இலங்கையில் எகிறிச் செல்லும் கொரோனா – நேற்று மாத்திரம் 1,466 பேருக்கு தொற்றியது

இலங்கையில் நேற்று மாத்திரம் 1,466 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படத் தொடங்கிய நாளிலிருந்து அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது. நேற்றுக் காலையிலிருந்து மாலை வரை 988 தொற்றாளர்களும், மாலையிலிருந்து இரவு வரை 478 தொற்றாளர்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நாட்டின் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 953 ஆக எகிறியுள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் பட்டியலில் நேற்றும் 6 பேர் பதிவாகியுள்ள நிலையில் நாட்டில் கொரோனாவால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 661 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான 9 ஆயிரத்து 209 நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோயாளர்களின் சடுதியான அதிகரிப்பால் சிகிச்சை நிலையங்கள் நிரம்பி வழிகின்றன என்று சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.