இலங்கையில் எச்சரிக்கை மீறினால் சட்ட நடவடிக்கை!

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொது மக்கள் அதிகளவில் கூடும் பொது மற்றும் தனியார் நிகழ்வுகளையும் கூட்டங்களையும் நடத்துவதற்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சகல பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கொரோன்னா வைரஸ் தொற்றை உலகளாவிய ரீதியில் பரவும் தொற்று நோயாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையில் அந்த தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் படி, தனிமைப்படுத்தப்படும் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபரையும் பிடியாணையின்றி கைது செய்வதற்கு நடவடிக்கை எடக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 262, தண்டனைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் உயிருக்கு ஆபத்தான நோய் பரவ வழிவகுக்க கூடிய அலட்சிய செயல்கள் மற்றும் பிரிவு 263 இல் விபரிக்கப்பட்டுள்ள உயிருக்கு ஆபத்தான நோய் பரவலுக்கு வழிவகுக்கும் அதேபோல் தீங்கிழைக்கும் செயல்களுக்கு மற்றும் தனிமைப்படுத்தப்படுவதற்கு கீழ்படியாமை பேன்றவை தவறானதாகும்.

குறித்த குற்றங்களுக்காக பிடியாணை இல்லாமல் ஒருவரை கைது செய்வதற்கான இயலுமை உள்ளது.

அந்த விதிகளின் கீழ் ஒரு நபர் கைது செய்யப்பட்டால், அவருக்கு பிணை வழங்குவதற்கு ஏதுவான சட்டத்தின் விதிகள் பொருந்துவதோடு, பிணை வழங்கல் சட்டத்தின் 6-1 பிரிவின் கீழ் ஒருவர் பொது மக்கள் சமாதானத்திற்கு சீர்குழைக்கும் வகையில் செயற்பட்டு அவருக்கு பிணை வழங்க முடியாது என சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினால் அவருக்கு பிணை வழங்காது நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியும்.

இந்தச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின்படி நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்காமல் விளக்கமறியலில் வைக்க முடியும்.

மேலும், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 107 (1) இன் படி, ஒவ்வொரு சமாதான அதிகாரியும் எந்தவொரு குற்றவியல் குற்றத்துடனும் சம்பந்தப்படலாம்.

ஆனாலும் ஒருவர் தன்னால் முடிந்த பலத்தை பயன்படுத்தி அதனை விலக்கிக்கொள்ள முடியும்.

எனவே ஒருவர் தனிமைப்படுத்தும் சட்டத்தை மீறினால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இலங்கையில் 10 கொரன்னா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் விசேட வைத்திய கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.