இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிதியை வழங்க ஐ.எம்.எப் திட்டம்

இந்த வாரம் மொறோக்கோவில் இடம்பெற்ற பேச்சக்களை தொடர்ந்து இலங்கைக்கு இரண்டாவது கட்ட நிதியான 334 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனைத்துலக நாணய நிதியம் முன்வந்துள்ளது.

இது தொடர்பில் இறுதியான முடிவுகள் எட்டப்படாததால் தனது பெயரை குறிப்பிடவேண்டாம் என இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். இன்னும் சில விடையங்களில் இணக்கப்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. அவை எட்டப்பட்டதும் எதிர்வரும் சில நாட்களில் நிதி இலங்கைக்கு வழங்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை குறைக்கும் முகமாக கடன் மறுசீரமைப்பை வழங்குவதற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த வங்கி 4.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன் தவணையை மறுசீரமைத்துக்கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சு கடந்த புதன்கிழமை (11) தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த முடிவு மிகப்பெரும் முன்னேற்றம், இந்த நடவடிக்கை மூலம் இலங்கை அனைத்துலக நாணயநிதியத்தின் இரண்டாவது தவணைப் பணமான 334 மில்லியன் டொலர்களை பெறமுடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.