இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்ட மூவர் இரத்த உறைவுச் சிக்கலால் உயிரிழப்பு

இலங்கையில் அஸ்ட்ராசெனேகா கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் மூன்று பேர் இரத்தம் உறைவு தொடர்பான சிக்கலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கும்போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் அஸ்ட்ராசெனேகா கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஆறு பேரிடையே இரத்தம் உறைவு தொடர்பான சிக்கல் பதிவானது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பின்னர் உயிரிழந்துவிட்டனர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அஸ்ட்ராசெனேகா கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பலர் இரத்த உறைவுச் சிக்கலால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தடுப்பூசி பாவனையை இடைநிறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.