரிக் குழியவியல், இழைவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

புற்று நோய் இறப்புக்களில் 30 – 50வீதம் தவிர்க்கக் கூடியவை. மேலும் ஆபத்தான பழக்கவழக்கங்களை விலத்துவதனால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் குறைவடையும். குறிப்பாக வெற்றிலை, பாக்கு மெல்லுதல், புகைப் பிடித்தல், மதுபானம் பாவித்தல் என்பன புற்று நோய்க்கு இட்டுச் செல்லும். அடுத்து ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், உடற் பயிற்சிகளும் சரியான உடல் நிறையைப் பேணுதலும் புற்று நோய் எம்மை அணுகாது காக்கும்.

உடலில் ஏற்படும் பரம்பரையலகு விவகாரங்கள் சில வேளைகளில் புற்று நோயினை ஏற்படுத்தலாம். மேலும் நமது பாவனையில் உள்ள இரசாயன நச்சுக்களும் புற்று நோயினை ஏற்படுத்தலாம்.

பொதுவான புற்று நோய்களாவன:

1. நுரையீரல் புற்று நோய்
2. மார்பகப் புற்று நோய்
3. உணவுக் கால்வாய்ப் புற்று நோய்
4. ஈரல்ப் புற்று நோய்
5. சுதையி புற்று நோய்
6. சிறு நீரகப் புற்று நோய்
7. கருப்பைப் புற்று நோய்
8. சூலகப் புற்று நோய்
9. மூளைப் புற்று நோய்
10. குருதிப் புற்று நோய்
11. முன்னிற்கும் சுரப்பிப் புற்று நோய்
12. என்புப் புற்று நோய

புற்று நோய்க்கான சிகிச்சையில் புற்று நோய் இழையங்களை அகற்றும் சத்திர சிகிச்சை, புற்று நோய்க் கலங்களை அழிக்கும் மருந்து மாத்திரைகள், ஓமோன் சிகிச்சைகள், கதிரியக்க சிகிச்சைகள் என்பன தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றுக்கு மேலாக உளவள ஆற்றுப்படுத்தல், வலி நீக்க சிகிச்சைகள், ஆன்மீக ஆற்றுப்படுத்தல் என்பனவும் இன்றியமையாதனவாகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.