இலங்கைத் தீர்மானத்தின் மீதான மனிதவுரிமைச் சபை உறுப்பு நாடுகளின் நிலைப்பாடும் அதன் இறுதி உள்ளடக்கமும்

எதிர்வரும் வாரங்களில் இலங்கைத் தீர்மானத்தின் மீதான மனிதவுரிமைச் சபை உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பொதுவாக உறுப்பு நாடுகள் பிற நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்து எவ்வாறு தமது முடிவுகளை எடுக்கவுள்ளார்கள் என்பதனை அறிந்துகொள்வது அவசியமானது.

இம்முறையும் மனித உரிமைச் சபையில் கடந்தகாலங்களைப் போலவே இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புத் தொடர்பான விடயத்தில் நாடுகள் கொள்கையளவிலும், பூகோளப்பிராந்திய அளவிலும் வேறுபட்டு நிற்கின்றன.

பொதுவாக நாடுகள் தொடர்பான தீர்மானங்களுக்கு (country specific resolutions) பண்பாட்டு விழுமிய, அரசியல் மற்றும் பூகோள ரீதியில் பிரிந்துபட்டுநிற்கும் பூகோள வடக்கு தெற்கு பிரிவு (global south and north divide) ஓர் முக்கிய காரணியாக உள்ளது.

பூகோள தென்பிரிவு நாடுகளான ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க நாடுகள் பூகோள வடக்கு நாடுகளான மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நாடுகளை மையப்படுத்தி நிற்கும் தீர்மானங்களை எதிர்க்கும் நிலையே தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

பொதுவாக இராஐதந்திர நடைமுறைகள் மூலமாக சிறிய ஆபிரிக்க, ஆசிய மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளை பொருளாதார அரசியல் வலுவைப்பயன்படுத்தி மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, ஐக்கிய அமெரிக்கா தமதுபக்கம் இழுக்கும் பேரம் பேசும் அழுத்தம் பிரயோகிக்கும் திரைமறைவுச் செயற்பாடுகைளை அவதானிக்க முடியும்.

வலுமிக்க நாடுகளான சீனா, ரஸ்யா மற்றும் இந்தியா பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாடுகளை மையப்படுத்தி கொண்டுவரும் தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துநிற்கும்.

இது அவர்களுடைய அரசியல் வெளியுறவுக் கொள்கை சார்ந்த முடிவுகளின் நீட்சியாக உள்ளது. குறிப்பாக சீனா பிற நாடுகளின் உள்ளக அரசியல் சூழலில் தலையிடுவதற்கு எதிரான போக்கினைக் கொண்டுள்ளது.

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பான விவாதத்தின் போது சீனப் பிரதிநிதி திரு சென் சூ, மனித மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அரசியலின் இரட்டை நிலைப்பாடுகளையும் மனித உரிமை அரசியல்மயமாக்கப்படுவதையும் மனித உரிமைகளை மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதனை எதிர்த்து தனது கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை ரஸ்யா, வட கொரியா, சிரியா, ஈரான், பாகிஸ்தான் நாடுகளும் மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தன. இலங்கைத் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு பிராந்திய அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாக அயல் நாடுகளுக்கு முதன்மை கொடுப்பது என்ற வெளியுறவுக் கொள்கையும் (neighbours first policy) பூகோள அரசியல் அடிப்படையில் இலங்கையின் சீனா தொடர்பான சார்பு நிலைப் போக்கு எனும் இரு காரணிகளும் முக்கியம் பெறுகின்றன.

எனினும் பூகோள அரசியல் நிலையில் நோக்கும் போது கடந்தவாரம் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்துசமுத்திரப்பிராந்தியத்துக்கான கூட்டுச் செயலகத்தை கொழும்பில் அமைத்துள்ளன (Maritime Joint Secretariat). பூகோள அரசியல் ரீதியாக இம்முடிவானது தற்போது இந்தோ பசுபிக் பிராந்தியம் தொடர்பாக நடைபெற்று வரும் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் யப்பான் ஆகிய நான்கு நாடுகளின் உச்சிமாநாட்டின் (Quad Summit) பின்னணியில் முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும் சிறீலங்கா தற்போது இலங்கை கொழும்புத் துறைமுகத்தின் மேற்குப் பகுதியை West Container Terminal (WCT) இந்திய யப்பான் நாடுகளுடனான அபிவிருத்தித் திட்டத்துக்கு கையளிக்க இணக்கம் nதிரிவித்திருப்பதும் முக்கிய காரணியாக கொள்ளப்பட வேண்டும். இது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியை விட மூலோபாய முக்கியத்துவம் குறைந்ததெனினும் பூகோள அரசியல் மற்றும் இராஐதந்திர ரீதியில் முக்கிய நகர்வுகளாக அமைந்துள்ளன.

இந்திய சார்பான இப்பூகோள அரசியல் நகர்வுகள் இலங்கைத் தீர்மானத்தை பலவீனப்படுத்துமளவுக்கும் தாக்கம் செலுத்தும் காரணிகளாகக் கொள்ள முடியும்.

எனவே இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து வாக்கெடுப்பில் இந்தியா தீர்மானத்துக்கு எதிராகவோ அல்லது வாக்களிக்காது விலத்தி நிற்கும் நிலைப்பாட்டையோ எடுக்கும் தன்மை கூடுதலாகக் காணப்படுகின்றது.

இற்றை வரைக்கும் தேசிய மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து இங்கைக்கும் இந்தியாவுக்கும் தேசிய பாதுகாப்புச் சபை மட்டத்தில் (National Security Council) தொடர்ச்சியாக பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே இந்தியா ருடே உடனான பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியிருந்தார்.

அதேவேளை கொலம்பகே இந்தோ பசுபிக் பிராந்திய பூகோள நகர்வுகளையும் சக்திமிக்க நாடுகளின் மனிதவுரிமைச் சபை தொடர்பான செயற்பாடுகளையும் வெளிப்படையாகவே இணைத்துக் கதைத்திருந்தார்.

இது மீளவும் மனிதவுரிமைச் சபைச் செயற்பாடுகள் குறிப்பாக இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உள்ளடக்கமும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் இந்தோ பசுபிக் பிராந்திய பூகோள அரசியல் நலன்களுடன் தொடர்புபட்டு நிற்பதைத் தெளிவாகக் காட்டிநிற்கின்றது.

இது குறித்து கொலம்பகே இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்தும் அங்கு பிராந்திய உலக வலுமிக்க நாடுகளின் செயற்பாடுகளையும் குறித்துப் பேசுகையில் மூலோபாயப் போட்டி, மூலோபாய ஒன்றிணைவு மற்றும் மூலோபாய நெருக்கடி எனும் பதங்களைப் பிரயோகித்திருந்தார் (strategic competition, strategic convergence and strategic dilema). இங்கு தமிழ் மக்கள் சர்வதேச உறவுகளில் மேலைத்தேய நாடுகளின் பொருளாதார அரசயல் நலன்களைப் பேணும் தாராளவாத உலக ஒழுங்கின் நீட்சியான (extension of liberal democcartic trend)              மனித உரிமை விடயங்களானது தவிர்க்க முடியாதவகையில் பூகோள அரசியல் நலன்களுடன் இணைந்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதன்பொருட்டே இலங்கை விடயமானது அழுத்தம் பிரயோகிக்ககும் ஓர் கருவியாக மேலைத்தேய நாடுகளால் தொடரச்சியாக ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்து பேணப்பட்டுவருகின்றது.

இதற்கு வெளியே உள்ள சர்வதேச அரங்கிற்கு இலங்கை விவகாரத்தை கொண்டுபோவதற்கு தற்போதைக்கு இந்நாடுகள் விரும்பாதிருப்பதைக் காணமுடிகிறது. இது குறித்து தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரித்தானியாவின் அமைச்சர் அகமட்டின் (LORD (TARIQ) AHMAD OF WIMBLEDON, Minister of State for South Asia and the Commonwealth)  கடிதம் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

தற்போதைய நிலையின் பின்னணியில் ஆபிரிக்க நாடான மலாவி தவிர்ந்த ஏனைய ஆசிய ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் பெரிதும் சிறிலங்காவை ஆதிரித்து நிற்கும் அதேவேளை இணை ஆதரவாளர்களாக (co-sponsors)  இதுவரை பின்வரும் நாடுகள் Core Group ஆதரவு நாடுகளுடன் இணைந்து இலங்கைத் தீர்மானத்துக்கு அதரவு நிலைப்பாட்டை எடுத்ததுள்ளன:Main sponsors; United Kingdom, Canada, Germany, Malawi, Motenegro, North Macedonia Co-sponsors; Albania, Australia, Austria, Belgium, Bulgaria, Croatia, Cyprus, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Greece, Ireland, Italy, Luxembourg, Malta, Netherlands, New Zealand, Norway, Poland, Portugal, Romania, San Marino, Slocakia, Slovenia, Spain, Sweden, Switzerland, United States of America.

எனவே இலங்கைத் தீர்மானம் குறித்த உள்ளடக்கமும் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவிருக்கும் அது குறித்த வாக்கெடுப்பும் தீர்மானிக்கப்படுவது மனித உரிமைகள் குறித்தான மேற்குலகத்தின் அறம் சார்ந்த நம்பிக்கைகளால் அல்ல என்பதையும், பூகோள அரசியல் நலன்களும் பூகோளப் பிராந்திய அளவில் பிரிந்துபட்டு நிற்கும் மனித உரிமை உறுப்பு நாடுகிளின் அரசியல் நிலைப்பாடுகளுமே செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக இருக்கும் என்பதனையும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆக்கம்: கணநாதன்

Master of International Relations,

Geneva School of Diplomacy and International Relatio