இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள வெளிநாட்டுக் குழு

30 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழு நேற்று முதல் இலங்கையின் ஒன்பது சகல மாகாணங்களிலும் தேர்தல் கண்காணிப்புப் பணியை ஆரம்பித்தது.

நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணித்து வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை என்பவற்றை அவதானிப்பதே ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் முக்கிய பணியாக அமையும் என இக்குழுவின் பிரதி தலைமை தேர்தல் கண்காணிப்பாளர் திமித்திரா லோன்னு தெரிவித்தார்.

தங்களின் அவதானங்களை அவ்வப்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பதே தமது பிரதான நோக்காக அமையும். தேர்தலுக்கு முந்திய வன்முறை பற்றிய விடயங்கள் மற்றும் ஏனைய அவதானிப்புகள் என்பவற்றை தெரிவிப்பது மட்டுமே தமது கடமையாகும் எனவும், இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பது தமது பொறுப்பல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாங்கள் நடுநிலையாகவும், பக்க சார்பின்றியும் தேர்தல் நடைமுறையில் தலையிடாது ஒரு சுயாதீன அமைப்பு என்ற ரீதியில் செயற்படும்.

தேர்தல் தொடர்பாக சுருக்கமான குறிப்பை தேர்தல் ஆணைக்ழுவின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும். தேர்தல் நிர்வாகம் வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரச்சார நடவடிக்கை, அரச நிறுவனங்களின் பங்களிப்பு, சிவில் சமூகம், வாக்காளர் பதிவு, வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவித்தல், சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களின் பணி என்பன தொடர்பில் நாங்கள் அவதானிப்போம்.

நேற்று முதல் சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு 4பேர் கொண்ட குழு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது. எமது பிரதான தேர்தல் கண்காணிப்பாளரான மரிசா மெத்தியஸ் தமது தேர்தல் அவதானிப்பு குறித்து கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்துவார்.

அத்துடன் எமது 30 தேர்தல் கண்காணிப்பாளர்கள் பலதரப்பட்ட இலங்கை தேர்தல் அதிகாரிகளை அவர்களுக்கு உரிய இடங்களில் சந்திப்பார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 2015இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தாம் வழங்கிய 26 பரிந்துரைகளில் மூன்று பரிந்துரைகள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் சில பரிந்துரைகள் பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.