இலங்கையில் இருந்து பெருமளவில் வெளியேறும் மக்கள்

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ள இலங்கையில் தொழில்வாய்ப்புக்கள் அற்ற நிலையில் பொருமளவான மக்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த வருடத்தில் 150,000 பேர் நாட்டைவிட்டு வெளியேறியதுடன், 600,000 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த வருடம் 117,952 பேர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 63 விகிதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் இலங்கையில் பணவீக்கம் 66.7 விகிதம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை 82.5 விகிதம் அதிகரித்துள்ளது. உலகில் உணவுப் பொருட்களின் விலை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் இளைய சமுதாயமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வேலையற்றோரின் எண்ணிக்கை 19.2 விகிதமாக அதிகரித்துள்ளது. அவர்களில் 15 தொடக்கம் 24 வயதுள்ளவர்களே அதிகம்.